ஆடி காரில் குடும்பம் நடத்திய சீரியல் நடிகை... அவரே சொன்ன பரபரப்பு தகவல் - யாருக்கும் இந்த நிலைமை வர கூடாது!!
நமது எல்லாரது வாழ்விலும் மோசமான நிகழ்வு என்பது நிச்சயமாக இருக்கும். சிலருக்கு, வாழ்வின் ஒட்டுமொத்த பிடிப்பும் விட்டு போகும் அளவிற்கு கூட சம்பவங்கள் நடைபெற்று இருக்கலாம். அவ்வாறான ஒரு சம்பவமே அசாம் மாநிலத்தின் பிரபல டிவி சீரியல் நடிகை ஒருவருக்கு நடந்துள்ளது. அதன் விளைவாக ஒரே நாளில் தெருக்கோடிக்கு வந்த அந்த நடிகை 4 நாட்களுக்கு தங்க வீடு இல்லாமல் தனது ஆடி ஏ6 காரில் தங்கியதாக பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். யார் அந்த நடிகை என்பதையும், அவரது இந்த நிலைமைக்கான காரணத்தையும், 4 நாட்களாக அவர் பயன்படுத்திய ஆடி ஏ6 காரை பற்றியும் இனி விரிவாக பார்க்கலாம்.
கார்களில் படுத்து உறங்குவது ஆபத்தானது என்பதை பலமுறை நமது செய்தித்தளத்தில் தெரிவித்துள்ளோம். ஏனெனில், ஜன்னல்கள் அனைத்தையும் மூடிக் கொண்டு, ஏசி காற்றில் படுத்து உறங்கும்போது, நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளியேற வழியில்லாமல், அங்கேயே சுற்றிக் கொண்டிருப்பதால் ஒரு கட்டத்திற்குமேல் நமக்கு மூச்சடைப்பு ஏற்படும்.

சரி, ஜன்னல்களை திறந்து வைத்துக் கொண்டு தூங்கலாம் என நினைத்தால், அது திருட்டு சம்பவங்களுக்கு வழிவகுக்கக்கூடும். ஆக மொத்தத்தில், கார்களில் நீண்ட நேரத்திற்கு படுத்து உறங்குவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால், சில நேரங்களில் வேறு வழியில்லாமல் அவ்வாறு காருக்குள் படுத்து உறங்க வேண்டியதாகி விடுகிறது. குறிப்பாக, சுற்றுலா செல்வோர் ஓட்டல் ரூம்களை புக் செய்ய முடியவில்லை என்றால் கார்களையே ரூம் ஆக பயன்படுத்துகின்றனர்.
நாம் இந்த செய்தியில் பார்க்கவுள்ள நடிகையும் வேறு வழியில்லாமல் 4 நாட்களுக்கு காரை தங்கும் இருப்பிடமாக பயன்படுத்தியவர் ஆவார். இந்த நடிகையின் பெயர் ரஷ்மி தேசாய் (Rashami Desai). அசாம் மாநிலத்தின் நகோன் நகரத்தில் பிறந்தவரான ரஷ்மி தேசாய் இந்தியில் உத்தரன் என்கிற தொலைக்காட்சி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமாகினார். 38 வயதாகும் ரஷ்மி தேசாய் தனது வாழ்வில் கடுமையான நாட்களை கடந்து, தற்போதுதான் மெல்ல மெல்ல தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்.

ரஷ்மி தேசாய்க்கும், நடிகர் நந்திஷ் சந்து என்பவருக்கும் 2012ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. ஆனால், அதன்பின் 3 வருடங்களில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன்பின், சுமார் ரூ.2.5 கோடி கடனில் வாங்கிய வீட்டை ரஷ்மி தேசாய் இழந்தார். அத்துடன், அந்த சமயத்தில் அவருக்கு மொத்தமாக ரூ.3.5 கோடி வரையில் கடன் இருந்தது. இந்த கடன் எல்லாம் அவரை துரத்த ஆரம்பித்தது.
கடனில் வீட்டை இழந்த ரஷ்மி தேசாய் தனது ஆடி ஏ6 காரில் 4 நாட்களுக்கு தங்கியுள்ளார். வேறு வழியில்லாமல், ரூ.20க்கு கிடைத்த உணவுகளை வாங்கி அந்த நாட்களை ஓட்டியுள்ளார். உடைமைகளை ரஷ்மி தேசாய் தனது மேனேஜரின் வீட்டில் வைத்திருந்துள்ளார். இந்த விஷயங்களை இப்போது பொது வெளிக்கு கொண்டுவந்திருப்பவர் வேறு யாருமில்லை, நடிகை ரஷ்மி தேசாய் தான். விவாகரத்துக்கு பின் தான் பட்ட கஷ்டங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஷ்மி தேசாய் நினைவுக்கூர்ந்துள்ளார்.

அந்த சமயத்தில் ரஷ்மி தேசாய்க்கு அவரது ஆடி ஏ6 கார் மட்டுமே உதவியாக இருந்துள்ளது. ஏ6 ஆனது ஆடி நிறுவனத்தின் சொகுசு செடான் ரக கார் ஆகும். தற்சமயம் ஆடி ஏ6 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.64.41 லட்சத்தில் இருந்து ரூ.70.79 லட்சம் வரையில் உள்ளன. பிரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி என மொத்தம் 2 விதமான வேரியண்ட்களில் ஆடி ஏ6 விற்பனை செய்யப்படுகிறது.
கடைசியாக 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆடி ஏ6 கார் அப்டேட் செய்யப்பட்டது. இந்த லக்சரி செடான் காரில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 241 பிஎச்பி மற்றும் 370 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த காரில் என்ஜினின் இயக்க ஆற்றல் ஆனது முன் சக்கரங்களுக்கு செல்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சொகுசு காராக இருப்பினும், 4 நாட்களுக்கு காருக்கு உள்ளேயே, அதுவும் தனந்தனி பெண்ணாக சீரியல் நடிகை ரஷ்மி தேசாய் வசித்து வந்திருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இதில் இருந்து அவரது மன தைரியத்தை அறிய முடிகிறது. உணவுக்கு கூட காசு இல்லாதவர் எப்படி ஆடி காரை 4 நாட்களுக்கு ஓட்டினார் என்பது தெரியவில்லை. ஏனெனில், லக்சரி கார்கள் பொதுவாகவே அதிக எரிபொருளை குடிக்கும் என்பதை நான் சொல்ல வேண்டியது இல்லை.


Click it and Unblock the Notifications









