இஸ்ரோவுடன் போட்டி என நினைத்து ரஷ்யா ஆடும் ரிஸ்கான ஆட்டம்! ஆகஸ்ட் 11ல் விண்வெளியில் நடக்கும்போகும் போர்!
சந்திரயான் 3க்கு போட்டியாக ரஷ்யா தனது லூனா 25 என்ற விண்கலத்தை வரும் 11ஆம் தேதி விண்ணில் செலுத்துகிறது. சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா மீண்டும் தனது விண்வெளி ஆய்வை நிலவில் செய்யப்போகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ரஷ்யா சோவியத் யூனியனாக இருக்கும்போது பல்வேறு விண்வெளி ஆய்வுகளை நடத்தியது. உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆய்வு மையமாக இது திகழ்ந்தது. அந்த காலகட்டங்களில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே நிலவில் ஆய்வு செய்வது குறித்து மிகப்பெரிய போட்டியே இருந்தது. இதில் ரஷ்யா விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்தது.

கடைசியாக ரஷ்யா கடந்த 1976 ஆம் ஆண்டு லூனா 24 என்ற விண்கலத்தை தயார் செய்து வெற்றிகரமாக நிலவிற்கு அனுப்பியது. இது நிலவில் தரை இறங்கி அங்கிருந்து சுமார் 176 கிராம் மணலை வெற்றிகரமாக எடுத்துக் கொண்டு வந்து பூமிக்கு திரும்பியது. இந்த மிஷன் ரஷ்யாவிற்கு வெற்றிகரமாகவே அமைந்தது.
இந்த ஆய்வுகளுக்குப் பிறகு ரஷ்யா 47 ஆண்டுகளாக நிலவில் எதையும் செய்யாமல் இருந்தத. அந்த காலகட்டத்தில் தான் நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியம் இல்லை என விஞ்ஞானிகள் நம்பினர். இந்நிலையில் சந்திரயான் 1 நிலவில் ஆய்வு செய்தபோது ஒரு உண்மை வெளியே வந்தது.

சந்திராயான்1 நிலவின் தென் துருவ பகுதியில் ஆய்வு நடத்திய போது அங்கு தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது உறுதியானது. அதுவும் தண்ணீர் ஐஸ் வடிவில் இருப்பது தெரியவந்தது. இதை எடுத்து பலர் மீண்டும் தங்களது விண்வெளி ஆய்வை நிலவை நோக்கி திருப்பினர். நிலவில் வேறு என்னவெல்லாம் இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய நினைத்தனர்.
இதன் ஒரு பகுதியாக தான் இந்தியா கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்வெளிக்கு சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பியது. தற்போது சந்திரயான் 3 நிலவை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் சந்திரயான் 3 வரும் 23-24 ஆம் தேதியில் நிலவில் தரை இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தான் ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் தனது லூனா 25 என்ற விண்கலத்தை வரும் 11ம் தேதி விண்ணில் ஏவ முடிவு செய்துள்ளது. ரஷ்யா தனது சோயூஸ் 2.1பி என்ற ராக்கெட்டில் தான் இந்த விண்கலத்தை விண்ணில் ஏவுகிறது. இது லூனா 24 விண்கலத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது சரியாக நிலவின் தென் துருவப் பகுதியில் சுமார் 100 கிலோ மீட்டர் விட்டமுடைய ஒரு இடத்தை டார்கெட் செய்து நிலவில் தரையிறங்க போகிறது. இந்த விண்கலம் நிலவில் தரையிறங்குவது குறித்த தகவல்கள், ஆய்வுகள் மற்றும் நிலவில் தரையிறங்கியதும் வேறு சில ஆய்வுகளையும் நடத்த உள்ளது. இது பூமிக்கு இதுவரை கிடைக்காத தகவலை கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.
இந்த லூனா 25 முழுவதும் தானங்கியாக செயல்படும் நிலையமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லூனா 25 வெற்றிகரமாக நிலவின் தென் துருவ பகுதியில் தரை இறங்கினால் நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கிய உலகின் முதல் தானியங்கி நிலையமாக இதுதான் இருக்கும். இது உலக சாதனையாக கருதப்படும்.
ஆனால் உலக விஞ்ஞானிகள் பலர் இதை ரஷ்யா விளையாடும் ரிஸ்க்கான விளையாட்டு என விமர்சிக்கின்றனர். ரஷ்யா இந்த லூனா 25 விண்கலத்தை போட்டி மனப்பான்மையிலும் அதே நேரம் சரியாக திட்டமிடாமலும் சரியான ஆய்வுகளை செய்யாமலும் அனுப்புவதாக கருதுகின்றனர். இந்த லூனா 25 விண்கலத்தால் ரஷ்யாவின் பெயர் கெடப்போவதாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ரஷ்யா-உக்ரைன் போருக்கு பிறகு இந்த லூனா 25 திட்டத்திற்கு ஐரோப்பா செய்யவிருந்த கேமரா குறித்த தொழில் நுட்ப உதவியை ரத்து செய்தது. இதனால் அந்த தொழில்நுட்பம் இல்லாமலேயே தற்போது லூனா 25 விண்கலம் தயார் செய்யப்பட்டுள்ளது. இது பேரும் ஆபத்தான விஷயம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்த லூனா 25 விண்கலம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிய வாய்ப்புள்ளதாக பலர் கருதுகின்றனர். ஆனால் ரஷ்யா இதை வெற்றிகரமாக முடிப்போம் என கங்கணம் கட்டி உள்ளது. இதை வெற்றிகரமாக ரஷ்யா முடித்து விட்டால் அடுத்து லுமா 26,27 என வரிசையாக விண்கலத்தை அனுப்ப தயாராகி விடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து : சந்திரயான் 1 நிலவில் தென் துருவப் பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து உறுதி செய்த பின்பு நிலவில் ஒன்றுமே இல்லை என விட்டு விட்டு செவ்வாய் கிரகம் பக்கம் போன விண்வெளி ஆய்வு மையங்கள் எல்லாம் தற்போது மீண்டும் நிலவை நோக்கி திரும்பியுள்ளன. இந்த போட்டி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









