இந்த காரை டாக்ஸியா ஓட்றாங்களா! இதுல போறதுக்கலாம் உண்மையாக குடுத்து வெச்சுருக்கணும்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், குறிப்பாக செடான் ரக கார் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia). இது பிரீமியம் செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த கார் தற்போது டாக்ஸியாக பயன்படுத்தப்பட்டு வரும் தகவல் வெளியாகி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவின் கார் ஆர்வலர்களும், வாடகை கார் ஓட்டுனர்களும் ஒரு சேர சிந்திக்க தொடங்கியுள்ளார்களோ? என்ற ஆவலை இது நமக்குள் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கார் ரசிகர்களை கவர்ந்துள்ள ஸ்கோடா ஸ்லாவியா செடான் கார், பெங்களூர் நகரில் மஞ்சள் நிற நம்பர் பிளேட் உடன் தென்பட்டிருப்பதுதான் நாங்கள் இதை சொல்வதற்கு காரணம்.

மஞ்சள் நிற நம்பர் பிளேட் என்றால், அது நிச்சயமாக டாக்ஸிதான். கார் ஆர்வலர்களை கவர்ந்துள்ள ஸ்கோடா ஸ்லாவியா, டாக்ஸி ஓட்டுனர்களையும் கவர தொடங்கியுள்ளது என்பதே நாம் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது. அனேகமாக அந்த டாக்ஸி ஓட்டுனர் கார் ஆர்வலராக இருக்கலாம்!
அனேகமாக இதுதான் இந்தியாவின் முதல் ஸ்கோடா ஸ்லாவியா டாக்ஸியாக இருக்கும் என நாங்கள் நினைக்கிறோம். இந்த ஸ்கோடா ஸ்லாவியா செடான் காரை வீடியோ தற்போது யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் காட்டப்பட்டிருப்பது, வெள்ளை நிற ஸ்கோடா ஸ்லாவியா கார் ஆகும்.

இந்த ஸ்கோடா ஸ்லாவியா கார், ஹரியானா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கே ஆச்சரியப்பட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், இங்கு டாக்ஸியாக பயன்படுத்தப்பட்டு வருவது ஸ்கோடா ஸ்லாவியா காரின் டாப் வேரியண்ட் ஆகும். இந்த வீடியோவில் சன்ரூஃப் இருப்பது அதை உறுதி செய்கிறது.
இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனத்திற்கு என தனியாக மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அதிலும் அந்த நிறுவனத்தின் ஸ்லாவியா காருக்கு தனியாக ஒரு ரசிகர் படை உருவாகி கொண்டுள்ளது. டிசைன், வசதிகள் மற்றும் செயல்திறன் என அனைத்து அம்சங்களிலும் ஸ்கோடா ஸ்லாவியா அசத்துவதுதான் இதற்கு காரணம்.
அப்படிப்பட்ட ஒரு கார் டாக்ஸியாக பயன்படுத்தப்பட்டு வருவது உண்மையிலேயே ஒரு ஆச்சரியமான விஷயம்தான். இத்தனைக்கும் ஸ்கோடா ஸ்லாவியா கார், குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றது ஆகும். எனவே இந்த டாக்ஸியில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணம் கிடைக்கும் என்பதும் உறுதி.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஸ்கோடா ஸ்லாவியா காரின் டாப் வேரியண்ட்டின் விலை 18.68 லட்ச ரூபாயாக இருக்கிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இவ்வளவு விலை உயர்ந்த ஒரு காரில் சவாரி செய்வது நிச்சயம் பயணிகளுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications








