பாடகினு சொல்றாங்க... காருக்குள் எதை செய்ய கூடாதோ அதை கரெக்ட்டா செய்றாங்க! ஒரேயொரு குலுக்கல் போதும்
ஆற்றல்மிக்க மற்றும் பெரிய அளவிலான எஸ்யூவி ரக கார்கள் வந்த பிறகு தொலைத்தூர பயணங்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. அவ்வப்போது இவ்வாறான தொலைத்தூர பயணங்களை மேற்கொள்வதற்காகவே சிலர் தங்களது எஸ்யூவி கார்களை அதற்கேற்ப மாற்றிக் கொண்டுள்ளதையும் பார்த்து இருக்கிறோம். அந்த வகையில் இங்கு ஒரு பீகார் மாநிலத்தை சேர்ந்த பாடகி ஒருவர் தனது மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) காரை படுக்கை வசதி உடன் மாற்றி உள்ளார். இருப்பினும், அவரது இந்த செயல் கண்டனங்களுக்கு உள்ளாகி உள்ளது. என்ன நடந்தது? வாருங்கள் அதனை பற்றி இங்கே இந்த தொகுப்பில் பார்ப்போம்.
மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆனது இந்தியாவில் மிக சிறப்பாக விற்பனையாகும் எஸ்யூவி கார்களுள் ஒன்று ஆகும். முன்பு விற்பனையில் இருந்த பிரபலமான மஹிந்திரா எக்ஸ்யூவி500 காருக்கு மாற்றாக, அதனை காட்டிலும் விசாலமான இடவசதி மற்றும் தொழிற்நுட்ப அம்சங்கள் உடன் உருவாக்கப்பட்டதினாலேயே 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபட்டதில் இருந்து எக்ஸ்யூவி700 காரை பலரும் வாங்கி வருகின்றனர்.

எக்ஸ்யூவி700 காரில் புதியதாக ஃபேஸ்லிஃப்ட் (Facelift) அப்கிரேடை கொண்டுவர மஹிந்திரா தயாராகி வருவது எல்லாம் தனி கதை. இப்போது இருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரிலும் எந்தவொரு குறையையும் சொல்ல முடியாத அளவிற்கு சிறப்பான அம்சங்களே வழங்கப்படுகின்றன. குறிப்பாக, எக்ஸ்யூவி700 எஸ்யூவி காருக்குள் மிகவும் அதிகப்படியான இடவசதியை பெற முடிகிறது.
ஆனால், அந்த அதிகப்படியான இடவசதி தான் இங்கு ஒரு பாடகியை வித்தியாசமாக யோசிக்க வைத்துள்ளது. இந்த பாடகியின் பெயர், சிவா சௌத்ரி (Shiva Chaudhary) ஆகும். சமீபத்தில் 2023ஆம் ஆண்டில்தான் சினிமா துறைக்குள் அடியெடுத்து வைத்தவர், அதற்குள் 30க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடிவிட்டார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் புதியதாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தனது மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரினுள் காட்சித்தரும் பாடகி சிவா சௌத்ரி, காரினுள் கயிற்று கட்டிலை அமைத்து, அதில் அமர்ந்தப்படியும், படுத்தப்படியும் பயணம் செய்துள்ளார். காரின் சன்ரூஃப் நீளமானதாக இருக்கும் நிலையில், கட்டிலில் படுத்துக் கொண்டு மொபைல் போனை நோண்டியப்படி, வானத்தை பார்த்துக் கொண்டு சிவா சௌத்ரி பயணம் செய்துள்ளார்.
இதற்கேற்ப, காரை ஒருவர் ஓட்டும்போது காட்சிகள் தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பதால், இதன் மூலம் பாடகி சிவா சௌத்ரி ஜாலியான பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இத்தகைய பயணம் எந்த அளவிற்கு ஜாலியானதோ அதே அளவிற்கு ஆபத்தானதும் கூட. ஏனெனில், காருக்குள் கட்டிலை அமைப்பதே முதலில் தவறானது ஆகும். அதுவும், கயிற்று கட்டில் கூடவே கூடாதது.

ஏனென்றால், இவ்வாறு பயணம் செய்யும்போது உங்களை காருக்குள் தூக்கி வீச ஒரு சிறிய குலுக்கலே போதுமானது ஆகும். மற்ற மர கட்டில்களிலாவது பிடித்துக் கொள்வதற்கு எதாவது சப்போர்ட் கிடைக்கும். ஆனால், கயிற்றுக் கட்டிலில் ஆபத்து இன்னும் அதிகமாகும். இந்த பாடகி செய்துள்ள 2வது தவறு என்னவென்றால், கட்டிலை அமைத்த விதம். மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் கட்டிலை அமைப்பதற்கு என்று தனியாக எல்லாம் இடவசதி வழங்கப்படுவது இல்லை.
சிவா சௌத்ரி இதற்காக தனது காரின் 3வது வரிசை இருக்கைகளை முற்றிலுமாக மடக்கிக் கொண்டு, 2வது வரிசை இருக்கைகளில் ஒன்றை மட்டும் மடக்கிக் கொண்டு இதன் மூலம் கிடைக்கும் இடத்தில் கயிற்று கட்டிலை விரித்து அமைத்துள்ளார். இதில், ஆபத்தானது என்னவென்றால், கட்டிலின் ஒருபக்க கால்கள் 2வது வரிசை இருக்கையில் அமர்பவர்கள் கால் வைக்கும் இடத்தில், கூடுதல் உயரத்திற்காக மெத்தையின் மீது அமைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காருக்குள் நன்கு கால்களை நீட்டி படுத்துக் கொண்டு பயணம் செய்ய யாருக்குத்தான் பிடிக்காமல் போகும். அந்த ஆசையில் தான் இந்த பீகார் பாடகி இவ்வாறு செய்துள்ளார். ஆனால், இது முற்றிலும் ஆபத்தானது. பயணத்தின்போது, மெத்தையின் மீது நிறுத்தப்பட்டுள்ள கட்டிலின் கால்கள் சற்று விலகினால், கட்டிலில் படுத்திருப்பவர்கள் முன் இருக்கைகளை நோக்கி தூக்கி வீசப்படலாம். இது ஓட்டுனருக்கு இடையூறு ஏற்படுத்தி பெரிய விபத்துக்கு வழிவகுக்க கூடும்.


Click it and Unblock the Notifications









