E20 பெட்ரோல் தரம் குறித்து அரசுக்கு சியாம் எழுதிய கடிதம்... திடீரென வாபஸ் பெற்றதன் பின்னணி என்ன?
E20 பெட்ரோல் தரம் குறித்து கடந்த சில வாரங்களாக வாகன உரிமையாளர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களும் விவாதங்களும் எழுந்து வருகின்றன. குறிப்பாக, E20 பெட்ரோல் நீண்டகால பயன்பாட்டில் எஞ்சினுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா, பழைய வாகனங்களில் செயல்திறன் குறையுமா என்ற கேள்விகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், E20 எரிபொருள் தரம் தொடர்பாக மத்திய அரசுக்கு சியாம் என்று அழைக்கப்படும் இந்திய வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு (SIAM) எழுதிய கடிதம் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்தது. ஆனால், அந்தக் கடிதத்தை சியாம் அமைப்பு திடீரென திரும்பப் பெற்றதுடன், E20 பெட்ரோல் பயன்பாட்டுக்கு தங்களது முழு ஆதரவு இருப்பதாக விளக்கம் அளித்துள்ளது. இந்த திடீர் திசை மாற்றம் வாகன உரிமையாளர்கள் மத்தியில் மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
E20 பெட்ரோலின் தரத்தில் குறைபாடு ஏற்பட்டால், சில எரிபொருள் அமைப்பு (Fuel System) பாகங்களில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக கடந்த ஜூலை 28ந் தேதி சியாம் அமைப்பு மத்திய அரசுக்கு கடிதம் மூலமாக சுட்டிக் காட்டியிருந்தது. அதில், E20 பெட்ரோலில் அதிக ஈரப்பதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால், எத்தனால் அதனை எளிதில் உறிஞ்சும் தன்மை கொண்டதாக இருப்பதால் நீர்தன்மை அதிகமாக Phase Separation எனப்படும் நிகழ்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பெட்ரோலும், எத்தனாலும் தனித்தனியாக பிரியும் அபாயம் உருவாகலாம். அத்தகைய எரிபொருள் வாகனத்தில் பயன்படுத்தப்பட்டால் ஃப்யூவல் பம்ப், ஃப்யூவல் இன்ஜெக்டர் உள்ளிட்ட பாகங்களில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற கவலையும் எழுப்பப்பட்டிருந்தது.

அதேபோல், கடலோரப் பகுதிகளில் உள்ள சில பெட்ரோல் நிலையங்களில் அதிக ஈரப்பதம், பழைய சேமிப்பு தொட்டிகளில் ஏற்படும் துருப்பிடிப்பு அல்லது குளோரைடு மாசு போன்ற காரணங்களால் E20 எரிபொருளின் தரம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாக நேற்றைய தினம் மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. இருப்பினும், இந்த பிரச்னை நாடு முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களுக்கும் பொருந்தும் பிரச்னை அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், ஊடகங்களில் வெளியான கடிதத்தின் விவரங்களின்படி சில பெட்ரோல் நிலையங்களில் இருந்து எடுக்கப்பட்ட E20 பெட்ரோல் மாதிரிகளில் குளோரைடு அளவு கிலோவுக்கு 500 மி.கி வரையிலும், ஈரப்பதம் நிர்ணயிக்கப்பட்ட 3,000 மி.கிக்கு பதிலாக 10,000 மி.கி வரையிலும் இருப்பதாக கண்டறியப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இது வாகன உரிமையாளர்கள் நீண்ட காலமாக சந்தேகித்து வந்த விஷயத்திற்கு அதிகாரப்பூர்வ உறுதிப்பாடு போலவே தோன்றியது.
இதற்கிடையில், நேற்று மாலையே மத்திய பெட்ரோலிய அமைச்சகம் இதுதொடர்பாக விளக்கம் அளித்தது. அதாவது, நாடு முழுவதும் 87,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களில் தரக் கட்டுப்பாட்டு சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதுபோன்ற புகார்கள் இரண்டு சம்பவங்களில் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தது. அதாவது, தினமும் 8 முதல் 12 முறை நீர் கலப்பு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட மாதிரிகளில் குளோரைடு, சல்பைடு கலப்புக்காக சோதிக்கப்பட்டது.
அதில், இரண்டு இடங்களில் மட்டுமே குளோரைடு கலப்பு கண்டறியப்பட்டு, அந்த விற்பனை நிலையங்களில் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் இந்த விளக்கத்தை தொடர்ந்து சியாம் அமைப்பு தனது கடிதத்தை வாபஸ் பெற்றதுடன் இந்தியாவின் E20 எத்தனால் கலப்பு திட்டத்திற்கு வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ தேபோன்று, அரசுடன் நடைபெறும் தொழில்நுட்ப விவாதங்களின் வழக்கமான செயல்முறையின் ஒரு பகுதிதான் இது அமைந்ததாகவும் விளக்கம் அளித்தது.
இருப்பினும், இந்த விவகாரம் வாகன உரிமையாளர்களின் சந்தேகங்களை முழுமையாகப் போக்கவில்லை. ஏற்கனவே மத்திய அரசு, பழைய பெட்ரோல் வாகனங்களில் E20 பயன்படுத்தும்போது எரிபொருள் சிக்கனம் சுமார் 2 முதல் 6 சதவீதம் வரை குறையக்கூடும் என்று தெரிவித்துள்ளது. மேலும், BS3 மற்றும் அதற்கு முந்தைய சில வாகனங்களில் ரப்பர் குழாய்கள், கேஸ்கெட் போன்ற பாகங்களை மாற்ற வேண்டியிருக்கலாம் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டது.
E20 எரிபொருள் தரம் குறித்த இந்த விவாதம், எத்தனால் கலப்பு திட்டத்தை விட அதன் சேமிப்பு, போக்குவரத்து மற்றும் தரக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் குறித்த கேள்விகளை முன்னிலைப்படுத்தி வருகிறது. இதனால், தரச் சோதனை முடிவுகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து மேலும் வெளிப்படையான தகவல்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் வாகன உரிமையாளர்கள் மத்தியில் வலுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications