உயிர் பயத்தை காட்டிட்டாங்க பரமா... கார் வாங்க வந்த கஸ்டமரை தலைத்தெறிக்க ஓட விட்ட ஷோரூம் ஊழியர்!
புதியதாக கார் ஒன்றை வாங்குவது என்பது நம் பெரும்பாலானோர்க்கு வாழ்நாள் கனவாகும். எப்படியாவது பணத்தை சேர்த்து வைத்தோ அல்லது காருக்கான கடனுதவியை பெற்றோ பிராண்ட்-நியூ காரை வாங்க ஷோரூமுக்கு செல்லும் அனுபவமே தனி சுகம் தான். மற்றவர்களது கார் அல்லது செகண்ட்-ஹேண்ட் காரை பயன்படுத்தியவர்களுக்கு கூட பிராண்ட்-நியூ காரை வாங்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை வார்த்தையில் சொல்லிவிட முடியாது.
கார் வாங்க ஷோரூமுக்கு செல்லும்போது அங்கு கொடுக்கப்படும் வரவேற்பில் இருந்து, வாங்க விரும்பும் காரை முன்னதாக பொது சாலையில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க கொடுப்பது வரை என எல்லாமே புதுமையான அனுபவமாக இருக்கும். மொத்த குடும்பத்தையும் கார் ஷோரூமுக்கு அழைத்து சென்றால், மகிழ்ச்சி இன்னும் இரட்டிப்பானதாக இருக்கும்.

ஆனால், அதீத மகிழ்ச்சி எங்கு கிடைக்கிறதோ அங்குதான் சில சமயங்களில் அசம்பாவிதங்களும் ஏற்படுகின்றன. ஷோரூமில் இருந்து காரை டெலிவிரி (Delivery) பெற்று செல்லும்போது, ஷோரூம் வளாகத்திற்கு உள்ளேயே காரை கரப்பான் பூச்சி போல் வாடிக்கையாளர்கள் கவிழ்த்த சம்பவங்களை சிலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அப்படித்தான் தற்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ஆனால், இந்த சம்பவத்தில் கார் விபத்தை ஏற்படுத்தியவர் காரை வாங்க வந்த வாடிக்கையாளர் அல்ல... ஷோரூம் ஊழியர் ஆவார். கார் வாங்க வந்த வாடிக்கையாளருக்கு டெமொ காருக்குள் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தப்படி விளக்கிக் கொண்டிருந்த ஊழியர் எதிர்பாராத விதமாக காரின் ஆக்ஸலரேட்டர் (Accelerator) பெடலை அழுத்தியுள்ளார். அந்த சமயத்தில் கார் ஏற்கனவே ஆன் செய்யப்பட்டு இருந்ததால், ஊழியர் ஆக்ஸலரேட்டர் பெடலை அழுத்தியதும் கார் சீறிப் பாய்ந்துள்ளது.

தூசி, துகள் படாத வண்ணம் ஷோரூமிற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஷோரூம் கண்ணாடிகளை எல்லாம் உடைத்துக் கொண்டு சாலையில் சீறியப்படி தாறுமாறாக சென்றுள்ளது. இதுகுறித்த சிசிடிவி (CCTV) காணொளி தந்தி டிவி (Thanthi TV) மூலமாக நமக்கு கிடைக்க பெற்றுள்ளது. இதில், ஷோரூம் கண்ணாடியை உடைத்துக் கொண்டு சென்ற கார் பார்ப்போரை பதற வைக்கும் வகையில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் பரபரப்பான சாலையில் சீறியப்படி சென்றுள்ளது.
இந்த சம்பவம் நடந்தது, சேலம் (Salem) மாவட்டம் சங்ககிரி (Sangagiri) பகுதியில் உள்ள மாருதி சுஸுகி அரேனா (Maruti Suzuki Arena) டீலர்ஷிப் ஷோரூமில் ஆகும். ஏற்கனவே கூறியதுபோல், இவ்வாறான விபத்துகள் பெரும்பாலும் வாடிக்கையாளர் அல்லது அவருடன் ஷோரூமுக்கு வந்தவர்களால் ஏற்படுவது வழக்கமே அன்றி, டீலர்ஷிப் ஷோரூமில் பணியாற்றும் ஊழியரால் ஏற்பட்டது முற்றிலும் விசித்திரமானதாக உள்ளது.
இந்த சம்பவத்தினால், கார் ஷோரூமில் பணியாற்றும் ஊழியருக்கு கார் ஓட்ட தெரியவில்லையா? என சந்தேகம் எழுகிறது. ஏனெனில், ஷோரூம் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வந்த காரை அவரால் உடனடியாகவும், பாதுகாப்பாகவும் நிறுத்த முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால், அவர் காரை எவ்வாறு நிறுத்தினாரே என்பதே பில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

பல அடி தூரத்திற்கு காரை தாறுமாறாக ஓட்டிச் சென்று, சாலையின் ஓரத்தில் இருந்த கம்பத்தில் மோத விட்ட பின்பும் காரை நிறுத்த முடியாமல் அவர் தத்தளித்துள்ளார். இதை எல்லாம் வைத்து பார்க்கும்போதுதான் அவருக்கு உண்மையில் கார் ஓட்ட தெரியுமா என்கிற சந்தேகம் எழுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் ஷோரூம் ஒன்றில் பணியாற்றுவதற்கான முக்கியமான தகுதியே கார் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்பதாகும். ஏனெனில், கார் ஓட்ட தெரிந்திருந்தால், தவறுதலாக ஆக்ஸலரேட்டர் பெடலை அழுத்தியிருந்தாலும் ஷோரூம் கண்ணாடியை உடைத்துக் கொண்டு சென்ற கார் சாலைக்கு செல்லும் முன்பே அவரால் நிறுத்தியிருக்க முடியும். ஒருவேளை இது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (Automatic Gearbox) கொண்ட டெமோ காராக இருக்கலாம்.
ஏனென்றால், இன்னமும் நம்மில் பலருக்கு மேனுவல் (Manual) கியர்பாக்ஸ் கொண்ட கார்களை மட்டுமே ஓட்ட தெரிந்துள்ளது. மேனுவல் காரை ஓட்ட கற்றுக் கொண்டதும், அத்துடன் கார் ஓட்ட கற்கும் திறனை பலர் நிறுத்திக் கொள்கின்றனர். ஷோரூம்களில் வாடிக்கையாளர்களால் நடந்த இவ்வாறான விபத்துகளுக்கு முக்கியமான காரணம், அவர்களுக்கு ஆட்டோமேட்டிக் காரை ஓட்ட தெரியாததே ஆகும். அதாவது, மேனுவல் காரை ஓட்டி பழகி வந்தவர்கள் முதல்முறையாக ஆட்டோமேட்டிக் காரை ஓட்டும்போது விபத்தை ஏற்படுத்தி விடுகின்றனர்.


Click it and Unblock the Notifications









