உள்ளே பதுங்கியிருந்தது அதுவா! ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் முன் பகுதியை உத்து பாத்த ஓனருக்கு அதிர்ச்சி! வீடியோ!
கார் மற்றும் டூவீலர் போன்ற வாகனங்களில், பாம்புகள் அடைக்கலம் புகும் சம்பவங்கள் இந்தியாவில் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. பாம்புகள் வெப்பத்தை தேடுவதுதான் இதற்கு காரணம். சுற்றுப்புற சூழல் மிகவும் குளிர்ச்சியாக மாறும்போது, பாம்புகளுக்கு உடலை வெப்பமாக வைத்து கொள்ள வேண்டிய தேவை ஏற்படும்.
எனவே வெப்பமான இடங்களை நோக்கி அவை படையெடுக்கும். அப்போது வாகனங்கள் தென்பட்டு விட்டால், பாம்புகள் அவற்றை தங்கள் வாழ்விடமாக மாற்றி கொள்ளும். எனவே குளிரான சூழல் இருக்கும்போது, வாகனங்களை பாதுகாப்பாக கையாள்வது நல்லது. பாம்புகள் பதுங்கியிருக்கலாம் என்பதுதான் நாங்கள் இப்படி சொல்ல காரணம்.

இதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று கேரள மாநிலத்தில் தற்போது நடைபெற்றுள்ளது. ஆம், ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டர் ஒன்றுக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. நல்ல வேளையாக பாம்பு பிடிப்பவரை அழைத்து வந்து, பாம்பை பிடித்து விட்டனர். அந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் முன் பக்க கவருக்குள், நாகப்பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. முன் பக்க கவர் வழியாக பாம்பின் வால் பகுதி வெளியே நீட்டி கொண்டிருந்ததை, அந்த ஸ்கூட்டரின் உரிமையாளர் பார்த்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பாம்பு பிடிப்பவரை அழைத்து வந்து, பாம்பை அப்புறப்படுத்தியுள்ளார். ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்குள் பதுங்கியிருந்தது அதிக விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பு ஆகும். நல்லவேளையாக யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில், அந்த பாம்பு பிடிபட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்பின் வனப்பகுதிக்குள் அந்த பாம்பு விடப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தியாவில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறையல்ல. வாகனங்களில் பாம்புகள் அடைக்கலம் புகுந்த நிகழ்வுகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த காலங்களிலும் ஏராளமான முறை நடைபெற்றுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உங்கள் வாகனங்களில் பாம்புகள் பதுங்கியிருந்தால், அவற்றை நீங்களாக பிடிக்க வேண்டாம். ஏனெனில் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டவை. எனவே பாம்புகளை பிடிப்பதில் கை தேர்ந்த நிபுணர்களை அழைத்து வருவது நன்மை பயக்கும். அத்துடன் வனத்துறையின் உதவியையும் நீங்கள் நாடலாம்.
அதேபோல் பாம்புகளை வேண்டுமென்றே துன்புறுத்துவது அல்லது கொலை செய்வது போன்ற காரியங்களிலும் நீங்கள் எக்காரணத்தை கொண்டும் ஈடுபட வேண்டாம். இத்தகைய செயல்களை செய்பவர்கள் மீது வனத்துறை அதிகாரிகள் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








