மதுரையில் ரயில் ஓட்டுநர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை! கவனம் திசை திருப்புவதால் விபத்து நடக்க வாய்ப்பு!
மதுரை கோட்ட ரயில்வேயில் உள்ள ரயில் இன்ஜின் பைலட்கள் இன்ஜின் ஓட்டும்போது ஸ்மார்ட் வாட்ச் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணியைச் செய்ய இந்த ஸ்மார்ட் வாட்ச் தொந்தரவாக இருப்பதால் இந்த முடிவை அறிவித்துள்ளனர். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் 3 ரயில்கள் விபத்திற்குள்ளான சம்பவம் இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு இந்த முழுவதும் உள்ள ரயில் கோட்ட அலுவலகங்களுக்கு ரயில்கள் பாதுகாப்பாக இயங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லி ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து ரயில்வே கோட்ட அலுவலகங்கள் சார்பில் ரயில் போக்குவரத்து குறித்த கண்காணிப்பு நடந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடந்த கண்காணிப்பில் ரயில் ஓட்டுநர்கள் பலர் கையில் ஸ்மார்ட் வாட்ச் அணிந்திருப்பதைக் கவனிக்க முடிந்தது. ஏன் ரயில் ஓட்டுநர்கள் ஸ்மார்ட்ச் வாட்ச் அணிகிறார்கள் என விசாரித்த போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ரயில் ஓட்டுநர்கள் இந்த ஸ்மார்ட் வாட்ச்களை விதிமுறைகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி செல்போன்களை பயன்படுத்தப் பயன்படுத்தப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.
ரயில் ஓட்டுநர்களுக்கு ரயிலை இயக்கும் போது செல்போனை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ரயிலை இயக்கும் போது செல்போனை பாக்கெட்டிலோ, அருகிலோ வைத்துக் கொள்ளக் கூடாது. மாறாக செல்போனை அவர்களைக் கொண்டு வரும் பையில் சுவிட்ச் ஆஃப் அல்லது சைலெண்டில் போட்டு மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்ற விதி இருக்கிறது. இது ஓட்டுநர்கள் கவனக்குறைவாக இருப்பதைத் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட விதிமுறை இது.

இதை பைபாஸ் செய்வதற்காக ரயில் ஓட்டுநர்கள் ஸ்மார்ட் வாட்ச்களை பயன்படுத்தி வந்துள்ளது. தங்கள் செல்போன் மூலம் இந்த ஸ்மார்ட் வாட்ச்களை ப்ளூடூத் மூலம் இணைத்து அதன் மூலம் போன் பேசுவது, மெசேஜ் அனுப்புவது உள்ளிட்டவற்றைச் செய்வது தெரியவந்தது. இதையடுத்து மதுரை கோட்ட பகுதியில் ரயில் இயக்கும் ரயில் ஓட்டுநர்கள் ரயிலை இயக்கும் போது ஸ்மார்ட் வாட்ச் அணியத் தடை விதிக்கப்பட்டு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
மதுரை கோட்ட பகுதியில் 110 கி.மீ வேகம் வரை ரயில்கள் பயணிக்க அனுமதியிருக்கிறது. இவ்வளவு வேகத்தில் பயணிக்கும் போது ரயில் ஓட்டுநர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். ஒரு நொடி கவனம் தவறினால் கூட சிக்னலை கவனிக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது. இதனால் ரயில் ஓட்டுநர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் அவர்களுக்குக் கவனக்குறைவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலில் இந்த ஸ்மார்ட் வாட்ச்களை உடல் ஆரோக்கியத்தை செக் செய்யும் ஒரு கருவியாகவே நினைத்து அதைத் தடை செய்யாமல் விட்டனர். சமீபத்தில் நடந்த ஆய்வில் தான் இதை செல்போனை பயன்படுத்த ஓட்டுநர்கள் செய்யும் மாற்று வழி என்பதை அறிந்து அதற்குத் தடை விதிக்கின்றனர். இனி இந்த தடை இந்தியா முழுவதும் கொண்டு வரக்கூட வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரயில் போக்குவரத்து ஒரு முக்கியமான போக்குவரத்தாக இருக்கிறது. ரயில் விபத்து நடந்தால் அதன் பாதிப்புகள் ஏராளமாக இருக்கும். இதனால் ரயில் ஓட்டுநர்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். விதிமுறையை மீறும் ஓட்டுநர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








