எத்தனை பெண்களுக்கு புதுசா வேலை கிடைக்க போகுதோ! மெட்ரோ இரயில் நிலையங்களில் இனி இவங்களை பார்க்கலாம்!
நாடு முழுவதும் மெட்ரோ இரயில் சேவை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கேற்ப மெட்ரோ இரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறு, நாட்டின் போக்குவரத்து ஒருபக்கம் மாறிக் கொண்டே இருந்தாலும், மறுப்பக்கம் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுத்தான் இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு, மெட்ரோ இரயில்களில் பயணிக்கும் பெண்களுக்காக டெல்லி மெட்ரோ இரயில் நிர்வாகம் ஓர் அதிரடியான திட்டத்தை துவங்கி வைத்துள்ளது. நம் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகமும் இதை செய்யலாம் என கூறும் அளவிற்கு சிறப்பானதாக உள்ள இந்த திட்டத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
பெண்கள் நம் நாட்டின் கண்கள் என சொல்வார்கள். நாடு என்னதான் வளர்ச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தாலும், பெண்களின் சமூக வளர்ச்சி இல்லையேல் நாடு எவ்வளவு வளர்ந்தாலும் அதில் பயனில்லை. இதனை ஆமோதிக்கும் வகையில், நாடு முழுவதும் அவ்வப்போது பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களும், துன்புறுத்தல்களும் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன.

குறிப்பாக, நாட்டின் தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிராக எப்போதுமே ஒருவித அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு, டெல்லி மெட்ரோ இரயில் நிர்வாகம் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 'ஷி-ரைட்ஸ்' (She Ryds) என்கிற பெயரில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தின்படி, டெல்லி மெட்ரோ இரயில் சேவையை பயன்படுத்தும் பெண்கள், மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து தாங்கள் செல்ல விரும்பும் இடத்திற்கு பெண் கேப்டனை கொண்ட பைக் டாக்ஸியில் செல்லலாம். பைக் டாக்ஸி சேவை ஆனது நம் நாட்டிற்கு ஒன்றும் புதியது அல்ல. கடந்த 5- 6 வருடங்களில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் பைக் டாக்ஸி வணிகங்கள் துவங்கப்பட்டுள்ளன.
பைக் டாக்ஸிக்கு சில நகரங்களில் எதிர்ப்பும் உள்ளது. அத்தகைய நகரங்களுள் தலைநகர் டெல்லியும் ஒன்றாகும். ஏனெனில், பைக் டாக்ஸியை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடப்பதாகவும், பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகுவதாகவும் சில வருடங்களுக்கு முன்பு பைக் டாக்ஸிக்கு முற்றிலுமாக டெல்லி அரசாங்கம் தடைவிதித்து இருந்தது. அதன்பின் கடந்த 2023ஆம் ஆண்டில்தான் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் உடன் டெல்லியில் பைக் டாக்ஸிக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான், டெல்லி மெட்ரோ இரயில் நிர்வாகத்தால் ஷி-ரைட்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பைக் டாக்ஸி தொழிலில் ஏற்கனவே சில பெண்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆனால், அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. ஆதலால், ஷி-ரைட்ஸ் திட்டத்தின் மூலமாக மெட்ரோ இரயில் சேவையை பயன்படுத்தும் பெண்களின் பாதுகாப்பை உறுதிச்செய்வதுடன், இந்த திட்டத்தில் ரைடர்களாக பணியாற்றும் பெண்களின் பொருளாதார நிலையையும் மேம்படுத்த முடியும் என டெல்லி மெட்ரோ இரயில் நிர்வாகம் நம்புகிறது.
ஆணுடன் 2-வீலரில் செல்ல விரும்பாத பெண்கள் ஷி-ரைட்ஸ் திட்டத்தை அதிகம் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் மூலமாக மெட்ரோ இரயில் சேவையை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கையும் உயரும். இதற்கேற்ப, நல்ல பயிற்சி பெற்ற மற்றும் கணிவாக நடந்துக் கொள்ளக்கூடிய பெண்கள் ஷி-ரைட்ஸ் திட்டத்தில் பெண் கேப்டன்களாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
முதற்கட்டமாக 12 டெல்லி மெட்ரோ இரயில் நிலையங்களில் துவங்கப்பட்டுள்ள ஷி-ரைட்ஸ் வசதியை பெண்கள், டெல்லி மெட்ரோ மொபைல் செயலி வாயிலாக பயன்படுத்தலாம். அதாவது, பைக் டாக்ஸியை மொபைல் போனிலேயே பெண்கள் புக் செய்துக் கொள்ளலாம். டெல்லியில் பைக் டாக்ஸியில் பயன்படுத்தப்படும் 2-வீலர் வாகனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது. அதன்படி, ஷி-ரைட்ஸ் திட்டத்திலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெல்லி மெட்ரோ இரயில் ஒன்றில் சில மாதங்களுக்கு முன்பு பெண் ஒருவர் வெறும் உள்ளாடையுடன் பயணம் செய்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். இவ்வாறு பெண்கள் சுதந்திரமாக இருக்கும் அதே டெல்லியில்தான் பெண்களுக்கு எதிரான பாதுகாப்பையும் வலுப்படுத்த வேண்டியதாக உள்ளது. ஷி-ரைட்ஸ் போன்றதான திட்டத்தை நம் சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களிலும் கொண்டுவரலாம்.


Click it and Unblock the Notifications








