பேய் வேடமணிந்து வாகன ஓட்டிகளிடம் சேட்டை... இளைஞர்களை பிடித்து உள்ளே வைத்த பெங்களூர் போலீசார்!
பேய் வேஷம் போட்டு வாகன ஓட்டிகளை பயமுறுத்திய போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பேய் வேஷம் போட்ட இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் விளையாட்டாக நினைத்து செய்த காரியம் இப்போது போலீஸ் நிலையம் வரை இழுத்துச் சென்றுவிட்டது.

எந்த ஒரு குறும்புத்தனத்துக்கும் எல்லை உண்டு. அது அடுத்தவர்களை பாதிக்காத வரையில் எளிதாக கடந்து செல்ல வாய்ப்புண்டு. ஆனால், சிலர் செய்யும் குறும்புத்தனங்கள் எல்லை மீறும்போது இந்த இளைஞர்களை போன்று கம்பி எண்ணக்கூட நேரிடும்.

வெளிநாடுகளில் பிசாசு போல வேடமணித்து பிறரை பயமுறுத்தும் வகையில் குறும்புத்தனம் செய்து வீடியோ வெளியிடுவது வழக்கம். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பெரிய வைரலாகிறது. பலர் இதனை ரசித்து கடந்து செல்வது வாடிக்கையாக இருக்கிறது.

இந்த நிலையில், பெங்களூரை சேர்ந்த இளைஞர்கள் இதே பாணியில் குறும்புத்தனம் செய்ய முயன்று சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 2.30 மணியளவில் யஷ்வந்த்பூர், ஷரீப் நகர் பகுதயில் இளைஞர்கள் சிலர், சாலையில் செல்வோரை அச்சமூட்டும் வகையில் குறும்புத்தனம் செய்துள்ளனர்.

பிசாசு போன்று வேடமணிந்து கொண்டு சாலையில் நடந்து செல்வோரையும், வாகன ஓட்டிகளையும் பயமுறுத்தும் வகையில் குறும்புத்தனத்தில் ஈடுபட்டுள்ளார். அதனை அவரது நண்பர்கள் மறைந்திருந்து வீடியோ பதிவு செய்துள்ளனர்.
காரில் தூங்கிக் கொண்டிருந்த வாடகை கார் டிரைவர், பைக்கில் வந்தவர், ஆட்டோ ஓட்டுனர், பாதசாரிகளை இந்த இளைஞர்களில் ஒருவர் பிசாசு வேடத்தில் பயமுறுத்தியது வீடியோக்கள் மூலமாக தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக, போலீசாருக்கு தகவல் பறந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை செய்தனர். அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் குறும்புத்தனத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டனர்.

இதில், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இந்த குறும்புத்தனத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, குறும்புத்தனம் செய்து வீடியோ எடுத்த சாஜீல் முகம்மது, நிவேத், ஷான் நல்லிக், முகம்மது அக்யூப், ஷாஹீப், சையத் நபீல், யூசுப் முகம்மது ஆகிய 7 இளைஞர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். யூ-ட்யூபில் பதிவு ஏற்றுவதற்காக இந்த வீடியோவை எடுத்துள்ளனர்.
அவர்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, அந்த இளைஞர்கள் உரிய விசாரணைக்கு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக இதுபோன்ற குறும்புத்தன வீடியோக்கள் பல இடங்களில் செய்யப்படுகிறது. இதில், சிலர் புரிந்து கொண்டு கடந்து செல்வது உண்டு. சிலர் அச்சமடைந்து ஓடுவதும் நடக்கிறது. இதுதொடர்பாக, போலீஸ் நிலையம் வரை இதுபோன்ற புகார்கள் சென்றதில்லை. முதல்முறையாக இந்த குறும்புத்தன வீடியோ எடுத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற குறும்புத்தனம் சில வேளையில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் வாய்ப்பையும், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனை அடிப்படையாக வைத்தே போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








