மாருதி கார்ல வந்ததால சாதாரணமா நெனச்சுட்டாங்க! 5 கோடி ரூபா காரை ஓட்டீட்டு வந்து எல்லாரையும் மிரள விட்ட பிரபலம்!
இத்தாலியை (Italy) சேர்ந்த லம்போர்கினி (Lamborghini) நிறுவனம் செயல்திறன் மிக்க லக்ஸரி ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு (Luxury Sports Cars) பெயர் பெற்றது. லம்போர்கினி நிறுவனத்தின் கார்களுக்கு உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் இதில் ஒரு சிலர் மட்டுமே அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். லம்போர்கினி நிறுவனத்தின் கார்கள் அனைத்தும் மிகவும் விலை உயர்ந்தது என்பதால், ஒரு சிலரால் மட்டுமே அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளராக மாற முடியும். இந்தியாவை பொறுத்தவரையில், தொழிலதிபர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் பலர், லம்போர்கினி நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
அத்துடன் கிரிக்கெட் வீரர்கள் பலரிடமும் கூட லம்போர்கினி கார்கள் உள்ளன. இந்தியாவின் பிரபலமான லம்போர்கினி கார் உரிமையாளர்களில், முகேஷ் அம்பானி (Mukesh Ambani), ரன்வீர் சிங் (Ranveer Singh), ஜான் ஆபிரஹாம் (John Abraham), ஹிருத்திக் ரோஷன் (Hrithik Roshan) மற்றும் ஷில்பா ஷெட்டி (Shilpa Shetty) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

இவர்கள் தவிர கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் (Yuvraj Singh), ரோஹித் ஷர்மா (Rohit Sharma) மற்றும் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) போன்றவர்களிடமும் லம்போர்கினி நிறுவனத்தின் கார்கள் இருக்கின்றன. இந்தியாவின் பெரும்பாலான பிரபலமான மனிதர்களிடம் இருப்பது லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) ஆகும்.
இதனை உலகின் முதல் எஸ்எஸ்யூவி (SSUV - Super Sport Utility Vehicle) என லம்போர்கினி நிறுவனம் கூறுகிறது. சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார்களின் ஆத்மாவான செயல்திறன் மற்றும் எஸ்யூவி ரக கார்களின் நடைமுறை பயன்பாடு என இரண்டும் கலந்த கலவையாக லம்போர்கினி உருஸ் உருவாக்கப்பட்டுள்ளது. எனவேதான் இந்த காரை இந்தியாவின் பிரபலமான மனிதர்கள் பலரும் ஆர்வமாக வாங்கி வருகின்றனர்.

லம்போர்கினி உருஸ் போலவே, லம்போர்கினி ஹூராகேன் (Lamborghini Huracan) காரும், இந்தியாவின் செல்வந்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகதான் இருந்து வருகிறது. இந்தியாவின் பிரபலமான லம்போர்கினி ஹூராகேன் காரின் உரிமையாளர்களில் பாலிவுட் நடிகையான ஷ்ரத்தா கபூர் (Shraddha Kapoor) குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார்.
ஷ்ரத்தா கபூரை பற்றி டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் வாசகர்களுக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் இவர் மிகவும் எளிமையான கார்களை பயன்படுத்த கூடியவர். ஷ்ரத்தா கபூரை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) காரில் பல முறை பார்க்க முடிந்துள்ளது. நிறைய இடங்களுக்கு அவர் மிகவும் எளிமையான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் வந்து சென்றுள்ளார்.
இந்த சூழலில் வழக்கத்திற்கு மாறாக லம்போர்கினி ஹூராகேன் காரில் ஷ்ரத்தா கபூர் பயணிக்கும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது பரவி வருகிறது. இந்த வீடியோவில் ஷ்ரத்தா கபூரே, லம்போர்கினி ஹூராகேன் காரை ஓட்டி செல்வதை பார்க்க முடிகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஒரு சிலர், ''எளிமையான மாருதி காரில் வந்ததால் தன்னை சாதாரணமாக நினைத்தவர்களை ஷ்ரத்தா கபூர் மிரள விட்டுள்ளார்'' என கமெண்ட் செய்துள்ளனர்.
ஷ்ரத்தா கபூரிடம் இருப்பது லம்போர்கினி ஹூராகேன் LP 610-4 Avio வேரியண்ட் ஆகும். இது லம்போர்கினி ஹூராகேன் காரின் லிமிடெட் எடிசன் (Limited Edition) மாடல் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இத்தாலி விமான படையால் ஈர்க்கப்பட்டு, இந்த லிமிடெட் எடிசன் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இத்தாலி விமான படையை கொண்டாடும் வகையிலும், அவர்களுடைய தைரியத்தை கௌரவிக்கும் வகையிலும், இந்த காரை உருவாக்கியுள்ளனர்.
உலக அளவில் வெறும் 250 லம்போர்கினி ஹூராகேன் LP 610-4 Avio கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. இதில் ஒன்றை ஷ்ரத்தா கபூர் வாங்கியுள்ளார். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த காரை ஷ்ரத்தா கபூர் வாங்கினார். ஷ்ரத்தா கபூரின் பெயரில்தான் இந்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஷ்ரத்தா கபூரின் லம்போர்கினி ஹூராகேன் LP 610-4 Avio காரில், 5.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 602 பிஹெச்பி பவர் மற்றும் 560 என்எம் டார்க் திறனை உருவாக்கி, சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 325 கிலோ மீட்டர்களாக உள்ளது.
பொதுவாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் வலம் வரும் ஷ்ரத்தா கபூர், தற்போது மிகவும் விலை உயர்ந்த லம்போர்கினி ஹூராகேன் காரில் பயணம் செய்துள்ள காரணத்தால், இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலை தளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர். ஷ்ரத்தா கபூர் மிகவும் எளிமையானவராக இருந்தாலும் கூட, அவரது கார் கலெக்ஸன் (Car Collection) மிகவும் பெரியது.
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் லம்போர்கினி ஹூராகேன் மட்டுமல்லாது, ஆடி க்யூ7 (Audi Q7), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ (Mercedes Benz GLA), பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series), லெக்ஸஸ் எல்எம் 350ஹெச் (Lexus LM 350h) போன்ற கார்களையும் ஷ்ரத்தா கபூர் வைத்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரிடம் எவ்வளவுதான் விலை உயர்ந்த கார்கள் இருந்தாலும் கூட, பெரும்பாலான நேரங்களில் அவர் மிகவும் எளிமையான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில்தான் பயணம் செய்கிறார். இந்த எளிமைக்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications