3 மணி நேரம் ஆக கூடிய இடத்துக்கு 19 நிமிஷத்துல போயிரலாம்! இளையராஜா பாடலை கேட்டுட்டே பறக்கலாம்!
போக்குவரத்து நெரிசலில் சென்னைக்கே டஃப் கொடுக்கும் நகரங்கள் இந்தியாவில் பல உள்ளன. அதில் மிக முக்கியமான பெங்களூரு இருக்கின்றது. உலகின் மிகவும் கடுமையான போக்குவரத்தை நெரிசலைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் பெங்களூருவுக்கு முன்னணி இடம் உள்ளது. இத்தகைய நகரத்திலேயே விரைவில் போக்குவரத்தை துரிதப்படுத்தும் நோக்கில் சர்ளா ஏவியேசன் (Sarla Aviation) எனும் பறக்கும் டாக்சி (Flying Taxi)-யை பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் நிறுவனமே சர்ளா ஏவியேசன் ஆகும்.
இது நகரத்தில் பறக்கும் டாக்சியை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்காக கெம்பேகவுடா பெங்களூரு சர்வதேச விமான நிலையம் (Bangalore International Airport), உடன் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது. ஆகையால், விரைவில் பெங்களூருவில் பறக்கும் டாச்சி பயன்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சர்ளா ஏவியேசன், நகரத்தில் மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் டாக்சி (Electric flying taxi)யையே பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றது.

இது போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயணிக்க விரும்புவோருக்கு பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இது மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் டாக்சி மட்டுமல்ல செங்குத்தாக டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் திறன் கொண்ட பறக்கும் வாகனமே அது ஆகும். ஆகையால், இந்த பறக்கம் வாகனத்திற்கு விமானங்களுக்கு தேவைப்படுவதைப் போல தனி ஓடுதளம் அல்லது இறங்கு தளம் தேவைப்படாது.
தொடர்ந்து, ஹெலிபேடைப் போல ஒதுக்கப்பட்ட சமதளமான நில பகுதி இருந்தாலே போதும். அந்த பறக்கும் டாக்சி தரையிறங்கியும், வானில் பறக்கவும் தொடங்கிவிடும். மேலும், இந்த பறக்கும் வாகனம் மிகப் பெரிய அளவில் போக்குவரத்து நேரத்தைச் சேகரிக்கும் என கூறப்படுகின்றது. உதாரணமாக, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு எலெக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கு செல்ல வெறும் 19 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும் என கூறப்படுகின்றது.
டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் ஆகிய நேரங்களும் இதில் உள்ளடங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. சுமார் 52 கிமீ இடைவெளியைக் கொண்டதே இந்த இரு இடங்களும் ஆகும். வழக்கமாக சாலை மார்க்கமாக செல்ல வேண்டும் எனில், இப்போது இருக்கும் டிராஃபிக் உள்ளிட்ட காரணங்களினால் குறைந்தபட்சம் மூன்று நேரமாவது இந்த இடங்களுக்கு செல்ல எடுத்துக் கொள்ளும்.
இவ்வளவு அதிக நேரத்தையே மிகப் பெரிய அளவில் மிச்சப்படுத்த வருகின்றது சர்ளா ஏவியேசன் நிறுவனத்தின் மின்சார பறக்கும் டாக்சி சேவை. இந்த நிறுவனம் பெங்களூருவில் மட்டுமல்ல இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களான மும்பை, டெல்லி மற்றும் புனே ஆகிய நகரங்களிலும் தன்னுடைய சேவையைத் தொடங்க இருக்கின்றது.
என்னங்க இந்த லிஸ்ட்டுல சென்னையை காணோமே என நீங்கள் நினைக்கலாம். சென்னையில், தமிழக அரசும், உலக புகழ்பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் (Boeing)-ம் இணைந்தே பறக்கும் டாக்சி சேவையை பயன்பாட்டில் கொண்டு வர இருக்கின்றன. இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமீப காலமாகவே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஆகையால், விரைவில் நம்முடைய சென்னையிலும் பறக்கும் டாக்சி பயன்பாட்டிற்கு வந்துவிடும் என தெரிகின்றது. இதுமட்டுமில்லைங்க, சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் இ-பிளேன் (ePlane)-ம் சென்னையின் முக்கிய பகுதிகளையும் அண்டை நகரங்களையும் இணைக்கும் பொருட்டு பறக்கும் டாக்சி சேவையை பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆகையால், பெங்களூரு வாசிகள் மட்டுமல்ல விரைவில் சென்னை வாசிகளாலும் பறக்கும் டாக்சி சேவையை அனுபவிக்க முடியும். சர்ளா ஏவியேசன் என்ன மாதிரியான திறன் கொண்ட பறக்கும் டாக்சியை பயன்பாட்டிற்குக் கொண்டு வர போகின்றது என்கிற விபரங்கள் வெளியாகவில்லை. குறிப்பாக, அதில் எத்தனை பேர் பயணிக்க முடியும்?, எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்?, எவ்வளவு வேகத்தில் பயணிக்கும்? மற்றும் கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படும்? என்பது பற்றிய விபரங்களை அறிவிக்கவில்லை. விரைவில் இதுகுறித்த அனைத்து தகவல்களையும் அது வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களை வைத்து பார்க்கையில் விரைவில் சென்னையில் மட்டுமல்ல இந்தியாவின் பிற முக்கிய நகரங்களிலும் பறக்கும் டாக்சி சேவையை பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஆனால், எந்த நகரத்தில் முதலில் வரும் என்பதே தற்போது கேள்விக் குறியாக உள்ளது. நீங்கள் எந்த நகரம் முதலில் பறக்கும் டாக்சியை பெறும் என எதிர்பார்க்கின்றீர்கள் என்பதை கமெண்டில் சொல்லவும்.


Click it and Unblock the Notifications








