தேசிய கொடி உடன் சைக்கிளில் உலா வரும் நபர்... சாஃப்ட்வேர் வேலையை விட்டது இதுக்குதானா?
குஜராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரும், ஆன்மீக தியான (Heartfulness) பயிற்சியாளருமான தருண் பர்மர் (Tarun Parmar), ஒரு அசாதாரண சைக்கிள் (Cycle) பயணத்தை மேற்கொண்டுள்ளார். சுமார் 1700 கி.மீ. சைக்கிள் பயணத்தின் மூலம் தியானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இந்திய அரசின் "நஷா முக்த் பாரத் அபியான்" (போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கம்) திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கத்துடன் இதைச் செய்கிறார்.
செப்டம்பர் 13-ம் தேதி டெல்லிக்கு அருகே நொய்டாவில் தொடங்கிய இந்தப் பயணம், தினமும் சுமார் 140 கி.மீ. தூரத்தை கடந்து ஏழு மாநிலங்கள் மற்றும் பல நகரங்கள் வழியாக நடைபெறுகிறது. கடவுள் கிருஷ்ணர் பிறந்த இடமான மதுரா உட்பட முக்கிய நிறுத்தங்களுடன் இந்தியாவின் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்கிறார்.

தருண் பர்மரின் இந்த நீண்ட தூர சைக்கிள் பயணம் கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ளது. நாளை (செப்டம்பர் 27) ஹைதராபாத்தில் உள்ள ஹார்ட்ஃபுல்னெஸ் இன்ஸ்டிடியூட்டின் உலகளாவிய தலைமையகமான கான்பா சாந்திவனத்தில் இவரது பயணம் நிறைவடைகிறது. ஆன்மீக தியானத்தின் உலகளாவிய வழிகாட்டியான ஸ்ரீ கம்லேஷ் படேல் (தாஜி) அவர்களின் பிறந்தநாளான செப்.27இல் கான்பா சாந்திவனத்தை வந்தடைகிறார்.
தருணுக்கு, இந்தப் பயணம் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் தியானம் ஆகிய இரண்டு ஆர்வங்களின் சங்கமமாக அமைந்துள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் சைக்கிள் ஓட்டும் பழக்கம் கொண்ட இவர், தனது தனிப்பட்ட வளர்ச்சிக்கும், மன அமைதிக்கும் ஹார்ட்ஃபுல்னெஸ் தியானத்தை ஒரு முக்கிய அடிப்படையாகக் கொண்டுள்ளார்.

சுமார் 1,700கிமீ-க்கு மேற்கொண்டுள்ள இந்த நீண்ட தூர பயணம் குறித்து தருண் கூறுகையில், "சைக்கிள் ஓட்டுதல் மற்றும் தியானம் ஆகிய எனது இரண்டு ஆர்வங்களை ஒன்றிணைப்பது இந்தப் பயணம் ஆகும். உண்மையான மாற்றம் மனிதரின் உள்ளுக்குள் தொடங்குகிறது என்பதை மக்களுக்கு காட்ட விரும்புகிறேன். தியானம் என் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் இல்லாத இந்தியாவை நோக்கிய பெரிய இயக்கத்தில் சேரும் அதே நேரத்தில், தியானத்தை ஏற்றுக்கொள்ள மற்றவர்களையும் ஊக்குவிப்பேன் என்று நம்புகிறேன்" என்றார். தருண் பர்மரின் இந்த முயற்சி குறித்து ஹார்ட்ஃபுல்னெஸின் உலகளாவிய வழிகாட்டியான தாஜி கூறுகையில், "தருண் போன்ற இளைஞர்கள் தன்னலமற்ற மற்றும் மீள்திறன் கொண்ட மனப்பான்மையை வெளிப்படுத்துகிறார்கள்.

உடல் வலிமையையும் உள் ஒழுக்கத்தையும் இணைப்பதன் மூலம், அவர்கள் சமநிலை மற்றும் உயிருள்ள எடுத்துக்காட்டுகளாக மாறுகிறார்கள். அவரது இந்த பயணம் தியானத்தின் சக்திக்கு ஒரு அஞ்சலி மட்டுமல்ல, போதைப்பொருள் இல்லாத, ஆரோக்கியமான இந்தியாவிற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ஒரு அழைப்பும் ஆகும்.
ஹார்ட்ஃபுல்னெஸில், உண்மையான மாற்றம் இதயத்தில் இருந்து தொடங்குகிறது என்று நாங்கள் நம்புகிறோம், தருணின் முயற்சி அந்த உண்மையை பிரதிபலிக்கிறது" என்று குறிப்பிட்டார். "ஹார்ட்ஃபுல்னெஸ் மற்றும் நஷா முக்த் பாரத்"-க்கான சைக்கிள் பயணம் என்ற இந்த முயற்சியின் மூலம், தியானம், உள் அமைதி மற்றும் சுய கட்டுப்பாடு ஆகியவற்றின் நன்மைகளை தனிநபர்களும் சமூகங்களும் கண்டறிய தருண் ஊக்குவிக்கிறார்.

இந்த நீண்ட தொலைவு பயணத்தின் தருண் பர்மர் பயன்படுத்தி இருப்பது, ஃபையர்ஃபாக்ஸ் (Firefox) நிறுவனத்தின் 'மீட்டியோர்' (Meteor) என்கிற சைக்கிள் ஆகும். இந்தியாவை சேர்ந்த சைக்கிள் உற்பத்தி நிறுவனமான ஃபையர்ஃபாக்ஸ் நிறுவனத்தின் ஹைப்ரீட் (Hybrid) சைக்கிளாக மீட்டியோர் விளங்குகிறது. ஹைப்ரீட் என்பது மீட்டியோர் சைக்கிளின் பயன்பாட்டை குறிக்கிறது.
அதாவது, இந்த சைக்கிளை சாதாரணமான சாலைகளுக்கு பயன்படுத்துவது மட்டுமின்றி, ஏற்ற, இறக்கமான மலைப்பிரதேச சாலைகளிலும் பயன்படுத்தலாம். அலாய் ஃப்ரேமில் உருவாக்கப்படும் இந்த சைக்கிளில் 21-ஸ்பீடு கியர்கள் மற்றும் மெக்கானிக்கல் டிஸ்க் பிரேக்குகள் (Disc Brakes) வழங்கப்படுகின்றன. அத்துடன், சஸ்பென்ஷனுக்கு 50மிமீ டிராவல் உடன் ஃபோர்க்குகள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபையர்ஃபாக்ஸ் மீட்டியோர் சைக்கிளில் தருண் பர்மரின் இந்த 14 நாள் பயணம், உடல் வலிமையும் உள் ஒழுக்கமும் கைகோர்த்துச் செல்ல முடியும் என்பதையும், ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக இரண்டையும் பயன்படுத்த முடியும் என்பதையும் நினைவூட்டுகிறது. அவரது இந்த பயணம் ஆயிரக்கணக்கானவர்கள் தியானத்தை ஏற்றுக்கொண்டு சமநிலை, ஆரோக்கியம் மற்றும் விழிப்புணர்வு நிறைந்த வாழ்க்கையைத் தழுவ ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









