கொரோனா பரவலை தடுக்க ரூ.1 கோடி நிதியை ஒதுக்கிய மற்றொரு முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம்..!
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க தீவிரமாக பணியாற்றவுள்ளதாக ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் (ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் கூட்டணி) அறிவித்துள்ளது. இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டோரை மீட்பதற்காக ரூ.1 கோடியை ஒதுக்கியுள்ளதாகவும் இந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்த தொகையின் மூலம் குறைந்தப்பட்சம் 1,100 கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க முடியும் என ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தால் கொண்டுவரப்படவுள்ள இந்த 1,100 படுக்கை வசதிகளும் புனேவில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

மேலும் ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தங்களது இந்த பொருளாதார பங்களிப்பு முழுக்க முழுக்க தற்சமயம் முக்கியமாக தேவைப்படுகின்ற பராமரிப்பு உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ நுகர்பொருட்களுக்கு மட்டும் தான் என்றும் உறுதியளித்துள்ளது.

முன்னதாக ஐரோப்பாவை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் மஹாராஷ்டிரா சகான் நகரில் உள்ள தனது தொழிற்சாலையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலான முக கவசங்களை தயாரிக்கும் பணிகளில் ஏற்கனவே இறங்கிவிட்டது.
குறைவான எடையில் உருவாக்கப்பட்டு வரும் இந்த முக கவசங்கள் ஃபாக்கிங்கை தடுக்கும் வகையில் இருக்கும். ஒளிபுகும் தாளினால் தயாரிக்கப்படுகின்ற இந்த முக கவசங்களை 6 லிருந்து 8 மணிநேரம் வரை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.

ஃபோக்ஸ்வேகன் தன்னிச்சையாக மட்டுமின்றி ஸ்கோடா நிறுவனத்துடன் இணைந்தும் வீட்டிற்கு உள்ளேயும் வீட்டிற்கு வெளியேயும் பயன்படுத்தும் வகையிலான முக கவசங்களை தயாரித்து வருகிறது. கொரோனா வைரஸில் இருந்து தற்காப்பிற்கு மட்டுமில்லாமல் இந்த முக கவசங்களை ஐ.சி.யூ நடைமுறைகளின் போதும் உபயோகப்படுத்தலாம்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிக்களுக்கு படுக்கை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு முன்னதாக 35 ஆயிரம் முக கவசங்களை புனேவில் உள்ள அரசு பொது மருத்துவமனை, அவ்ரங்காபாத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனை மற்றும் மும்பையில் உள்ள கஸ்தூர்பா காந்தி மருத்துவமனைக்கு இந்த கூட்டணி நிறுவனம் வழங்கியிருந்தது.

இவற்றுடன் ஊரடங்கு உத்தரவால் அவ்ரங்காபாத்தில் உள்ள மக்களுக்கு 50,000 உணவு பொட்டலங்களை அன்னமித்ரா அறக்கட்டளை மூலமாக வழங்கும் பணியிலும் ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








