பனிக்கட்டிகள் படர்ந்த சாலைகளில் கார் ஓட்டும்போது...!!
மழை, பனிப்பொழிவு காலங்களில் வாகனங்களை மிக மிக எச்சரிக்கையாக இயக்க வேண்டும் என்பது அறிந்ததே. இந்த நிலையில், வட இந்தியாவில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக, வாகனப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மலைப்பிரதேசங்களுக்கு வருவோர் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், இந்த சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும், பனிபடர்ந்த சாலைகளில் காரை ஓட்டிப் பார்க்கவும் பலர் அங்கு செல்கின்றனர்.அதுபோன்று செல்லும்போது, பனிக்கட்டிகள் நிறைந்த சாலைகளில் வாகனங்களை செலுத்தும்போது வழுக்கும் ஆபத்து அதிகம் என்பதால், மிக எச்சரிக்கையாக இருப்பது அவசியம். மேலும், கடும் குளிர், பனிப்பொழிவு காலங்களில் வாகனங்களை இயக்கும்போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தவிர்த்தல் நலம்
பனிப்பொழிவு அதிகம் நிறைந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பதே நலம். அவ்வாறு அங்கு செல்லும்போது அதற்கேற்ற வாகனங்கள் மற்றும் ஆக்சஸெரீகள் பொருத்தப்பட்ட வாகனங்களை பயன்படுத்துவது அவசியம். அதைவிட, பனிபடர்ந்த சாலைகளில் வாகனங்களை இயக்குவதற்கு சில வழிமுறைகளையும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

ஸ்நோ டயர்
பனிப்பொழிவு மிக்க பகுதிகளிலேயே வசிப்பவர்கள் என்றால், கண்டிப்பாக ஸ்நோ டயர்களை மாற்றுவது அவசியம். குறைந்தபட்சம் 6/32-இஞ்ச் ட்ரெட் கொண்ட டயர்கள் இருக்க வேண்டும். ஸ்நோ டயர்களின் சுவர்களிலேயே பனிச்சாலைகளுக்கான டயர் என்பதை குறிக்கும் குறியீட்டுச் சின்னம் கொடுக்கப்பட்டிருக்கும். இல்லையெனில், சிறப்பான ட்ரெட் உள்ள டயர்கள் இருந்தால் வழுக்கும் அபாயம் குறையும்.

ஸ்கிரீன் வாஷ்
தரமான ஸ்கிரீன் வாஷ் திரவத்தை பயன்படுத்துவதன் மூலம் மைனஸ் 35 டிகிரி வெப்பநிலையில், கூட பனிக்கட்டிகள் விண்ட்ஷீல்டில் படியாது. அத்துடன் வைப்பர் இயக்கத்திற்கும் தங்கு தடை இருக்காது. முன்னால் செல்லும் வாகனத்திற்கும், உங்களது வாகனத்திற்கும் அதிக இடைவெளி கடைபிடிக்க வேண்டியது அவசியம். சாதாரண நேரத்தைவிட 5 மடங்கு கூடுதல் இடைவெளி இருக்க வேண்டும்.

ஆட்டோ கன்ட்ரோல் வைப்பர்
காரை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பாகவே, ஆட்டோ வைப்பர் கன்ட்ரோல் சிஸ்டத்தை அணைத்துவிடுவது அவசியம். இல்லையெனில், வைப்பர் தானாக இயங்கினால், பனிக்கட்டிகளால் பாதிப்பு ஏற்படும்.

இது தவறான எண்ணம்
ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட வாகனங்கள் பனிப்படர்ந்த சாலைகளிலும், வளைவுகளிலும் சிறப்பான தரைபிடிமானத்தை வழங்கும் என்பது தவறான தகவல். ஆக்சிலரேசனை சிறப்பாக பிரித்தளிக்குமே தவிர்த்து, அவை தரை பிடிமானத்தை வழங்கும் என்பது தவறு. இதுபோன்ற சமயங்களில் உடனடி ஆக்சிலரேசனை கொடுத்து சமநிலையை பாதிக்கும். அதாவது, எந்த வீல் டிரைவ் சிஸ்டம் இருந்தாலும், நிதானமாக ஓட்ட வேண்டும் என்பதே அடிப்படை விஷயம்.

சுத்தம் செய்யுங்கள்
கூரை மீது விழும் பனிக்கட்டிகளை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம். இல்லையெனில், பனிக்கட்டிகள் உருகி விண்ட் ஸ்கிரீனில் வந்து பார்வையை மறைக்கும். விண்ட்ஷீல்டை சுத்தம் செய்வதற்கு வெந்நீரை பயன்படுத்தக்கூடாது. தேவைப்பட்டால், டீ - ஐஸ் ஸ்பிரே சாதனத்தை பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள்.

ஸ்டீயரிங் கட்டுப்பாடு
பனிப்பொழிவு நிறைந்து வெப்ப நிலை வெகுவாக குறையும்போது சாலைகளில் படர்ந்திருக்கும் பனிக்கட்டிகள் கண்ணாடி தரை போன்று மாறிவிடும். அதுபோன்ற சாலையில் காரை செலுத்தும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். காரின் பின்புறம் வலது புறம் வழுக்கினால், ஸ்டீயரிங் வீலை வலது புறம் திருப்பி சமநிலைக்கு கொண்டு வர வேண்டும்.

சன்கிளாஸ்
பனிப்படர்ந்த சாலைகளில் செல்லும்போது மெல்லிய சூரிய வெளிச்சத்தால் கண்கூச்சம் ஏற்படலாம். எனவே, சன் கிளாஸ் கையில் இருப்பதும் அவசியம். சவுல், டார்ச் லைட், தரைவிரிப்பு போன்றவையும் கையில் எடுத்துச் செல்வது நலம்.


Click it and Unblock the Notifications








