முற்றிலும் 1 ரூபாய் நாணயங்களை கொடுத்து வாங்கப்பட்ட டோமினார் 400 பைக்!! ஷோரூமை அதிரவைத்த சேலத்து இளைஞர்!
நம் அனைவருக்கும் ஏதேனும் ஒரு கனவு பைக் நிச்சயமாக இருக்கும். அதனை வாங்கும் அளவிற்கு தற்சமயம் பணம் இல்லாவிடினும், அந்த பைக்கை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்பது வாழ்நாள் இலட்சியமாக இருக்கலாம். அதற்காக சிலர் சிறிது தொகையை சேர்த்துக்கூட வைத்திருப்பீர்கள்.

அவ்வாறே சேலத்தில் உள்ள ஒரு இளைஞர் ரூ.2.6 லட்சம் வரையில் 1 ரூபாய் நாணயங்களாக சேமித்து வைத்து ஒரு பஜாஜ் டோமினார் 400 பைக்கை வாங்கியுள்ளார். டோமினார் 400 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.2.17 லட்சமாக உள்ளது. ஆனால் ஆன்-ரோடு விலை எப்படியிருந்தாலும் ரூ.2.6 லட்சத்திற்கு வந்துவிடும்.

தனியார் நிறுவனம் ஒன்றில் கம்யூட்டர் ஆப்ரேட்டராகவும், பகுதிநேரம் யுடியூப்பராகவும் உள்ள இந்த சேலத்து இளைஞரின் பெயர் வி.பூபதி, வயது 29. இவர் கடந்த 3 வருடங்களாக அருகில் உள்ள கோயில்களிலும், டீக்கடைகள் மற்றும் ஓட்டல்களிலும் ரூபாய் நோட்டுகளை கொடுத்து 1 ரூபாய் நாணயங்களாக சேகரித்து வந்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "அந்த நேரத்தில் என்னிடம் அதிக பணம் இல்லை. யுடியூப் சேனலில் மூலம் கிடைத்த வருவாயில் இருந்து பணத்தை சேமிக்க முடிவு செய்தேன். சமீபத்தில்தான் பைக்கிற்கு மொத்தம் எவ்வளவு செலவு ஆகும் என்பது குறித்து விசாரித்தேன். தற்சமயம் ரூ.2.6 லட்சம் ஆன்-ரோடு விலையாக உள்ளது. என்னிடம் போதுமான பணம் இருந்தது" என பூபதி தெரிவித்துள்ளார்.

முதலில் ஷோரூம் அதிகாரி மஹாவிக்ராந்த் இத்தகைய கட்டணத்தை ஏற்றுக்கொள்ளவில்லையாம். அதன்பின் இந்த இளைஞர் மிகவும் விரும்பி கேட்டு கொண்டதன் பிறகே ஏற்றுக்கொண்டுள்ளார். இதுகுறித்து மஹாவிக்ராந்த் கூறுகையில், "வங்கிகள் 1 லட்ச ரூபாயை 2,000 ரூபாய் நோட்டுகளாக கணக்கிடுவதற்கே ரூ.140-ஐ கட்டணமாக வசூலிக்கின்றன. அப்படியிருக்க, நாம் 1 ரூபாய் நாணயங்களில் ரூ.2.6 லட்சத்தை கொடுக்கும்போது அவர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள்?" என கேள்வி எழுப்புகிறார்.

நாணயங்களையோ அல்லது நோட்டுகளையோ வங்கிகள் எண்ணுவதற்கு கட்டணத்தை வசூலிக்கின்றனவா என்பது உறுதியாக தெரியவில்லை. வசூலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் ரூ.2.6 லட்சத்தை 1 ரூபாய் நாணயங்களாக டீலர்ஷிப் ஷோரூமில் வைத்து எண்ணுவதற்கே இவர்களுக்கு 10 மணிநேரங்கள் வரையில் தேவைப்பட்டுள்ளது. இவ்வாறு நாணயங்களை கொடுத்து வாகனங்களை வாங்குவது ஒன்னும் இது முதல்முறையல்ல.

ஏனெனில் சமீபத்தில் கூட ஒருவர் மூட்டையாக நாணயங்களை கொடுத்து மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி காரை வாங்கி இருந்தார். என்னங்க சொல்றீங்க... மஹிந்திரா பொலிரோவா? என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆம் மொத்த ரூ.11.51 லட்சத்தையும் ரூ.1 நாணயங்களில் வழங்கி டீலர்ஷிப்பை அதிர வைத்திருந்தார். அதன்பின் சுஸுகி அவெனிஸ் ஸ்கூட்டர் ஒன்றும் இவ்வாறு வாங்கப்பட்டு இருந்தது.

ஆனால் இதில் மொத்த தொகையும் அல்ல, ரூ.22,000 மட்டுமே சில்லறைகளாக டீலர்ஷிப்பில் கொடுக்கப்பட்டது. மீதி தொகை மாதத்தவணையாக மாற்றி கொள்ளப்பட்டது. சரி மீண்டும் சேலத்து இளைஞர் பூபதி விஷயத்திற்கு வருவோம். இவர் வாங்கியிருக்கும் டோமினார் 400 ஆனது பஜாஜ் ஆட்டோவின் பிரதான மோட்டார்சைக்கிளாக உள்ளது. அதாவது இருப்பதிலேயே பஜாஜின் அதி செயல்திறன்மிக்க என்ஜினை டோமினார் 400-தான் கொண்டுள்ளது.

கடைசியாக பஜாஜ் டோமினார் 400 கடந்த 2021இல் அப்டேட் செய்யப்பட்டது. சில தொலைத்தூர பயணங்களுக்கான ஆக்ஸஸரீகள் புதியதாக சேர்க்கப்பட்டன. ஏனெனில் வாடிக்கையாளர்கள் மத்தியில் டோமினார் 400 தொலைத்தூர பயணங்களுக்கான இருசக்கர வாகனமாகவே பார்க்கப்படுகிறது. இதன்படி முன்பக்கத்தில் நன்கு நீளமான எதிர்காற்று தடுப்பு கண்ணாடி ஆக்ஸஸரீயாக சேர்க்கப்பட்டது.

அதேநேரம் விபத்துகளின்போது ரைடரின் கை விரல்களை பாதுகாக்கும் பாதுகாப்பான்களும் ஹேண்டில்பாரில் வழங்கப்படுகின்றன. என்ஜினின் அடிப்பகுதியில் பேஷ் தட்டு ஒன்று பொருத்தப்படுகிறது. இது கற்கள் மற்றும் பாறை வழியாக செல்லும் போது பைக்கின் என்ஜின் அமைப்பு பாதிப்படைவதை தவிர்க்கும். மேலும் ஓட்டுனர் கால்முட்டி பாதுகாப்பான்களும் பொருத்தப்படுகின்றன.

373.2சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஃப்யுல்-இன்ஜெக்டட், லிக்யுடு-கூல்டு டிடிஎஸ-ஐ என்ஜின் டோமினார் 400 பைக்கில் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 40 பிஎஸ் மற்றும் 35 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் & ஸ்லிப்-உதவி க்ளட்ச் இணைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








