ஒரு செகண்ட்டில் எல்லாம் முடிந்தது... வாங்குவதாக இருந்தால் இந்த காரை வாங்கனும்! யாருக்கும் எந்த பாதிப்பும் இல்ல
இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. இதனை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை போலீசாரும், அரசு அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர் என்றாலும் சாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்க முடியவில்லை. இதனால், முடிந்த வரையில் தரமான மற்றும் வலிமையான கார்களை உற்பத்தி செய்யுமாறு கார் நிறுவனங்கள் வலியுறுத்தப்படுகின்றன. இதன் விளைவாக, கார்கள் விபத்தில் சிக்கினாலும் அதனுள் இருக்கும் பயணிகளுக்கு பெரியதாக பாதிப்பு ஏற்படுவதில்லை. அந்த வரிசையில், சமீபத்தில் ஸ்கோடா குஷாக் காரில் விபத்தில் சிக்கிய பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் முழு 5 நட்சத்திரங்களை பெற்ற கார் மாடல்கள் இந்தியாவில் குறைவாகவே விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை டாடா மோட்டார்ஸின் கார்களாகும். அதேபோல், ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் குஷாக் எஸ்யூவி காரும் க்ளோபல் என்சிஏபி-இல் 5 நட்சத்திரங்களை பெற்று பாதுகாப்புமிக்க காராக விளங்குகிறது.

என்னதான்... கிராஷ் டெஸ்ட் முடிவுகள் சிறப்பாக இருந்தாலும், நிஜ உலகில் விபத்தின்போது கார் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பொறுத்தே காரின் உண்மையான தன்மையை நம்மால் தீர்மானிக்க முடியும். அந்த வகையில், ஸ்கோடா குஷாக் கார் இந்த சமீபத்திய விபத்தின் மூலம் அதன் வலிமையான உடலமைப்பை வெளிக்காட்டி உள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவில் சரியாக எந்த இடத்தில் நடந்துள்ளது என்பது தெரியவில்லை. தென்னிந்தியாவில் ஒரு நெடுஞ்சாலையில் நடந்தது போல் தெரிகிறது. ஹைவேயில் வேகமாக இயங்கிக் கொண்டிருந்த இந்த ஸ்கோடா குஷாக் கார் வேறொரு காரினால் கண்ட்ரோல் இழந்து சாலையில் இருந்து மொத்தமாக விலகி சாலைக்கு பக்கத்தில் இருந்த நீர் குட்டையில் பாய்ந்துள்ளது.

இந்த காட்சிகள் யாவும் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. வீடியோவை பார்க்கும்போது, இந்த காரா நெடுஞ்சாலையில் இருந்து மொத்தமாக விலகி வந்துள்ளது... என்பதை நம்பவே முடியவில்லை. ஏனெனில், விபத்தில் சிக்கியுள்ள இந்த குஷாக் கார் நெடுஞ்சாலையில் 2 லேன்களை கடந்து வந்து, சாலையில் ஏறக்குறைய 50 மீட்டர் தொலைவில் இருந்த நீர் குட்டையில் பாய்ந்துள்ளது.
இந்த விபத்திற்கு காரணம், 2வது லேனில் அதிவேகமாக சென்ற வேறொரு கார் ஆகும். அந்த கார் இந்த ஸ்கோடா குஷாக் கார் மீது மோதியதா என்பது தெரியவில்லை. ஒருவேளை அந்த கார் மோதிவிடுமோ என்கிற பயத்தில் கூட இந்த குஷாக் கார் டிரைவர் வலதுப்பக்கம் திரும்பியிருக்கலாம். காரை வலதுப்பக்கம் திருப்பியதில் அங்கிருந்த டிவைடரில் கார் வேகமாக மோதியுள்ளது.

இந்த மோதலில் காரின் கண்ட்ரோலை டிரைவர் இழந்துள்ளார். டிவைடரில் இன்னும் மோத கூடாது என்பதற்காக காரை வலதுப்பக்கம் திரும்பியுள்ளார். ஆனால், கார் மொத்தமாக வலதுப்பக்கம் திரும்பிவிட்டது. இருப்பினும், சாலையில் இருந்து மொத்தமாக விலகுவதற்கு முன் காரின் வேகம் குறைவதை வீடியோவில் காணலாம். அதாவது, அந்த நேரத்தில் டிரைவர் கொஞ்சம் விவேகமாக செயல்பட்டு இருந்தால், கார் நீர்க்குட்டையில் பாய்வதை தடுத்திருக்கலாம்.
ஆனால், டிரைவர் மாறாக ஆக்ஸலரேட்டரை கொடுத்துள்ளார். இதன் காரணமாகவே, டிவைடரில் மோதிய பின்பு சாலையின் குறுக்கே நிற்பதுபோல் வந்த கார் திடீரென நீர்க்குட்டையினுள் சீறி பாய்ந்துள்ளது. சாலையின் குறுக்கே நின்றதால், வேறு ஏதேனும் வாகனம் மோதிவிட கூடாது என்கிற பயத்தில் டிரைவர் ஆக்ஸலரேஷனை கொடுத்திருக்கலாம். இந்த சம்பவத்தின்போது, காரினுள் 4 பேர் இருந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பெரியதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஸ்கோடா குஷாக் கார் எந்த அளவிற்கு வேகமாக நீர்க்குட்டையினுள் சீறி பாய்ந்துள்ளது என்பதை வீடியோவில் காணலாம். இருப்பினும், காருக்குள் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பது ஆச்சிரியத்தை தருகிறது. இதற்கு குஷாக் காரின் வலிமையான கட்டமைப்பு ஒரு காரணம் என்றாலும், இன்னொரு காரணம் கார் சரியாக நீர்க்குட்டையில் பாய்ந்துள்ளது. நீரில் பாய்ந்துள்ளதால், மோதலின் தாக்கம் மிகவும் குறைவாக இருந்துள்ளது. ஆனால், இதன்பின்னர் இந்த குஷாக் காரை சரி செய்வதற்கான செலவு அதிகமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









