அம்மாவின் ஆசியில் புதுசு புதுசாக கார் வாங்கும் சீரியல் நடிகர்... டாடா உருவாக்கும் விலைமிக்க காருக்கு ஓனர்!!
திரைத்துறையை சேர்ந்தவர்கள் அவ்வப்போது புது, புது கார்களை வாங்குவார்கள் என்பதை பலமுறை பார்த்துள்ளோம். குறிப்பாக, பாலிவுட் சினிமாக்காரர்கள் மாதத்திற்கு ஒரு கார் என்கிற அளவிற்கு அடிக்கடி கார்களை வாங்குவதை பார்த்து வருகிறோம். பாலிவுட் நடிகர்களுக்கு நாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டும் விதமாக நம்ம கோலிவுட் நடிகர், நடிகைகளும் புதுசு, புதுசாக கார்களை வாங்குகின்றனர். அந்த வகையில் சீரியல் நடிகர் ஒருவர் விலையுயர்ந்த டாடா காரை வாங்கியுள்ளார். யார் அந்த சீரியல் நடிகர் என்பதையும், அவர் வாங்கியுள்ள டாடா காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டாடா கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக, சமீப காலங்களில் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்த நெக்ஸான், பஞ்ச் உள்ளிட்ட கார்களுக்கு சிறப்பான தேவை உள்ளது. அதேபோல், ஹெரியர், சஃபாரி என்கிற சற்று விலைமிக்க டாடா கார்களையும் ஒவ்வொரு மாதத்திலும் ஆயிரக்கணக்கில் மக்கள் வாங்குகின்றனர்.

தற்போது நாம் இந்த செய்தியில் பார்க்கவுள்ள சீரியல் நடிகர் வாங்கியிருப்பது, டாடா ஹெரியர் (Tata Harrier) கார் ஆகும். டாடா மோட்டார்ஸின் பிரீமியம் தரத்திலான 5-இருக்கை எஸ்யூவி காராக ஹெரியர் விளங்குகிறது. இத்தகைய காரை வாங்கியிருக்கும் சீரியல் நடிகர் வேறு யாருமில்லை, பூவே பூச்சுடவா சீரியலில் நடித்துவரும் தினேஷ் கோபால்சாமி ஆவார்.
பிரபல நடிகர் ஜெய்யின் திருமணம் எனும் நிக்காஹ் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமான தினேஷ் 2010இல் வெளிவந்த மகான் என்கிற தொலைக்காட்சி சீரியலின் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தினேஷ் பங்கேற்றது உங்களுக்கு தெரிந்திருக்கும். தற்சமயம், இவரது நடிப்பில் பூவே பூச்சுடவா மற்றும் நாச்சியார்புரம் என்கிற தொலைக்காட்சி சீரியல் தொடர்கள் ஒளிப்பரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்தான், புதியதாக டாடா ஹெரியர் கார் ஒன்றை தினேஷ் கோபால்சாமி அவரது அம்மா உடன் ஷோரூமுக்கு சென்று வாங்கியுள்ளார். இதனை இன்ஸ்டாகிராமில் படங்களுடன் தினேஷ் தெரிவித்துள்ளார். இந்த இன்ஸ்டா பதிவில், "உங்களது வாழ்நாளில் நீங்கள் பெறும் சிறந்த பரிசானது உங்களது பெற்றோர்களின் ஆசிர்வாதம் ஆகும்" என தினேஷ் குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த இன்ஸ்டாகிராம் பதிவிற்கு, பிக்பாஸ் தமிழ் 7வது சீசன் வெற்றியாளரான அர்ச்சனா, "வாவ்! வாழ்த்துக்கள் அண்ணா" என கமெண்ட் செய்துள்ளார்.
டாடா ஹெரியர் காரை நடிகர் தினேஷ் கோபால்சாமி ஒபேரன் கருப்பு நிறத்தில் வாங்கியுள்ளார். இது இல்லாமல், சீவீட் பச்சை, பெப்பிள் கிரே, ஆஷ் கிரே, சன்லிட் மஞ்சள், கோரல் சிவப்பு மற்றும் லூனார் வெள்ளை உள்ளிட்ட பெயிண்ட் ஆப்ஷன்களிலும் ஹெரியர் கார் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்மார்ட், பியூர், அட்வென்ச்சர், ஃபியர்லெஸ் என 4 விதமான வேரியண்ட்களில் ஹெரியர் விற்பனை செய்யப்படுகிறது.

இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.14.99 லட்சத்தில் இருந்து ரூ.26.44 லட்சம் வரையில் உள்ளன. இதில் எந்த வேரியண்ட்டில் டாடா ஹெரியரை சீரியல் நடிகர் தினேஷ் வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. 2.0 லிட்டர் க்றையோடெக் டீசல் என்கிற ஒரேயொரு என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே ஹெரியர் விற்பனை செய்யப்படுகிறது. மற்றப்படி, பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் எதுவும் இந்த காரில் வழங்கப்படுவதில்லை.
டாடா மோட்டார்ஸின் இம்பேக்ட் 2.0 டிசைனில் உருவாக்கப்பட்ட ஹெரியர் காரில் ஹெட்லைட்கள் பம்பரில் பொருத்தப்படுகின்றன. 17-இன்ச் 5-ஸ்போக் அலாய் சக்கரங்களை பெறும் டாடா ஹெரியர் காரில் தொழிற்நுட்ப அம்சங்களாக 8.8-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஜேபிஎல் ஆடியோ, டிரைவிங் மோட்கள் மற்றும் பிரேக் டிஸ்க் வைபிங் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: க்ளோபல் என்சிஏபி-இல் 5க்கு 5 ஸ்டார்களை பெற்று தரமான கார் என்கிற முத்திரையை பெற்ற டாடா கார்களுள் ஹெரியரும் ஒன்று. இத்தகைய காரை தான் டிவி சீரியல் நடிகர் தினேஷ் கோபால்சாமி வாங்கியுள்ளார். இந்த காரை வாங்குவது மிடில்-கிளாஸ் மக்களுக்கு கடினமான காரியமே. ஆனால், பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள நடிகருக்கு இது எல்லாம் பெரிய விஷயமாகவே இருக்காது. இருப்பினும், இந்த ஹெரியர் காரை தனது வாழ்நாள் பரிசாக தினேஷ் எண்ணுகிறார் என்பது அவரது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலமாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications









