தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பண பட்டுவாடாவை தடுப்பதற்காக ஆங்காங்கே பறக்கும் படையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் சங்கரன்கோவில் எம்எல்ஏ காரை தேர்தல் அதிகாரி ஒருவர் சோதனை செய்யாமல் விட்ட சம்பவம் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவத்தில் எம்எல்ஏ வந்த காரின் வேறு என்னெல்லாம் சட்டவிரோதமாக இருந்தது என்ற விவரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் எல்லாம் தற்போது பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் ஆங்காங்கே வாகனங்களில் சோதனை நடக்கிறது.

பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக இப்படியான சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த டிஎன் புதுக்குடி பகுதியில் பிடிஓ ராதா என்பவர் தலைமையில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த பகுதி வழியாக சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா தனது காரில் வந்துள்ளார்.
அவரது காரை முறையாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்யவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பாலிமர் செய்தியில் செய்தி வெளியாகி அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த பிரச்சனை தற்போது பெரிதாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் நிலையில், இந்த வீடியோவை பார்க்கும் போது குறிப்பிட்ட இந்த காரில் மேலும் சில சட்ட விரோதமான விஷயங்கள் இருப்பதை நம்மால் உணர முடிகிறது.

சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா வந்ததாக கூறப்படும் இந்த கார் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா ஹைகிராஸ் காராகும். பொதுவாக அரசியல்வாதிகள் எல்லாம் இன்னோவா கார்களை வைத்திருப்பது சாதாரண விஷயம் தான். அப்படியாக தான் இவரும் இன்னோவா ஹைகிராஸ் காரை புதிதாக வாங்கி பயன்படுத்தி வருகிறார்.
இந்த காரை பார்க்கும்போதே நமக்கு தெளிவாக இந்த காரில் ஃபுல் பார் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. பொதுவாக வாகனங்களில் ஃபுல் பாரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஃபுல் பாரை பயன்படுத்தினால், வாகனம் விபத்தில் சிக்கும் போது ஏர்பேக் சரியாக வேலை செய்யாமல் வாகனத்தில் பயணிக்கும் பயணிகளின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

இது மட்டும் அல்லாமல் இவர் ஃபுல் பாரில் எக்ஸ்ட்ராவாக ஹாரன்களை செட் செய்துள்ளார். வரிசையாக நான்கு பெரிய ஹாரங்கள் செட் செய்யப்பட்டிருப்பது நமக்கு தெரிகிறது. இப்படியாக எக்ஸ்ட்ரா ஹாரன்களை ஃபிட்டிங் செய்வது என்பது சட்டப்படி குற்றம் ஆகும். ஒரு வாகனத்தின் ஹாரனில் இருந்து குறிப்பிட்ட அளவிலான சத்தம் மட்டுமே வெளியேற வேண்டும் என்ற விதி இருக்கிறது. இது அதையும் தாண்டி அதிகமான சத்தத்தை வெளியேற்றும் வகையிலாக செட்டப் செய்யப்பட்டுள்ளது.
இது எல்லாம் ஒரு புறம் இருக்க, இவர் வாகனத்தின் முன்பக்கம் வாகனத்தின் பதிவு எண் நம்பர் பிளேட் இல்லாமல் இருக்கிறது. ஒரு வாகனத்தின் முன்பக்கமும் பின்பக்கமும் கட்டாயம் பதிவின் கொண்ட நம்பர் பிளேட் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எம்எல்ஏ பயணித்த இந்த காரில் நம்பர் பிளேட் இல்லாமல் இருக்கிறது. ஒரு வேளை உட்பக்கமாக இருந்தாலும் வெளியில் தெரியாதபடி இருக்கிறது இது சட்ட விரோதமாகும்.
தேர்தல் நேரங்களில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் கார்கள் நிச்சயம் மீடியாக்களில் இடம்பெறும். இதனால் இந்த நேரங்களில் வாகனங்களில் அனைத்து ஆவணங்களையும் சரியாக வைத்திருக்க பலர் முயற்சி செய்வார்கள். ஆனால் குறிப்பிட்ட சம்பவத்தில் சட்ட விதிமுறைகளை மீறி எம்எல்ஏ தனது காரை வைத்திருந்தது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரிய வாகனங்களை பயன்படுத்தும் பலர் தங்கள் வாகனத்தின் முன்பக்கம் ஃபுல்பார்கள் பயன்படுத்துகிறார்கள். இது முற்றிலும் சட்ட விரோதமாகும் இது காரில் பயணிப்பவர்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். இது போன்ற ஃபுல் பார்கள் அதிகமாக அரசியல்வாதிகள் கார்களில் பொருத்தப்படுகிறது. இதற்கு தற்போது உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









