கண்ட கண்ட இடங்களில் வண்டியை நிறுத்துபவர்களுக்கு செக்... இந்தியாவில் இப்படி ஒரு சட்டமா? இதை யாருமே எதிர்பாக்கல!
கண்ட கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு செக் வைக்கும் வகையில், மிகவும் வித்தியாசமான சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது என்பது சர்வ சாதாரணமாக நடக்கும் விஷயங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு பெரும்பாலான வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமுறைகளை பொருட்படுத்துவதில்லை. இந்தியாவில் சாலை விபத்துக்கள் மிகவும் அதிகமாக நடைபெறுவதற்கு இது முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

இதுதவிர வாகன உரிமையாளர்கள் பலர் பார்க்கிங் விதிமுறைகளை மீறுவதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையும் ஏற்பட்டு வருகிறது. சாலைகளை ஆக்கிரமித்து பலர் தங்கள் வாகனங்களை நிறுத்தி கொள்கின்றனர். இதன் காரணமாக சாலைகளின் அளவு சுருங்கி, மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலைமை ஏற்படுகிறது.

இந்திய சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது. இந்த சூழலில், இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி அதிரடி திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். இந்த திட்டம் தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

வாகன உரிமையாளர்கள் யாராவது பார்க்கிங் விதிமுறைகளை மீறினால், அந்த புகைப்படத்தை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கும்படி, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தற்போது குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தவறான இடங்களில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தாலும் புகைப்படங்களை அனுப்பும்படி அவர் வலியுறுத்தியுள்ளார்.

பார்க்கிங் விதிமுறைகளை மீறிய வாகனங்களின் புகைப்படங்களை அனுப்புவோருக்கு 500 ரூபாய் சன்மானம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். விதிமுறையை மீறிய நபருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்பட்சத்தில், புகைப்படத்தை அனுப்பியவருக்கு 500 ரூபாய் வெகுமதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில், ''பெரு நகரங்களில் பார்க்கிங் பிரச்னை வேகமாக அதிகரித்து வருகிறது. நான் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரப்போகிறேன். இந்த சட்டத்தின் கீழ், தவறான இடத்தில் பார்க்கிங் செய்யப்பட்ட வாகனத்திற்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டால், அந்த புகைப்படத்தை அனுப்பிய நபருக்கு 500 ரூபாய் கிடைக்கும்.

இதன் மூலம் பார்க்கிங் பிரச்னைகள் தீரும்'' என்றார். ஆனால் இந்த சட்டம் எப்போது அமலுக்கு வரும்? என்பது குறித்த தகவல் எதுவும் தற்போது நமக்கு கிடைக்கவில்லை. இதற்கிடையே ஒரு சிலர் தங்கள் வாகனங்களுக்கு பார்க்கிங் இடத்தை உருவாக்குவதற்கு பதிலாக, சாலைகளை ஆக்கிரமித்து கொள்கின்றனர் எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வெளிப்படையாக பேசக்கூடியவர் என்பது நமக்கு தெரியும். மேலும் சாலை பாதுகாப்பிற்காக பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் அவர் எடுத்து வருகிறார். இதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். இதனால் பார்க்கிங் விதிமுறைகள் தொடர்பாக அவர் தற்போது தெரிவித்துள்ள புதிய சட்டம் விரைவில் அமலுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

சாலை பாதுகாப்பு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் வகையில் மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களுக்கு மாறுவது ஆகிய விஷயங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் பேசி வருகிறார். இந்த இரண்டு விஷயங்களிலும் இந்தியாவை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் அவரது அமைச்சகம் எடுத்து வருகிறது.

உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்தியாவில் தற்போது தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்கும் பணிகள் வேகம் எடுத்திருப்பது, போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டிருப்பது, எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவது போன்றவற்றை இதற்கு உதாரணங்களாக சொல்ல முடியும்.

எனவே இந்தியாவின் பார்க்கிங் பிரச்னைக்கும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் விரைவில் நல்ல தீர்வை காணும் என எதிர்பார்க்கலாம். இதன் மூலம் சாலைகளில் ஆக்கிரமிப்பு குறைந்து, போக்குவரத்து சீரடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications