தம்மாதுண்டு பெட்டியை கையில குடுத்த மகள்! எதோ சாதாரண விஷயம்னு நெனச்ச அப்பா அப்படியே ஒறஞ்சு போயிட்டாரு!
இந்தியாவில் தற்போது நடிகர், நடிகைகளுக்கு இணையாக சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் (Social Media Influencers) பிரபலமாகி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் நடிகர், நடிகைகளே தங்கள் திரைப்படங்களின் ப்ரோமோஷன்கள் உள்ளிட்ட விஷயங்களுக்காக, சில சமயங்களில், சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களை சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகி விடுகிறது. இதன் மூலம் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது. எனவே நிறைய சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள், தற்போது விலை உயர்ந்த கார்களில் சர்வ சாதாரணமாக வலம் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
அத்துடன் நிறைய சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு மிகவும் விலை உயர்ந்த கார்களை பரிசளிப்பதையும் நாம் தொடர்ச்சியாக கண்டு வருகிறோம். இந்த வரிசையில் தற்போது ஒரு சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் தனது தந்தைக்கு மிகவும் விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் ஆக்ரித்தி ராணா (Aakriti Rana) என்ற பக்கம் மிகவும் பிரபலம். இந்த பக்கத்தை நிர்வகிக்கும் பெண் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் வாகனங்கள் உள்பட பல்வேறு வகையான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த வரிசையில் சமீபத்தில் ஒரு புதிய வைரல் வீடியோ (Viral Video) ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் மட்டுமல்லாது, அவரது யூடியூப் (YouTube) பக்கத்திலும் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோவின் தொடக்கத்தில் பெண் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர், புத்தம் புதிய ஜீப் வ்ராங்லர் ரூபிகான் (Jeep Wrangler Rubicon) டீலர்ஷிப்பில் இருந்து டெலிவரி எடுப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

அதற்கு பிறகு அவர் அந்த காரில், ஸ்டிக்கர் கடைக்கு கொண்டு சென்று, '1962' என்ற ஸ்டிக்கரை ஒட்டுகிறார். இது அவரது தந்தையின் பிறந்த வருடம் ஆகும். இதன் பின் அவரது தந்தைக்கு பரிசாக வழங்குவதற்காக, அவர் வசிக்கும் சிம்லாவிற்கு ஜீப் வ்ராங்லர் ரூபிகான் காரை அவர் கொண்டு செல்கிறார்.
ஷிம்லாவில் உள்ள வீட்டிற்கு சென்றடைந்ததும், அவரது தந்தையின் கையில், சிறிய பாக்ஸ் ஒன்றை அவர் ஒப்படைத்தார். ஆரம்பத்தில் அவரது தந்தை முதலில் அதை சாதாரண 'கீ செயின்' என நினைத்து கொண்டார். ஆனால் அதற்கு பிறகு, அந்த பெண் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சரும், அவரது சகோதரரும், அவர்களது தந்தையை ஜீப் வ்ராங்லர் ரூபிகான் காருக்கு முன்னால் அழைத்து சென்றனர்.
அந்த விலை உயர்ந்த கார், தனக்கான பரிசு என்பதை அறிந்ததும், அந்த மனிதரின் முகத்தில் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை நம்மால் பார்க்க முடிகிறது. அவருக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ள ஜீப் வ்ராங்லர் ரூபிகான் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) 71.65 லட்ச ரூபாய் ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 90 லட்ச ரூபாய்க்கு நெருக்கமாக வரும்.
இந்த காரில் பொருத்தப்பட்டிருப்பது, 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 268 பிஎஸ் பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் என இந்த காரில் ஏராளமான வசதிகளும் வாரி வழங்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் (Mercedes Benz G-Class) மற்றும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) உள்ளிட்ட கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக ஜீப் வ்ராங்லர் ரூபிகான் கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஆஃப்ரோடு திறன்களை அதிகம் கொண்ட கார்களில் ஒன்றாக ஜீப் வ்ராங்லர் ரூபிகான் கருதப்படுகிறது. இதனால் சிம்லா போன்ற இடங்களில் பயன்படுத்துவதற்கு அது மிகவும் ஏற்ற கார் ஆகும். எனவே மகள் சரியான ஒரு காரைதான் தனது தந்தைக்கு பரிசாக வழங்கியுள்ளார் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








