கோடி கோடியாய் சம்பாதிச்சாலும் காருக்கு டிரைவர் வைக்கல! 3 கோடி ரூபா கார் உடன் பார்த்ததும் சூழ்ந்த கேமராக்கள்!
ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார்கள் உலகம் முழுவதும் பெரும் பணக்காரர்கள், சினிமா (Cinema) பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் விருப்பமான சொகுசு எஸ்யூவிகளில் தனி இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் பல பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ரேஞ்ச் ரோவர் காரை வைத்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டனும், பிரபலமான இந்திய கிரிக்கெட் வீரருமான சஞ்சு சாம்சன் (Sanju Samson) சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள புதிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Autobiography) காரை வாங்கியுள்ளார்.
சஞ்சு சாம்சன் தனது புதிய ரேஞ்ச் ரோவருடன் இருக்கும் வீடியோவை 'கார்காய் இந்தியா' (CarGuy India) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தற்சமயம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஆசிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருவதால், இந்த வீடியோ ஆனது சில வாரங்களுக்கு முன் கேரளாவில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.

இந்த வீடியோவில், சஞ்சு சாம்சன் ஒரு கட்டிடத்தில் இருந்து வெளியே வந்து, புதிதாக வாங்கிய தனது சொகுசு எஸ்யூவி காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை ஓட்டிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. போட்டோகிராபர்களை பார்த்ததும், சிறிது நேரம் வண்டியை நிறுத்தி, கண்ணாடிகளை இறக்கி சில புகைப்படங்களுக்குப் பிறகு, அங்கிருந்து சஞ்சு சாம்சன் கிளம்பிச் சென்றுள்ளார்.
வாகனத்தில் தற்காலிகப் பதிவு எண் பொருத்தப்பட்டு இருப்பதால், இந்த ரேஞ்ச் ரோவர் காரை சஞ்சு சாம்சன் மிக சமீபத்தில்தான் வாங்கியிருக்க கூடும். இந்த வீடியோவின் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், சான்டோரினி கருப்பு நிற ரேஞ்ச் ரோவரை வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த கருப்பு நிறம் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்ற விவிஐபி-கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. சஞ்சு சாம்சனின் இந்த ரேஞ்ச் ரோவர் காரில் 22 இன்ச் டயமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாகனத்தின் உட்புறம் கருப்பு நிற லெதர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
உட்புறத்தில் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார் பல அம்சங்களுடன் வருகிறது. இதில் பிவி புரோ ஓஎஸ் (Pivi Pro OS) உடன் 13.2 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, டிஜிட்டல் டிரைவர் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல்கள் ஆகியவை அடங்கும்.
ரேஞ்ச் ரோவர் கார்களில் சஞ்சு சாம்சன் வாங்கியிருக்கும் ஆட்டோபயோகிராபி வேரியண்ட்டில் ஹெட்-அப் டிஸ்ப்ளே, நான்கு மண்டல ஆட்டோமேட்டிக் HVAC, டிஜிட்டல் ஆடியோ பிராட்காஸ்ட் (DAB), பிரீமியம் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம், மசாஜ் வசதியுடன் 24-விதங்களில் ஹீட்டட் & கூல்டு முன் இருக்கைகள் போன்ற பல சிறப்பம்சங்களும் வழங்கப்படுகின்றன.

சஞ்சு சாம்சன் தேர்ந்தெடுத்த காரின் என்ஜின் என்ன என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி எஸ்யூவி கார் இரண்டு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஒன்றான 4.4 லிட்டர், V8, மைல்ட்-ஹைப்ரிட் என்ஜின் 523 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. மற்றொரு என்ஜின் ஆப்ஷனான 3.0 லிட்டர், 6-சிலிண்டர் என்ஜின், அதிகபட்சமாக 394 பிஎச்பி இயக்க ஆற்றலையும், 550 என்.எம் டார்க்கையும் வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், லேண்ட் ரோவர் (Land Rover) ரேஞ்ச் ரோவர் கார்கள் அவற்றின் கம்பீரமான உடலமைப்பினால் இந்திய விவிஐபிகள் மத்தியில் பிரபலமானதாக உள்ளது. சமீபத்தில் கூட, முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி லாங் வீல்பேஸ் காரை வாங்கி இருந்தார்.
தற்போது தோனியை தொடர்ந்து, மற்றொரு முன்னணி விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரை வாங்கி உள்ளார். தற்சமயம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடி வரும் சஞ்சு சாம்சன், கிரிக்கெட் தொடர் முடிந்ததும் தனது தாயகமான கேரளாவுக்கு வந்து ஜாலியாக இந்த ரேஞ்ச் ரோவர் காரை நீண்ட தொலைவு பயணங்களுக்கு ஓட்டி பார்ப்பார் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









