90ஸ் கிட்ஸ்களுக்கு ஹேப்பி நியூஸ்... மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் வாடகை சைக்கிள்....
ஜம்முவில் வாடகை சைக்கிள் திட்டத்தை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்துகின்றனர். இது குறித்து விரிவாக காணலாம்

நாம் எல்லோரும் சிறு வயதில் வாடகைக்கு சைக்கிளை எடுத்து ஓட்ட கற்றுக்கொள்வோம். ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு என பணம் கொடுத்து ஓட்டிய அனுபவம் பெரும்பாலும் 90ஸ் கிட்ஸ்களுக்கு உண்டு. இப்படியாக வாடகை சைக்கிள் முறை மீண்டும் துளிர் விடத் துவங்கியுள்ளது. ஆனால் இந்த முறை நவீனமாகவும், ஸ்மார்ட்டாகவும் இந்த முறை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.

இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களை நவீனமயமாக்குதலுக்காக ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. அதன்படி இந்தியாவின் பல முக்கிய நகரங்களை நவீனமயமாக்குதலுக்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் முக்கிய அம்சமே, மக்களுக்கு எளிமையான மற்றும் சுலபமான முறையில் போக்குவரத்தைக் கட்டமைக்க அரசு திட்டமிட்டு வருவதுதான்.

இந்த ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள அரசு ஸ்மார்ட் சிட்டிக்காக தனி அமைப்பை உருவாக்கி அதன் மூலம் அந்த பணிகளைச் செய்து வருகிறது. அந்த அமைப்புதான் தற்போது வாடகை சைக்கிள் முறையை ஜம்மு காஷ்மீர் பகுதியில் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி அந்த நகரில் உள்ள மக்கள் யார் வேண்டுமானாலும் சைக்கிளை வாடகைக்கு எடுத்து ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்குச் சென்று வரப் பயன்படுத்தலாம். ஏற்கனவே நாம் சிறு வயதில் பயன்படுத்திய அதே நடைமுறைதான். எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறோமோ அதற்கு ஏற்ப பணம் வழங்க வேண்டும்.

ஆனால் நாம் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்குச் சென்றால் அங்குள்ள சைக்கிள் நிறுத்தும் இடத்தில் நிறுத்திக்கொள்ளலாம். சைக்கிளை எடுத்த இடத்தில்தான் விட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. இதற்காக ஜம்மு நகரில் 60 இடங்களில் சைக்கிள் பார்க்கிங் செய்யும் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

நகரின் முக்கிய பகுதிகளான பஸ்ஸ்டாண்ட், கல்லூரி வாசல்கள், மருத்துவமனைகள், விமான நிலையங்கள் என இந்த பார்க்கிங் பகுதி நிறுவப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி நகரில் 120 இடங்களில் இது போன்ற சைக்கிள் பார்க்கிங் பகுதிகளை அமைக்கத் திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 60 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு சைக்கிள் நிறுத்தும் இடத்தில் 10 சைக்கிள்களை நிறுத்த முடியும். இப்படியாக 60 இடத்திற்கு 600 சைக்கிள்கள் தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்த மக்கள் யாரையும் அணுக வேண்டியது இல்லை. அவர்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் செல்போன் மூலமே இதைப் பயன்படுத்த முடியும்.

இதற்காக Yaana Bikes என்ற ஆப் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ்களில் அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி அதன் மூலமே சைக்கிளை எடுத்துச் செல்லலாம். இதற்காக யாரையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் இதற்கான கட்டணமும் குறைவாகவே வசூலிக்கப்படுகிறது.

இதற்கான கட்டணமாகக் குறைந்தபட்சம் ரூ50க்கு ஒரு நாளுக்கு 5 முறை, ஒரு முறைக்கு 30 நிமிடம் எனவும், அதிகபட்சமாக ரூ1500க்கு ஆண்டிற்கு 1500 முறை ஒரு முறைக்கு அதிகபட்சம் 30 நிமிடம் எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை எடுத்தால் அதிகபட்சம் 30 நிமிடம் வரை பயன்படுத்தலாம். 30 நிமிடத்திற்கு மேல் பயன்படுத்தினால் அது இரண்டாவது முறையாகக் கணக்கிடப்படும். அதற்கு அடுத்த ஒவ்வொரு 30 நிமிடமும் ஒரு முறையாகக் கணக்கில் கொள்ளப்படும்.

இந்த திட்டத்தின்படி ஜம்மு நகரில் 720 சைக்கிள்கள், 80 எலெக்ட்ரிக் சைக்கிள்கள், அதை நிறுத்துவதற்கு 120 ஸ்டேஷன்கள் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் சைக்கிளின் பயன்பாடு அதிகமாகினால் இந்த திட்டம் மேலும் பெரிதாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் 90ஸ் கிட்ஸ் இனி ஜாலியாக வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றலாம்.

இந்த திட்டம் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருவர் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்குச் செல்கிறார் என்றால் அவர் பைக், கார் பஸ் என ஏதாவது ஒரு விஷயத்தைப் பயன்படுத்தும்போது அதற்குச் செலவிடப்படும் எரிபொருளால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது. அதைக்குறைக்கவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

ஆனால் இந்த திட்டம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டே இதே போல ஸ்மார்ட்பைக் என்ற நிறுவனம் வாடகை சைக்கிளை அறிமுகப்படுத்தியது. முதலில் இதைப் பற்றி அதிகம் பேசத் துவங்கினாலும் இதைப்பயன்படுத்துவதில் பெரும் சிக்கல் இருந்தது. கடும் போக்குவரத்து நெருக்கடி, ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்குச் செல்ல அதிக நேரம் எடுத்தல் எனப் பல காரணங்களால் இந்த திட்டம் வெற்றிபெறவில்லை. இந்த திட்டம் வெற்றி பெற வேண்டும் என்றால் அரசு என்ன செய்ய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








