நம்மள மாதிரி சாதாரண பைக்கை வாங்கிய ருத்துராஜ் கெயிக்வாட்... விலை இவ்ளோ கம்மியா! மனுஷன் சிம்பிளா இருக்காரே!
இந்தியாவை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ருத்துராஜ் கெயிக்வாட் (Ruturaj Gaikwad). இந்திய கிரிக்கெட் அணியில் தற்போதுதான் ருத்துராஜ் கெயிக்வாட்டிற்கு வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியுள்ளன. வரும் காலங்களில் ருத்துராஜ் கெயிக்வாட்டிற்கு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர ஐபிஎல் (IPL) தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்காக ருத்துராஜ் கெயிக்வாட் விளையாடி வருகிறார். தனது சிறப்பான பேட்டிங் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக ருத்துராஜ் கெயிக்வாட் உருவெடுத்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி (Dhoni) பைக்குகளை அதிகமாக நேசிக்க கூடியவர். தனது அணியின் கேப்டனை போலவே, ருத்துராஜ் கெயிக்வாட்டும் பைக்குகள் மீது காதல் கொண்டவராக உள்ளார்.

ஜாவா 42 பாபர் (Jawa 42 Bobber) பைக்கை ருத்துராஜ் கெயிக்வாட் தற்போது வாங்கியிருப்பதுதான் அதற்கு சாட்சி. இந்த புதிய பைக்கை ருத்துராஜ் கெயிக்வாட் வெகு சமீபத்தில்தான் டெலிவரி எடுத்துள்ளார். அவரது ஜாவா 42 பாபர் பைக், மூன்ஸ்டோன் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் விலை 2.09 லட்ச ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை குறைவான பாபர் ரக பைக்குகளில் ஒன்று என்ற பெருமையை இது பெற்றுள்ளது. ஏற்கனவே விற்பனையில் ஸ்டாண்டர்டு ஜாவா 42 பைக்கின் அடிப்படையில்தான், ஜாவா 42 பாபர் பைக் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் இதன் ஸ்டைலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் சஸ்பென்ஸன் செட்-அப்பும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பாபர் ரக பைக்குகளுக்கு ஏற்ற வகையில் சஸ்பென்ஸன் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
ஸ்டாண்டர்டு ஜாவா 42 பைக்கில், 293 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 27.33 பிஎஸ் பவரையும், 27.02 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ஆனால் ஜாவா 42 பாபர் பைக்கில், இதைக்காட்டிலும் பெரிய இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஜாவா 42 பாபர் பைக்கில் பொருத்தப்பட்டிருப்பது, 334 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் ஆகும். ஜாவா பெராக் (Jawa Perak) பைக்கிடம் இருந்து இந்த இன்ஜின் பெறப்பட்டுள்ளது.
ஜாவா 42 பாபர் பைக்கில், அதிகபட்சமாக 30.2 பிஹெச்பி பவரையும், 32.74 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஜாவா 42 பாபர் பைக்கில், ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதி ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. எனவே ஜாவா 42 பாபர் பைக், கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.
இளம் வீரரான ருத்துராஜ் கெயிக்வாட், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனிக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார். டோனி வெகு சமீபத்தில் கியா இவி6 (Kia EV6) காரை வாங்கியிருந்தார். இந்த புத்தம் புதிய காரில், ருத்துராஜ் கெயிக்வாட்டுடன் டோனி பயணம் செய்துள்ளார். இந்த வீடியோ சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. கியா இவி6, எலெக்ட்ரிக் கார் ஆகும். கியா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள முதல் எலெக்ட்ரிக் கார் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
கார் மற்றும் பைக்குகளை டோனி எந்த அளவிற்கு விரும்ப கூடியவர் என்பது உலகத்திற்கே தெரியும். அவரிடம் ஏற்கனவே மிகவும் விலை உயர்ந்த பல்வேறு வாகனங்கள் உள்ள நிலையில், கியா இவி6 எலெக்ட்ரிக் காரும் தற்போது அவரது கார் கலெக்ஸனில் இணைந்துள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 59.95 லட்ச ரூபாய் முதல் 64.95 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் கியா இவி6 எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். கியா இவி6 எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக வெகு விரைவில் ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது.


Click it and Unblock the Notifications








