நூலிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டி... அதிவேகமாக பறந்த கார் ஓவர் டேக் செய்யும் அதிர்ச்சி வீடியோ!
இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞரை அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று மிக ஆபத்தானநிலையில் ஓவர் டேக் செய்யும் வீடியோக் காட்சி வெளியாகியுள்ளது. இந்த காட்சி பார்ப்போரை ஒரு நிமிடம் உறைய வைக்கின்ற வகையில் உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இணையத்தில் பல வீடியோக்கள் வைரலாவதை நம்மால் காண முடிகின்றது. அந்தவகையில், இருசக்கர வாகன ஓட்டி ஒருவரை கார் ஒன்று மிகவும் அபாயமான முறையில் கடந்துச் செல்லும் வீடியோக் காட்சி ஒன்று தற்போது மிக வேகமாக வைரலாகி வருகின்றது.

இந்த சம்பவம் சற்று பழைய சம்பவம் என தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில், வீடியோ காட்சியில், கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த சம்பவம் நடைபெற்றிருப்பதைக் காட்டுகின்றது. ஆனால், இந்த வீடியோ நெட்டிசன்களின் புண்ணியத்தில் தற்போதுதான் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கர்நாடகா மாநிலத்தின் டிசிஆர்-இகேஎம் நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. இதுகுறித்த வீடியோ காட்சியினை அனில் சிடி என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

வீடியோவில், கேஎஸ்ஆர்டிசி-க்கு சொந்தமான அரசு பேருந்து மிதமான வேகத்தில் சாலையின் வலது புறம் சென்றுக் கொண்டிருக்கின்றது. அதனை அதிவேகமாக செல்லும் ஹூண்டாய் எலன்ட்ரா கார் ஓவர் டேக் செய்து செல்லுகின்றது. இதனை கண் மூடித் தனமாக தொடர்ந்து வந்த மற்றுமொரு கார் அதே வேகத்தில் பேருந்தைக் கடக்க முயற்சிக்கின்றது.

அந்த நேரத்தில் சாலையின் இடது புறத்தில் சுஸுகி அக்செஸ் ஸ்கூட்டர் ஒன்றும் சென்றுக் கொண்டிருந்தது. இதையறியாமல் வந்த கார், ஸ்கூட்டரைக் கண்டதும் சமயோஜிதமாக யோசித்து சற்று லேசாக வலப்பக்கம் திருப்பி, பைக் மற்றும் பேருந்திற்கு நடுவில் செல்கின்றது. ஓட்டுநரின் இந்த செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கண்மூடித் தனமாக வந்த கார் டொயோட்டா இன்னோவா என கூறப்படுகின்றது. ஓட்டுநர் சற்று யோசிக்காமல் செயல்பட்டிருந்தால் மிகப் பெரியளவிலான பின்விளைவுகள் ஏற்பட்டிருக்கும். இதன்காரணமாக சாலையில் மிதமான, கட்டுப்படுத்தக் கூடிய வேகத்தில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் கார் ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டி இருவர் மீதும் தவறிருப்பதை நம்மால் காண முடிகின்றது.
இதில், கார் ஓட்டுநர் அதிவேகமாக சென்றது மட்டுமில்லாமல், கண்மூடித் தனமாக வெறொரு காரை பின் தொடர்ந்து குற்றமாகப் பார்க்கப்படுகின்றது. தனக்கு முன்னால் அரசு பேருந்து சென்றுக் கொண்டிருக்கும் வேலையிலும், வேகத்தைக் குறைக்காமல் அதே வேகத்தில் சென்றதே இந்த சூழ்நிலைக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
அதேபோன்று, இருசக்கர வாகன ஓட்டியும் நெடுஞ்சாலையில் மிக ஜாலியாக பொறுமையாக சென்றதும் இந்த சம்பவத்திற்கு ஓர் காரணம். பொதுவாக நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தில் செல்ல வேண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதனை மீறும் வகையில் மிகவும் பொறுமையாக அக்செஸ் ஸ்கூட்டரின் உரிமையாளர் ஜாய் ரைடிங் செய்துள்ளார்.

இதுபோன்று, பொறுமையாக செல்லும் வாகன ஓட்டிகள் சர்வீஸ் சாலையை பயன்படுத்த வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் இத்தகைய சூழலை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.


Click it and Unblock the Notifications








