ரூ.15 லட்ச கட்டண வகுப்பில் ரூ.7,000 கொடுத்து பறந்த கில்லாடி விமானப் பயணி!
விமானப் பயணம் விரைவானதாக இருந்தாலும், பிற போக்குவரத்தை விட கட்டணம் மிக அதிகம் என்பதே தெரிந்ததே. குறைவான கட்டணம் கொண்ட விமான வகுப்புகளில் பெரும்பாலும் இருக்கைகள் மிகவும் நெருக்கடியாக அமைக்கப்பட்டிருக்கும். இதனால், பலர் கை கால்களை ஒடுக்கிக் கொண்டு பல மணி நேரம் பறந்து அலுத்து இறங்குவதை காண முடியும்.
சற்றே ஆசுவாசமான பிசினஸ் கிளாஸ் உள்ளிட்ட உயர் வகுப்புகளில் பயணிப்பதற்கு கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால், பலர் அந்த பக்கமே திரும்புவதில்லை. இந்தநிலையில், சாங் ஹூவாங் என்பவர் சற்றே மூளையை கசக்கியதன் பயன், எக்கானமி கட்டணத்தைவிட பன்மடங்கு குறைவான கட்டணத்தில், உயர் வகுப்புகளில் பயணித்து ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

உயரிய வகுப்பு விமானப் பயணம்
சமீபத்தில் உலகின் மிகப்பெரிய விமானமான ஏர்பஸ் ஏ380 விமானத்தின் 15 லட்சம் கட்டணம் கொண்ட மிக உயரிய வகுப்பில் இந்திய மதிப்பில் ரூ.7,000 மட்டுமே கொடுத்து பயணித்து, அந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவரது சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தொடர்ந்து காணலாம்.

ரகசியமெல்லாம் இல்லீங்க...
கிரெடிட் கார்டுகள் மூலமாக கிடைக்கும் ரிவார்டு பாயிண்டுகளை சேகரித்து, இதுபோன்ற குறைவான தொகையை கொடுத்து உலகம் முழுவதும் சுற்றி வந்துள்ளார். ஒரு பயணம் அல்ல, இதுவரை ஏராளமான பயணங்களை இதுபோன்று மிக மிக குறைவான தொகையில் பறந்துள்ளார்.

ஆசை
அனைத்து வகுப்புகளிலும் பயணித்தாலும், எதிஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ380 விமானத்தின் ரெசிடென்ஸ் என்ற மிக உயரிய வகுப்பில் பயணிக்க ஆசை வந்துவிட்டது. இதையடுத்து, தனது ரிவார்டு பாயிண்ட்டுகளை சேகரித்துக் கொண்டு, கூடுதலாக 108 டாலர்களை கொடுத்து அந்த விமானத்தின் அபார்ட்மென்ட் என்ற வகுப்பில் முன்பதிவு செய்துள்ளார்.

கட்டணம்
அபார்ட்மென்ட் வகுப்புக்கு கட்டணம் 6,500 டாலர்கள், ரெசிடென்ஸ் வகுப்புக்கு கட்டணம் 23,000 டாலர்கள். அபார்ட்மெனட் வகுப்பில் முன்பதிவு செய்ததுடன், ரெசிடென்ஸ் வகுப்பை பார்க்க வேண்டும் என்ற தனது ஆசையை எதிஹாட் நிறுவனத்துக்கு இ-மெயில் மூலமாக தெரிவித்தார். வழக்கமான பயணி என்பதால், அவர் ஆசைக்கு அனுமதியளித்தது எதிஹாட் ஏர்லைன்ஸ்.

சிட்னி டு அபுதாபி
சிட்னியிலிருந்து அபுதாபி செல்லும் அந்த விமானத்தில் ஏறியவுடன் அபார்மென்ட வகுப்பில் அமர்ந்திருக்கிறார். சிறிது நேரத்தில் அங்கு வந்த விமான பணியாளர் அவரை, ரெசிடென்ஸ் என்ற உயர் வகுப்புக்கு அழைத்து சென்றார். அங்கு சென்று ரெசிடென்ஸ் வகுப்பை பார்த்து உச்சபட்ச மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார் சாங் ஹூவாங்.

திக்குமுக்காடிய ஹூவாங்
அதாவது, அவர் பார்க்க வேண்டும் என்று கூறிய ரெசிடென்ஸ் வகுப்பிலேயே, அரை மணி நேரம் பயணிக்க எதிஹாட் ஏர்லைன்ஸ் வாய்ப்பு வழங்கியது. அதில், பயணிக்கும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளார் ஹூவாங்.

ரெசிடென்ஸ் வகுப்பு வசதிகள்
சோபாவாகவும், படுக்கையாகவும் மாற்றிக்கொள்ளும் வசதி கொண்ட படுக்கை, தனி ரெஸ்ட் ரூம், 27 இன்ச் திரை கொண்ட எல்இடி டிவி, உயர் தர உணவு என எதிஹாட்டின் சர்வீஸ் அவரை மலைக்க செய்துள்ளது.

மறக்க முடியா அனுபவம்
எதிஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ380 விமானத்தின் ரெசிடென்ஸ் வகுப்பில் பயணித்தது மறக்க முடியாத அனுபவம் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வகுப்பில் பயணிக்கும்போது, குளியல், குட்டித் தூக்கம், பிரேக் ஃபாஸ்ட், டிவியை கண்டு களித்தது உள்ளிட்டவற்றை வெறும் அரை மணிநேரத்தில் செய்து கொண்டாராம்.

டாப் மைல்ஸ்
"யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக." என்பது போல, தான் மட்டுமின்றி, பிறரும் இதுபோன்ற ரிவார்டு பாயிண்டுகளை சேகரித்து பறப்பதற்கான வழிகாட்டு முறைகளை தனது டாப்மைல்ஸ்.காம் என்ற இணையதளம் வாயிலாக பகிர்ந்து கொண்டு வருகிறார்.

கஷ்டம்
கடந்த 2008ம் ஆண்டு சீனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளை காண்பதற்கு முதல்முறையாக இதுபோன்று ரிவார்டு பாயிண்டுகளை சேர்த்து விமானத்தில் பயணித்துள்ளார். அதைத்தொடர்ந்து, அதையே வழக்கமாக வைத்திருக்கிறார். அவரிடம் தற்போது 15 கிரெடிட் கார்டுகள் உள்ளனவாம். கஷ்டம்தான்.

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் ஏர்பஸ் ஏ380 பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!
Source: Top Miles


Click it and Unblock the Notifications