டூவீலர் மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சேல்ஸ்மேன்... அந்தரத்தில் பறந்து சென்ற அதிர்ச்சி வீடியோ
டூவீலர் மீது கார் மோதியதில் சேல்ஸ்மேன் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். அவர் அந்தரத்தில் பறந்து சென்ற அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

உலகில் சாலை பாதுகாப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை உள்ளது. இங்கு சாலை விபத்துக்களால் ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். இதுதவிர பல லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைகின்றனர்.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதும், அலட்சியமாக வாகனங்களை ஓட்டுவதுமே இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதற்கு முக்கியமான காரணம். எனவே வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் இதற்கு ஓர் உதாரணம். கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.

மத்திய அரசு, மாநில அரசுகள், காவல் துறை மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் சார்பில், என்னதான் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கூட, அதிர்ச்சியளிக்கும் வகையிலான சாலை விபத்துக்கள் அவ்வப்போது அரங்கேறி கொண்டுதான் உள்ளன. இந்த வகையில் சென்னை அருகே சமீபத்தில் நடைபெற்ற ஒரு சாலை விபத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ துறையில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வந்த ஒருவர் சுமார் 30 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இரு சக்கர வாகனத்தின் மீது வேகமாக வந்த கார் மோதியதால், இந்த கோர விபத்து நடைபெற்றுள்ளது. அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் இந்த விபத்து தொடர்பாக பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன. இது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.

விருகம்பாக்கம் நடேசன் நகரை சேர்ந்தவர் லோகநாதன். இவர் மருத்துவ துறையில் சேல்ஸ்மேனாக பணியாற்றி கொண்டிருந்தார். சமீபத்தில் பணி நிமித்தமாக இவர் வண்டலூர் பகுதிக்கு சென்றிருந்தார். பின்னர் அங்கு பணியை முடித்து விட்டு, வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் குன்றத்தூர் அருகே டூவீலரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது சாலையோரமாக இருந்த ஒரு பேக்கரி கடையில் டீ குடிப்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தை லோகநாதன் திருப்பி சென்றார். அந்த நேரத்தில் சர்வீஸ் சாலையில் கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த கார் எதிர்பாராத விதமாக லோகநாதன் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதனால் லோகநாதன் சுமார் 30 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டார்.

இதன் காரணமாக உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே லோகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை கண்டதும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் அதிர்ச்சியுடன் வெளியே ஓடி வந்தனர். இதனால் பயந்து போன கார் டிரைவர், காரை அங்கேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். காண்பவர்களை பதைபதைக்க வைக்கும் இந்த விபத்தின் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்து தொடர்பாக போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே இதுபோன்ற சாலை விபத்துக்களை தவிர்க்க முடியும். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவதுடன் வாகனங்களை இயக்கும்போது கூடுதல் கவனத்துடன் இருப்பதும் நல்லது.


Click it and Unblock the Notifications