மணிக்கு 240 கிமீ வேகத்தில் செல்லும் பாட்... 2 மணிநேரத்தில் சென்னை - பெங்களூர்!
குர்கானை தொடர்ந்து பீகாரிலும் பாட் டாச்சி சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. பாட் டாக்சிக்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக நைட்ஷேட் குளோபல் இன்ஃப்ரா என்ற தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள், பீகார் மாநில நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் மஹேஷ்வர் ஹசாரியை சந்தித்து பேசியிருக்கின்றனர்.
தென்கிழக்கு ஆசியாவில் பாட் டாக்சிக்கான கட்டமைப்பை செய்து தருவதற்கான தொழில்சார் காப்புரிமையை நைட்ஷேட் நிறுவனம்தான் பெற்றிருக்கிறது. மெட்ரோ, மோனோ ரயில்களைவிட விரைவாகவும், குறைவான செலவீனத்தில் இந்த புதிய பாட் டாக்சியை அமைத்து தர முடியும் என்றும் நைட்ஷேட் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், நகரத்திற்கு மட்டுமின்றி, இரு நகரங்களுக்கு இடையிலும் இந்த பாட் டாக்சியை இயக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாசா தயாரிப்பு
ஸ்கைட்ரான்ஸ் என்ற பெயரில் இந்த பாட் போக்குவரத்து சாதனத்தை அமெரிக்காவின் நாசா அமைப்புதான் உருவாக்கியது. அதனிடமிருந்து நைட்ஷேட் நிறுவனம் காப்புரிமையை பெற்றிருக்கிறது.

காந்த விசையில் இயங்கும்
இரும்பு தூண்களுக்கு மேல் அமைக்கப்பட்டிருக்கும் வழித்தடத்தில் பாட் எனப்படும் ரோப்கார் போன்ற போக்குவரத்து சாதனங்கள் இணைக்கப்பட்டிருக்கும். இவை மயிரிழை அளவுக்கான இடைவெளியில் இரும்பு கர்டர் வழித்தடத்துடன் காந்த விசை பிணைப்பில் பயணிக்கும். தரையிலிருந்து 6 மீட்டர் உயரத்தில் இந்த பாட் சாதனங்கள் செல்லும். மெட்ரோ ரயில் போன்று இதற்காக ராட்சத அகலமான கான்கிரீட் தூண்கள் தேவைப்படாது. எனவே, சாலைகளில் இடத்தையும் அடைக்காது.

பயணிகள் எண்ணிக்கை
ஒரு பாட் காரில் 4 பேர் வசதியாக அமர்ந்து செல்ல முடியும். நகர்புறத்தில் இயக்கப்படும்போது, ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து இயக்க முடியும். அத்துடன், குறிப்பிட்ட இடைவெளியில், விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்லும் போக்குவரத்து சாதனமாக இருக்கும்.

இயக்குதல் செலவு
மெட்ரோ, மோனோ ரயில்களைவிட மிக குறைவான இயக்குதல் செலவு கொண்ட போக்குவரத்து சாதனம். அதாவது, ஒரு பாட் சாதனத்தை சார்ஜ் செய்வதற்கு 10KV மின்சாரம் போதுமானதாக இருக்கும். பராமரிப்பும் எளிது.

வேகம்
நகர்ப்புறங்களில் இயக்கும்போது மணிக்கு 120 கிமீ முதல் 140 கிமீ வேகம் வரை இயக்க முடியும். மேலும், இறங்கும் இடம் வரும்போது ஒரு பொத்தானை அழுத்தினால் பாட் சாதனத்தின் கதவுகள் திறந்து கொள்ளும்.

சென்னை- பெங்களூர்
சென்னை- பெங்களூர் போன்ற அதிக போக்குவரத்து கொண்ட நகரங்களுக்கு இடையிலும் இந்த பாட் சாதனத்தை இயக்க முடியும் என்று நைட்ஷேட் நிறுவனம் தெரிவித்துள்ளது. நகரங்களுக்கு இடையில் இயக்கும்போது மணிக்கு 240 கிமீ வேகத்தில் இயக்க முடியுமாம். அதாவது, இரண்டு மணிநேரத்திற்கு உள்ளாக சென்னையிலிருந்து பெங்களூரை அடைந்துவிட முடியும்.

முதலீடு குறைவு
மெட்ரோ மற்றும் மோனோ ரயில்களுக்கான வழித்தட கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.250 கோடி முதல் ரூ.500 கோடி வரை செலவாகிறது. ஆனால், இந்த பாட் சாதனத்தை இயக்குவதற்கான வழித்தடத்தை அமைக்க ஒரு கிலோமீட்டருக்கு ரூ.90 கோடி முதல் ரூ.120 கோடி வரை மட்டுமே ஆகுமாம்.

அமைச்சர் பாராட்டு
இந்த பாட் சாதனத்தின் சிறப்பம்சங்கள் குறித்து விவாதித்த பீகார் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஹசாரி, இந்த சாதனத்தை வெகுவாக பாராட்டினார். அத்துடன், பீகாரின் எந்த மூலையிலிருந்தும் தலைநகர் பாட்னாவையை வெறும் 5 மணிநேரத்திற்குள்ளாக அடைந்துவிடக்கூடிய போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற முதல்வர் நிதிஷ்குமாரின் கனவையும் இந்த பாட் சாதனம் நிறைவேற்றுவதாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

பச்சைக்கொடி
இந்த சாதனத்திற்கான தொழில்நுட்ப விளக்க திட்டத்தை துவங்குமாறு நைட்ஷேட் நிறுவனத்திடம் பீகார் மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அடுத்த 15 மாதத்தில் இந்த செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








