காரில் இருப்பது 24 கேரட் தங்கமா? இவர் செய்யக் கூடிய ஆளு தான்... இந்தியாவில் இப்படியொரு காரே இல்லையே!
இந்தியாவின் பிரபல பஞ்சாபி பாடகர்களில் மிகா சிங் முக்கியமானவர். மற்றொரு புகழ்பெற்ற பஞ்சாபி பாடகரான தலெர் மெஹந்தியின் தம்பியான இவருக்கு, சமூக வலைத்தளங்களில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் 1.5 கோடிக்கும் அதிகமானோரும், யூடியூபில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் இவரைப் பின்தொடர்கிறார்கள்.
பாடல்களை பாடுவதை தாண்டி விலையுயர்ந்த கார்கள் மீது தனக்கிருக்கும் ஆர்வத்திற்காகவும் அறியப்படும் மிகா சிங், கடந்த காலங்களில் பல விலை உயர்ந்த கார்களை வாங்கியிருக்கிறார். சில நேரங்களில், தனது பணத்தில் பிறருக்கும் விலையுயர்ந்த கார்கள் மற்றும் எஸ்யூவிகளை பரிசளித்து இவர் ஆச்சிரியப்பட வைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது, தனது கார் கலெக்ஷனில் ஒரு பிரத்யேகமான ஹம்மர் எச்2 எஸ்யூவியை சேர்த்துள்ளதாக மிகா சிங்கின் சகோதரர் தலெர் மெஹந்தியின் மகனும், இளம் பாடகருமான குர்தீப் மெஹந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகா சிங்கின் புதிய ஹம்மர் கார் டெலிவிரி பற்றிய பதிவைப் பகிர்ந்துள்ளார்.
அதில், புதிய ஹம்மர் எச்2 எஸ்யூவி வாகனத்துடன் பாடகர்கள் மிகா சிங், குர்தீப் மெஹந்தி மற்றும் தலெர் மெஹந்தியின் மருமகனான பாடகர் நவராஜ் ஹன்ஸ் ஆகியோர் போஸ் கொடுப்பதைக் காணலாம். இந்த எஸ்யூவி வாகனம் மிகாவுக்கு சொந்தமானது என்று குர்தீப் தனது பதிவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாடகர் மிகா சிங் தற்போது வாங்கியுள்ள இந்த ஹம்மர் எச்2 எஸ்யூவி, வழக்கமான ஹம்மர் வாகனத்தை விட மிகவும் ஆடம்பரமாகத் தெரிகிறது. இது கருப்பு நிறத்தில் இருந்தாலும், வடிவமைப்பின் பல பகுதிகளில் தங்க நிற வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கோல்டன் கலர் வேலைப்பாடுகளை வாகனத்தின் பொனட், முன்புற பம்பர், சக்கரங்கள், கதவு கைப்பிடிகள், எரிபொருள் டேங்க் மூடி, வீல் ஆர்ச் கிளாடிங்ஸ், பக்கவாட்டு கண்ணாடிகள் போன்ற இடங்களில் காண முடிகிறது.
மிகா சிங்கின் ஆடம்பர ஆர்வம் கருதி, இவை வெறும் பெயிண்ட் வேலைப்பாடுகள் இல்லாமல், உண்மையான தங்க முலாம் ஆக கூட இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த வாகனத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள் தற்போது வெளியிடப்படவில்லை. இந்த இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பஞ்சாபி பாடகர் மிகா சிங் வாங்கி இருக்கும் முதல் ஹம்மர் வாகனம் இது அல்ல. ஏற்கனவே, 2006ஆம் ஆண்டிலேயே ஹம்மர் நிறுவனம் உச்சத்தில் இருந்தபோது அவர் ஒரு ஹம்மர் எச்2 வாகனத்தை வாங்கி பயன்படுத்தினார். அது 6.2 லிட்டர் எல்9எச் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வி8 பெட்ரோல் என்ஜினைக் கொண்டிருந்தது. அந்த வாகனம் ஆரஞ்சு நிறத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த ஆரஞ்சு நிற ஹம்மர் கடந்த காலங்களில் பலமுறை செய்திகளில் இடம்பிடித்துள்ளது. 2011இல் மும்பையில் நடந்த மிகா சிங் தொடர்பான ஹிட் அண்ட் ரன் சம்பவத்தில் அது பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அந்த நேரத்தில் தான் வாகனத்தை ஓட்டவில்லை என்று மிகா சிங் மறுத்தார். 2021இல், கனமழை பெய்தபோது மும்பையில் நள்ளிரவில் அந்த வாகனம் பழுதாகி நின்றது. மிகாவும் அகன்ஷா பூரியும் சிக்கிக்கொண்டனர். அப்போது உதவிக்கு வந்த பொதுமக்களின் வீடியோ ஆன்லைனில் பரவியது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹம்மர் எச்2 அதன் கம்பீரமான தோற்றம், மிரட்டலான வடிவமைப்பு மற்றும் "எங்கு வேண்டுமானாலும் செல்லும்" தன்மைக்காக மக்களால் விரும்பப்படுகிறது. இது வலுவான தன்மையையும், ஆடம்பரத்தையும் ஒருங்கிணைத்து, பணக்காரர்களிடையே ஒரு அந்தஸ்து அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இதனாலேயே, இந்த பஞ்சாபி பாடகர் குடும்பத்தினர் இந்த புதிய பிரம்மாண்டமான வாகனத்தைக் கொண்டாடுவதை குர்தீப் மெஹத்தியின் இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அறிய முடிகிறது.
ஜிஎம் நிறுவனம் ஹம்மர் வாகனங்களை இந்தியாவில் ஒருபோதும் அறிமுகப்படுத்தவில்லை. இருப்பினும், பல வாகனங்கள் தனிப்பட்ட இறக்குமதி மூலம் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டன. இதனால், இந்திய யூஸ்டு-கார் சந்தையிலும் ஹம்மர் வாகனங்களை வாங்க முடிகிறது. நல்ல நிலையில் உள்ள ஒரு ஹம்மர் வாகனம் சுமார் ரூ.50-60 லட்சம் வரை விற்கப்படலாம். இது தனிப்பட்ட ஹம்மர் வாகனத்தின் கிட் மற்றும் தனிப்பயனாக்கத்தைப் பொறுத்து மாறுபடும்.


Click it and Unblock the Notifications









