லைசன்ஸ் வாங்க கூட இன்னும் வயசு எட்டல... பிராண்ட்-நியூ கார் உடன் நிற்கும் டிவி சீரியல் நடிகர்!!
ஒரு சில சமயங்களில் திரைப்படங்களுக்கு கிடைக்காத வரவேற்பு கூட தொலைக்காட்சி சீரியல்களுக்கு கிடைப்பதை பார்க்க முடியும். ஏனெனில், டிவி சீரியல்கள் (TV Serials) நேரடியாக மக்களின் வீட்டிற்குள்ளேயே சென்று அவர்களின் மனதில் இடம்பிடித்து விடுகின்றன. அதாவது, திரையரங்குகளுக்கு செல்லாதவர்கள் கூட சீரியல் தொடர்களுக்காக டிவி முன் மூழ்கி கிடப்பதை பார்க்கலாம். அதுமட்டுமின்றி, டிவி சீரியல்கள் தினந்தோறும் நீண்ட நாட்களுக்கு ஒளிப்பரப்பப்படுவதால், இடையில் மக்களை கவர்வதில் கோட்டை விட்டாலும், அதன்பின் விட்ட இடத்தை பிடிப்பதற்கு அவகாசம் உள்ளது. இதனாலேயே டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகியவர்கள் ஏராளம்.
அதேபோல், கேரளாவிலும் டிவி சீரியல்கள் மூலமாக பலர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். அத்தகையவர்களுள் ஒருவர்தான், அல் சபித் (Al Sabith). கேரளாவின் கலஞ்சூர் (Kalanjoor) என்கிற கிராமத்தில் பிறந்தவரான அல் சபித்துக்கு தற்சமயம் 17 வயது மட்டுமே ஆகிறது. ஆனால் அதற்குள் தனது குடும்பத்திற்காக புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்.

இதற்கெல்லாம் அல் சபித் நடிப்பில் ஹிட்டான 'உப்பும் மிளகும்' (Uppum Mulakum) என்கிற டிவி சீரியல் மட்டும் தான் காரணம் என சொல்ல முடியாது. ஏனெனில், தனது 2 வயதில் இருந்தே அல் சபித் நடிக்க ஆரம்பித்துவிட்டார் என சொன்னால் நம்ப முடிகிறதா? அதாவது, அப்போதே அல் சபித்தின் குடும்பம் அவரை நடிக்க அனுப்பியது. 2 வயதில் 'லார்ட் அய்யப்பன்' என்கிற ஆல்பம் பாடலில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
அதன்பின், அல் சபித் வளர வளர சினிமாவை நோக்கிய அவரது பயணமும் வளர ஆரம்பித்தது. சிறுவனாக இருக்கும்போதே அவ்வப்போது சில டிவி ரியாலிட்டி மற்றும் உரையாடல் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட அல் சபித்துக்கு 2015இல் உப்பும் மிளகும் என்கிற டிவி சீரியலில் 'கேசவ்' என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் பெரியர்கள் மட்டுமின்றி, சிறுவர்களையும் கவரும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டதால், அல் சபித்தின் நடிப்பு திறனுக்கு சரியான தீனியாக அமைந்தது.
சுமார் 1800 எபிசோட்களுக்கும் மேல் ஓடிக் கொண்டிருக்கும் உப்பும் மிளகும் சீரியலில் நடித்ததன் மூலமாக, இடையிடையே சில மலையாள திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்ற அல் சபித், தற்போது புதியதாக பிராண்ட்-நியூ கியா சொனெட் (Kia Sonet) காரை வாங்கியுள்ளார். அம்மா உடன் ஷோரூமுக்கு சென்று காரை டெலிவிரி பெறும் படங்களை அல் சபித் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த இன்ஸ்டாகிராம் பதிவில், "நேசிப்பவர்களுக்கு எப்போதும் நன்றி" என அல் சபித் குறிப்பிட்டுள்ளார். இவர் வாங்கியிருப்பது கருப்பு நிறத்திலான சொனெட் கார் ஆகும். இந்த கருப்பு நிறத்தை அரோரா பிளாக் பேர்ல் (Aurora Black Pearl) என கியா நிறுவனம் அழைக்கிறது. மொத்தம் 6 விதமான சிங்கிள்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களிலும், 4 ட்யூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களிலும் கியா சொனெட் கார் விற்பனை செய்யப்படுகிறது.

கியாவின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி (Sub-compact SUV) காராக விளங்கும் சொனெட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.15.77 லட்சம் வரையில் உள்ளன. 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் T-GDI டர்போ பெட்ரோல் என 2 விதமான பெட்ரோல் எனஜின்களிலும், 1.5 லிட்டர் CRDi டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் சொனெட் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வருகிற 2025 மே மாதம் வந்தால்தான் நடிகர் அல் சபித்துக்கு 18 வயதாகிறது. அதாவது, அதன் பின்புதான் அவருக்கு டிரைவிங் லைசன்ஸ் (Driving Licence)-ஏ கிடைக்கும். ஆனால், அதற்குள்ளாகவே பிராண்ட்-நியூ கார் ஒன்றை சொந்தமாக்கி உள்ளார். கியா சொனெட் காரின் எந்த வேரியண்ட்டை அல் சபித் வாங்கி உள்ளார் என்பது உறுதியாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








