நம்ம ஊர் பழனி மலையை காப்பியடிக்கும் சபரிமலை... எல்லாருக்கும் கிடையாதாம்!!
கேரளா என்றாலே நமக்கு உடனடியாக ஞாபகத்திற்கு வருவது அங்கிருக்கும் அளவுக்கு அதிகமான தென்னை மரங்களும், சபரிமலை சுவாமி ஐய்யப்பன் திருக்கோயிலும் தான். சபரிமலைக்கு மாலை போட்டு ஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கிலான மக்கள் செல்கின்றனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. இதன் காரணமாகவே சபரிமலையில் ரோப் கார்களை கொண்டுவர நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்த அறிவிப்பை கேரள அரசு வெளியிட்டுள்ளது. பக்தர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ள இந்த அறிவிப்பை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நமது தமிழ்நாட்டில் உள்ள பழனி முருகன் திருக்கோயில் அமைந்துள்ள மலையின் அழகுகளுள் ஒன்று ரோப் கார் ஆகும். பழனி மலை புகைப்படத்தை வாங்கினால் கூட அதில் ரோப் கார் இடம்பெற்றிருப்பதை பார்க்கலாம். இத்தகைய ரோப் கார் வசதி விரைவில் சபரிமலையிலும் வர உள்ளது. இதுதொடர்பான புதிய அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

இதன்படி, இந்த நவம்பர் 23ஆம் தேதிக்கு உள்ளாக சபரிமலையில் ரோப் கார் போக்குவரத்துக்கான நிலத்தை இறுதி செய்ய வனத்துறை அதிகாரிகளுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. கேரள அறநிலையத்துறை அமைச்சர் வி.என் வசவன் மற்றும் கேரள வனத்துறை அமைச்சர் ஏகே சசீந்திரன் உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்துக் கொண்ட சந்திப்பிற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலை தேவஸ்தான தலைவர் பிஎஸ் பிரசாந்த் அவர்களும் இந்த கலந்துரையாடலில் கலந்துக் கொண்டார். மேலும், மாநில வருவாய் துறை அதிகாரிகளும் இதில் கலந்துக் கொண்டனர். இயற்கை வளங்களை பாதிக்காத வண்ணம் எவ்வாறு ரோப்கார் வசதியை உருவாக்குவது என்பது குறித்த அறிக்கைகள் சந்திப்பின்போது சமர்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், தகுந்த நேரத்திற்குள் வேலைகள் முடிக்கப்பட வேண்டும் என அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்ததாகவும் கூறுகின்றனர்.
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் பொழுதுப்போக்கிற்காகவும், முதியவர்கள் மற்றும் நோயுற்றவர்கள் சாமி தரிசனம் செய்ய பயன்படுத்தக்கூடியதாகவும் உள்ளது. ஆனால், சபரிமலையில், சரக்கு பொருட்களை கொண்டு செல்லவும், சன்னித்தானதில் காயமடைபவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட உள்ளது. அதாவது, பக்தர்களை அழைத்து செல்ல பயன்படுத்தப்படும் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

சபரிமலையில் மொத்தம் 2.7கிமீ தொலைவிற்கு இந்த ரோப்கார் வசதி அமைக்கப்பட உள்ளது. இந்த போக்குவரத்து பம்பைக்கு அருகே மலை அடிவாரத்தில் இருந்து துவங்கி, மேலே சன்னிதானத்தில் போலீஸ் பேரிகேட் வரையில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக வனத்துறைக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக, மாநில வருவாய் துறைக்கு சொந்தமான இடம் வேறொரு பகுதியில் வனத்துறைக்கு வழங்கப்பட உள்ளது.
நீலிமலை, சுவாமி ஐயப்பன் சாலையில் சாரல்மேடு, மரக்கூட்டம், சந்திரநாதன் சாலை மற்றும் சன்னிதானம் போலீஸ் பேரிகேட்டிற்கு அருகே என மொத்தம் 5 இடங்களில் ரோப்காருக்கான டவர்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு டவரும் 40இல் இருந்து 70 அடி உயரத்தில் இருக்கும். எளிய போக்குவரத்துக்காக அமைத்தாலும், வனத்திற்குள் எளியதாக இவ்வாறான ரோப்கார் வசதியை கொண்டுவந்துவிட முடியாது.
இதில் நிறைய வேலைகள் உள்ளன என்பது ஒருபக்கம் இருந்தாலும், அந்த வேலைகளை துவங்க முதலில் நீதிமன்றத்தில் அரசாங்கம் முறையாக அனுமதி வாங்க வேண்டும். இந்த ரோப்கார் போக்குவரத்து வழித்தடம் அமைய போகும் இடத்தில் மொத்தம் 98 மரங்கள் உள்ளன என்றும், இதில் 71 மரங்கள் முழுமையாக வெட்டப்பட உள்ளன என்றும், 27 மரங்களின் கிளைகள் வெட்டப்பட உள்ளன என்றும் அரசாங்கத்தின் சிறப்பு சர்வே குழுவும், வனத்துறையின் சிறிய சர்வே குழுவும் இணைந்து அறிக்கையை கேரள உச்சநீதிமன்றத்தில் சமர்பித்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரோப்கார் போக்குவரத்து செயல்படுவதிலும் இயந்திர நுட்பங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. வழித்தடத்தின் இருமுனைகளில் உள்ள மோட்டார்கள் ரோப்காரை பிடித்திருக்கும் கயிற்றை சுழற்றுவதன் மூலம் பெட்டிகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்கின்றன. கல்லு, முல்லும் தாண்டி மிகவும் சபரிமலை சன்னிதானத்திற்கு சென்ற காலம் போய் இப்போது ரோப்கார் கூட வந்துவிட்டது.


Click it and Unblock the Notifications








