நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்ட காரை 'டோ' செய்தபோது கொடூரம்! உத்து பாத்தவங்க அதிர்ச்சியில் ஒறஞ்சுட்டாங்க
சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதில், சிகப்பு நிற ஸ்கோடா ஃபேபியா (Skoda Fabia) கார் ஒன்று 'டோ' (Tow) செய்து கொண்டு செல்லப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. கார்களை 'டோ' செய்து கொண்டு செல்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைதான்.
ஆனால் இந்த வீடியோவை உற்று நோக்கியவர்கள், அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். காரின் உள்ளே ஆட்கள் இருந்ததுதான் இந்த அதிர்ச்சிக்கு காரணம். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் உத்தர பிரதேச (Uttar Pradesh) மாநிலம் நொய்டா (Noida) நகரில் வெகு சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன் பின்னணியை விளக்குவதுதான் இந்த செய்தி. நொய்டா நகரில் போக்குவரத்து சீராக இருக்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு பகுதியிலும் தனியார் நிறுவனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நோ பார்க்கிங் பகுதிகளில் (No Parking Zones) நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றுவது அவர்களின் பணிகளில் ஒன்றாகும்.
இந்த விதிமுறை மீறலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு, அவர்கள் அபராதமும் விதித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் விஸ்வஜித் மசூம்தார் என்பவர், மருத்துவமனைக்கு செல்வதற்காக நோ பார்க்கிங் பகுதியில் தனது ஸ்கோடா ஃபேபியா காரை நிறுத்தியதாக கூறப்படுகிறது. நோ பார்க்கிங் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்ததை அவர் கவனிக்கவில்லையாம்.
ஆனால் 5 நிமிடத்திலேயே திரும்பி வந்து விட்டதாக விஸ்வஜித் மசூம்தார் கூறுகிறார். எனினும் இதை ஏற்க தனியார் நிறுவன ஊழியர்கள் மறுத்து விட்டனர் என தெரிகிறது. எனவேதான் ஸ்கோடா ஃபேபியா காரை அவர்கள் 'டோ' செய்து கொண்டு சென்றுள்ளனர். அதுவும் உள்ளே ஆட்களை வைத்து கொண்டு!
அவ்வழியாக வந்த ஒருவர் இந்த விபரீதத்தை வீடியோ எடுத்து வெளியிட, அது வைரலாக பரவி விட்டது. இதையடுத்து இந்த விபரீத செயலில் ஈடுபட்ட தனியார் நிறுவனம் மீது காவல் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாம்.
மேலும் இது தொடர்பாக விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலை தளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், நெட்டிசன்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் ஒரு முறை நடக்க கூடாது எனவும் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நோ பார்க்கிங் பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவது சரியான விஷயம் கிடையாதுதான். ஆனால் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் உள்ளவர்கள், விதிமுறைகளை மீறுபவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது அர்த்தம் அல்ல. இது பாதுகாப்பான விஷயம் கிடையாது. எனவே இது போன்ற விஷயங்கள் வரும் காலங்களில் நடைபெற கூடாது என்பதே எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








