சென்னை மெட்ரோவில் பயணித்தால் ரூ2000 பரிசு; இப்பவே கிளம்புங்க பரிசுகளை அள்ளுங்க!
சென்னை மெட்ரோ ரயிலில் அதிகம் பயணம் செய்யும் பயணிகளுக்கு தலா ரூபாய் 2000 மதிப்புள்ள பரிசு பொருளை வழங்கும் திட்டம் தற்போது துவங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலை மக்கள் அதிகம் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னையில் முக்கியமான வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாகவும் அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் செல்ல ஒரு வசதியான போக்குவரத்தாக இருக்கிறது. இதை தான் சென்னை மக்கள் பலர் இதை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மெட்ரோ நிர்வாகம் சென்னை மக்கள் மத்தியில் இந்த மெட்ரோ பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு படியாக தற்போது சென்னை மெட்ரோவை அதிகம் பயன்படுத்தும் பயணிகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்குவிக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக ஒரு மாதம் முழுவதும் அதிக அளவில் சென்னை மெட்ரோ ரயிலை பயன்படுத்தியவர்களை கண்டறிந்து முதல் 10 பயணிகளுக்கு தலா ரூபாய் 2000 விதம் பரிசு பொருட்களை வழங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் முதல் கணக்கிட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் சென்னை மெட்ரோவில் அதிகம் பயணித்த மாதம் தலா 10 பயணிகளை கண்டறிந்து மொத்தம் 30 பயணிகளுக்கு ஷெனாய் நகர் மெட்ரோ அருகில் உள்ள திரு.வி.க பூங்காவில் வைத்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 30 பேருக்கு ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டது.
இப்படியாக மக்கள் கவனத்தை ஈர்த்து அவர்களை சென்னை மெட்ரோ ரயிலை அதிகம் பயன்படுத்த வைக்க தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் சென்னை மெட்ரோ நிர்வாகத்திற்கு அதிகமான வருமானம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க மிக முக்கியமான வழி இந்த சென்னை மெட்ரோ தான்.
மக்கள் தனித்தனியாக வாகனங்களில் பயணிப்பதை விட சென்னை மெட்ரோ போன்ற பொது வாகனங்களை பயணிப்பதால் சாலையில் போக்குவரத்து நெருக்கடி வெகுவாக குறைகிறது. அதே நேரத்தில் சென்னை மெட்ரோவும் எலெக்ட்ரிக்கில் இயங்குவதால் அதன் மூலம் ஏற்படும் மாசு குறைகிறது. இதனால் புவி வெப்பமயமாகுதல் குறையும்.
இது மட்டுமல்லாமல் சென்னையில் சாலை வழியாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல அதிக நேரம் பிடிக்கும் ஆனால் சென்னை மெட்ரோ ரயில் வேகமாக இந்த பயணத்தை செய்து முடித்து விடும். இதனால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக சென்றுவிடலாம்.
தற்போது சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் இரண்டாம் கட்ட பணிகள் துவங்கியுள்ளது. அதன்படி சென்னையில் தற்போது மூன்றாவது வழித்தடத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மற்ற ரயில் பாதையை அமைக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி தினேஷ் சந்திரா - சோமா கூற்று நிறுவனத்திற்கு ரூபாய் 1063.37 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதில் மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட் மற்றும் செம்பியத்தில் பெரம்பூர் மெட்ரோ கிராஸ் ஓவர் ஆகிய நிலையங்கள் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களாகவும் மாதவரம் பால் பண்ணை மற்றும் முராரி மருத்துவமனை ஆகிய இரண்டு சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் இந்த ஒப்பந்தத்தின் படி அமைக்கப்பட உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை மெட்ரோ நிர்வாகம் பயணிகள் இருக்க பல்வேறு முயற்சிகளை செய்து வரும் நிலையில் இந்த முயற்சி அதில் மிக முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது பயணிகள் இந்த பரிசு பொருட்களால் ஆர்வம் கொண்டு மெட்ரோ பயன்பாட்டை அதிகரிக்க துவங்குவார்கள். அதே நேரம் பயணிகளுக்கு மெட்ரோவில் பயணிப்பதில் உள்ள இன்னும் சில சிக்கல்களை குறைக்க வழிவகை செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications








