முதல் அமைச்சரால் இப்படி ஒரு பிரச்னையா! கத்தி படத்தை விஞ்சும் வகையில் தரமான சம்பவத்தை செய்த முதியவர்!
கர்நாடக மாநில முதல் அமைச்சர் சித்தராமையா தற்போது பெங்களூர் நகரில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இந்த வீட்டிற்கு வெளியே தற்போது பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. சித்தராமையாவின் வீட்டிற்கு எதிரே குடும்பத்துடன் வசித்து வரும் முதியவர் ஒருவர்தான் இந்த பரபரப்பிற்கு காரணம்.
ஆம், அந்த முதியவர் சித்தராமையாவின் காரை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு பின்னாலும் காரணங்கள் இல்லாமல் இல்லை. வாகன பார்க்கிங் தொடர்பாக அந்த முதியவரும், அவரது குடும்பத்தினரும் சமீப காலமாக சந்தித்து வரும் பிரச்னைகள்தான், அந்த முதியவரை இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட தூண்டியுள்ளது.

சம்பந்தப்பட்ட முதியவரின் பெயர் நரோட்டம் என்பது தெரியவந்துள்ளது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், சித்தராமையாவின் வீட்டிற்கு எதிரே அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த சூழலில், முதல் அமைச்சர் என்பதால் சித்தராமையாவை சந்திப்பதற்கு நிறைய பேர் வருகின்றனர். அவர்களில் பலர், நரோட்டம் வீட்டின் நுழைவாயிலை மறித்து தங்கள் வாகனங்களை நிறுத்துவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக நரோட்டம் மற்றும் அவர்களது குடும்பத்தினரால், அவர்களுடைய வாகனங்களை வெளியே எடுக்க முடிவதில்லையாம். அத்துடன் வெளியிடங்களில் இருந்து வீடு திரும்பும்போது, வாகனங்களை உள்ளே கொண்டு செல்லவும் முடிவதில்லையாம். இந்த பிரச்னையை சரி செய்ய வேண்டும் என்பதற்காகவே, சித்தராமையாவின் காரை நரோட்டம் மறித்துள்ளார்.

ஆரம்பத்தில் சித்தராமையாவின் பாதுகாவலர்களிடம், நரோட்டம் பேசியுள்ளார். ஆனால் சரியான பதில் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால்தான் சித்தராமையாவின் காரை, நரோட்டம் மறித்துள்ளார். இந்த சம்பவத்ததையடுத்து, சித்தராமையா தனது காரின் ஜன்னல் கண்ணாடிகளை கீழே இறக்கினார். அத்துடன் இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி தனது பாதுகாவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்த பிரச்னை குறித்து நரோட்டம் கூறுகையில், ''எனது வீட்டு வாசலுக்கு முன்பு சிறிது இடம் விட்டு வாகனங்களை நிறுத்தும்படி, இங்கு வருபவர்களிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறேன். ஆனால் யாரும் அதனை பொருட்படுத்துவதாக இல்லை. எனவே எனது வீட்டு வாசலுக்கு முன்பு வாகனங்களை நிறுத்தியவர்களை தினமும் காலையில் தேட வேண்டியதாக இருக்கிறது.
அவர்களை கண்டறிந்த பின், வாகனங்களை எடுங்கள் என கெஞ்ச வேண்டியதாக உள்ளது. கடந்த 5 வருடங்களாக இந்த பிரச்னை நடைபெற்று கொண்டுள்ளது. போதாக்குறைக்கு சித்தராமையா தற்போது மீண்டும் முதல்வராக மாறி விட்டார். எனவே அவரை சந்திக்க வருபவர்களின் எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்துள்ளது.
இந்த பிரச்னை குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''நரோட்டம் வீட்டின் முன்பாக பலர் வாகனங்களை நிறுத்தி கொண்டுள்ளனர் என்பது உண்மைதான். முதல்வர் சித்தராமையாவை சந்திக்க வருபவர்கள், அதிகாரம் மிக்கவர்களாக உள்ளனர். அவர்களிடம் சென்று வாகனங்களை எடுங்கள் என எங்களால் கூற முடியவில்லை'' என்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பிரச்னை நரோட்டமிற்கு மட்டும் ஏற்படவில்லை. நம்மில் பலரும் தினமும் இந்த பிரச்னையை சந்தித்து கொண்டுதான் உள்ளோம். வீட்டு வாசலின் முன்பு வாகனங்களை நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைத்தாலும் கூட, ஒரு சில வாகன உரிமையாளர்கள் அதனை கண்டுகொள்வதில்லை.
யாருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் நாம் வாகனங்களை நிறுத்த வேண்டும். அப்போதுதான் வாகன போக்குவரத்து அனைவருக்கும் எளிமையானதாக இருக்கும். இதுபோன்ற பிரச்னைகளை தவிர்ப்பதற்கு அரசு தேவையான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்பதுதான், இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டு வரும் பலரின் எண்ணமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








