360 கிமீ வேக புல்லட் ரயில்: இந்தியாவுக்கு ரஷ்யாவின் புதிய ஆஃபர்!
இந்தியாவின் அதிவேக ரயில் கனவுக்கு ஜப்பானின் சின்கென்சென் தொழில்நுட்பம் ஏற்கனவே அடித்தளம் அமைத்து வரும் நிலையில், தற்போது ரஷ்யாவும் தனது புதிய அதிவேக புல்லட் ரயிலை வழங்க முன்வந்துள்ளது. ரஷ்யாவின் Transmashholding (TMH) என்ற நிறுவனம், இந்திய சந்தைக்காக இவோல்கா எஃப்ஜி (Ivolga FG) என்ற அதிவேக புல்லட் ரயில் திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற INNOPROM India நிகழ்ச்சியில் இந்த திட்டம் தொடர்பான தகவல்கள் முன்வைக்கப்பட்டன.இரு தினங்களுக்கு முன் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் ஒருபகுதியாக இந்த புதிய ரயில் கான்செப்ட் குறித்த விளக்க வீடியோவை பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில் டிரான்ஸ்மாஷோல்டிங் நிறுவனத்தின் அதிகாரி வீடியோ மூலமாக விளக்கினார்.

(Representational Image)
இந்த ரயில் மணிக்கு 360 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்காக ரயிலை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு பதிலாக, இந்திய நிறுவனங்களுடன் இணைந்து உற்பத்தி செய்வதற்கும் ரஷ்ய நிறுவனம் ஆர்வம் காட்டியுள்ளது. இதன்படி 80 சதவீத உள்ளூர் உதிரிபாகங்களுடன் இந்த ரயிலை தயாரிக்கவும் யோசனையை முன்வைக்கப்பட்டுள்ளது.
இவோல்கா எஃப்ஜி புல்லட் ரயில்கள் 8 பெட்டிகள் கொண்டதாக இருக்கும். இதில் ஒரே நேரத்தில் 642 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய புல்லட் ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 360 கிமீ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் ஆயுட்காலம் சுமார் 30 ஆண்டுகளாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமான மும்பை மற்றும் ஆமதாபாத் நகரங்களுக்கு இடையே ஜப்பானின் தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இந்த 508 கிமீ வழித்தடத்தில் இயக்கப்பட உள்ள ரயில்களின் அதிகபட்ச இயக்க வேகம் 320 கிமீ ஆக இருக்கும். ரயிலின் அதிகபட்ச வடிவமைப்பு வேகம் 350 கிமீ என திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனுடன் ஒப்பிடும்போது ரஷ்யாவின் இவோல்கா எஃப்ஜி புல்லட் ரயில் 360 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய புல்லட் ரயில் திட்டத்திற்கு ஜப்பான் தொழில்நுட்பத்துடன் கடனுதவியும் வழங்குகிறது. ஆனால், இவோல்கா எஃப்ஜி ரயிலை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான முழுமையான திட்டச் செலவு இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனவே, இந்த ரஷ்ய ரயில் ஜப்பான் திட்டத்தைவிட குறைவான செலவில் வரும் என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை.
அதேநேரத்தில், ரஷ்யாவின் Transmashholding (TMH) நிறுவனம் ஏற்கனவே கைனட் ரயில்வே சொல்யூஷன்ஸ் என்ற இந்திய நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதில், கவனிக்க வேண்டிய விஷயம், இந்த கைனட் ரயில்வே சொல்யூஷன்ஸ் நிறுவனம் இந்திய ரயில்வே நிறுவனத்துடன் இணைந்து வந்தே பாரத் ரயில்களின் தயாரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவிலேயே 80 சதவீத உள்ளூர் உதிரிபாகங்களுடன் இவோல்கா எஃப்ஜி புல்லட் தயாரிக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தால், உள்நாட்டு ரயில் உற்பத்தித் துறைக்கு மிகப்பெரிய வாய்ப்பு உருவாகும். மேலும், அதிக அளவில் உள்ளூர் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதால் எதிர்காலத்தில் ரயில் தயாரிப்பு மற்றும் திட்டச் செலவுகளை குறைக்கும் வாய்ப்பும் உள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் உருவாகும் புதிய அதிவேக ரயில் வழித்தடங்களுக்கு தேவையான ரயில்களை விரைவாக உற்பத்தி செய்வதற்கான திறன் அதிகரிக்கலாம். இருப்பினும், இவோல்கா எஃப்ஜி தொடர்பான இறுதி ஒப்பந்தம் மற்றும் திட்டச் செலவு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications


