Rolls Royce Cullinan 10 கோடி ரூபாய் காரில் வந்தது அவரா! வெள்ளை கலர்ல இருக்கும்போதே லைட்டா சந்தேகம் வந்துச்சு!
இந்தியாவில் திரையுலக நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலர் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கார்களின் ரசிகர்களாக உள்ளனர். குறிப்பாக ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) காருக்கு, இந்திய கோடீஸ்வரர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
ரோல்ஸ் நிறுவனத்தின் வேறு எந்த ஒரு காருக்கும் இல்லாத பல்வேறு சிறப்புகள் கல்லினன் காருக்கு உண்டு. இதுதான் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும். அத்துடன் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் ஆல்-வீல் டிரைவ் (All-wheel Drive) காரும் இதுதான்.

இதுபோன்ற காரணங்களால் கோடீஸ்வரர்கள் பலர் போட்டி போட்டு கொண்டு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கி கொண்டுள்ளனர். ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் பிளாக் பேட்ஜ் (Black Badge) எடிசன் மாடலுக்கும் இந்திய சந்தையில் மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பு காணப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
வழக்கமான ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை காட்டிலும், பிளாக் பேட்ஜ் எடிசன் மாடலின் விலை மிகவும் அதிகம். ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசன் மாடலின் ஆன் ரோடு விலை (Price) சுமார் 10 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்த மாடலில் பொருத்தப்பட்டிருப்பது, 6.75 லிட்டர், ட்வின் டர்போசார்ஜ்டு பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆகும்.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 600 பிஎஸ் பவர் மற்றும் 900 என்எம் டார்க் திறனை வாரி வழங்கி, சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்ல கூடியது. வழக்கமான ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காருடன் ஒப்பிடும்போது, பிளாக் பேட்ஜ் எடிசன் மாடலின் பவர் அவுட்புட் 29 பிஎஸ் மற்றும் 50 என்எம் அதிகம் ஆகும்.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசன் மாடலை, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் (Shah Rukh Khan) சமீபத்தில் வாங்கினார். ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான பதான் (Pathaan) திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதை கொண்டாடும் விதமாகவே, ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசன் மாடலை, ஷாருக்கான் வாங்கியதாக கூறப்படுகிறது.
சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புடைய தனது புதிய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசன் மாடலில், ஷாருக்கான் வலம் வந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த காரில் இருந்து கீழே இறங்கி, ஷாருக்கான் ஒரு கட்டிடத்திற்குள் செல்வதை நம்மால் இந்த வைரல் வீடியோவில் (Viral Video) காண முடிகிறது.
ஷாருக்கான் சென்றது ஒரு தனியார் விமான நிலையம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயமும் உள்ளது. ஷாருக்கான் வாங்கியிருப்பது வெள்ளை நிற கார் ஆகும். அனேகமாக இதுதான் இந்தியாவின் முதல் வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசன் என கூறப்படுகிறது.
ஷாருக்கானுக்கு வெள்ளை நிறம் என்றால் மிகவும் பிடிக்கும். வெள்ளை தனக்கு மிகவும் பிடித்த நிறம் என்பதை ஷாருக்கானே கடந்த காலங்களில் கூறியுள்ளார். இதன் காரணமாகவே ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் எடிசன் மாடலை ஷாருக்கான் பிரகாசமான வெள்ளை நிறத்தில் வாங்கியுள்ளதாக தெரிகிறது.
ஷாருக்கான் வெள்ளை நிறத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசன் மாடலை வாங்கியுள்ள செய்தி மக்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான். எனவே வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசன் மாடல் சாலையில் வந்தபோது, உள்ளே ஷாருக்கான் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நிறைய பேர் அவரை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அதில் ஒரு சிலருக்கு மட்டுமே ஷாருக்கானின் தரிசனம் கிடைத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
ஷாருக்கான் போன்றவர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசன் போன்ற விலை உயர்ந்த கார்கள் எல்லாம் மாருதி காரை வாங்குவதை போன்ற சாதாரணமான விஷயம்தான். எனினும் கார் ரசிகரான ஷாருக்கான், வரும்காலங்களில் இன்னும் நிறைய ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்குவதற்கு நமது வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications








