ஒரு செகண்ட் ஹார்ட்டே நின்றுச்சு! உங்க குழந்தைங்க பத்திரமா இருக்கணும்னா மொதல்ல இந்த வீடியோவை போட்டு காட்டுங்க!
இந்திய சாலைகளில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சாலை விபத்துக்கள் (Road Accidents) நடைபெற்று வருகின்றன. இதில் உயிரிழப்பவர்கள் மற்றும் படுகாயம் அடைபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிமாக உள்ளது. இந்தியாவில் சாலை விபத்துக்களில் சிக்கி ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு சிறு அலட்சியமே காரணமாக உள்ளது. குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் சிறு அலட்சியத்தால் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பது மிகவும் வேதனையான விஷயம். அவர்களுக்கு சாலை விபத்துக்கள் தொடர்பாக போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாததுதான் இதற்கு மிக முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.

இந்த வரிசையில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு கொடூரமான சாலை விபத்து ஒன்று நடைபெறவிருந்தது. ஆனால் இந்த சாலை விபத்தில் இருந்து பள்ளி மாணவி ஒருவர் நூலிழையில் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார். இந்த வீடியோ (Video) தற்போது வெளியாகி, அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இந்த வீடியோவில், பள்ளி மாணவி ஒருவர், ஒரு பள்ளி வேனுக்கு பின்னால் இருந்து சாலையை கடக்க முயல்வதை நம்மால் காண முடிகிறது. அப்போது எதிர் திசையில் மற்றொரு பள்ளி வேன் வந்தது. ஒரு பெரிய வாகனத்தின் பின்னால் நின்று கொண்டு சாலையை கடக்க முயன்றதால், எதிர் திசையில் மற்றொரு பள்ளி வேன் வந்தது மாணவிக்கு தெரியவில்லை.

ஆனால் நல்லவேளையாக எதிர் திசையில் வந்த பள்ளி வேன், மாணவி மீது மோதவில்லை. ஒரு கட்டத்தில் எதிர் திசையில் வேன் வருவது தெரிந்து மாணவி நின்று விட்டார். ஆனால் ஒரு நொடி தாமதம் செய்திருந்தால் கூட, மாணவியின் மீது வேன் பயங்கரமாக மோதியிருக்கும். இதன் விளைவுகளை நினைத்து பார்க்க கூட முடியவில்லை.
சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில், இந்த காட்சி பதிவாகியுள்ளது. சைபராபாத் போக்குவரத்து காவல் துறையினர் இதனை தங்கள் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளனர். எனவே இந்த சம்பவம் சைபராபாத் பகுதியில் நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. சைபராபாத் என்பது, ஐதராபாத் நகரை ஒட்டியிருக்கும் பகுதியாகும்.
பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே சைபராபாத் போக்குவரத்து காவல் துறையினர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். இரு புறமும் நன்றாக கவனித்து விட்டு, வாகனங்கள் எதுவும் வரவில்லை என்பதை உறுதி செய்த பிறகுதான் சாலையை கடக்க வேண்டும் என்பதை பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டும்.
அப்போதுதான் சாலை விபத்துக்களை தவிர்க்க முடியும். சிறு அலட்சியம் கூட, மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதை அனைவரும் நன்றாக உணர வேண்டும். குறிப்பாக சாலைகளை கடப்பதற்கு சுரங்க பாதைகள் அல்லது நடை மேம்பாலங்கள் இருந்தால், அவற்றை பயன்படுத்தும்படி, குழந்தைகளை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சாலைகளை கடப்பதற்கு சுரங்க பாதைகள் மற்றும் நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை பயன்படுத்த பலரும் தயங்குகின்றனர். நேரம் ஆகிறது என்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணம். ஆனால் நேரத்தை பொருட்படுத்தாமல், சுரங்க பாதைகள் மற்றும் நடை மேம்பாலங்களை பயன்படுத்துவதுதான் நல்லது.


Click it and Unblock the Notifications