இந்த சாலை வந்த பிறகு ஹைதராபாத்தின் மொத்த அழகும் மாறிடுச்சு!! சோலார் கரண்ட்டை ஈஸியா எடுத்துக்குறாங்க!
இந்தியாவின் முதல் சோலார்-ரூஃப் சைக்கிள் டிராக் ஹைதராபாத்தில் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் முதலாவதாகவும், உலகளவில் 2வது சோலார்-ரூஃப் சைக்கிள் டிராக்காகவும் விளங்கும் இது ஹைதராபாத் மாநகரில் வாரம் முழுவதும், 24 மணிநேரத்திற்கும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தினசரி பயன்பாட்டிற்கு சைக்கிளை பயன்படுத்துவது மக்களிடத்தில் சமீப காலங்களில் வெகுவாக அதிகரித்துள்ளது. பெட்ரோல்/ டீசலுக்கு செலவிட தேவையிருக்காது என்பது ஒரு காரணம். அதேபோல், சைக்கிளை மிதிப்பதால் உடற்பயிற்சி செய்தது போன்றும் இருக்கும் என்பதால், பலர் விரும்பி சைக்கிளிங் செய்கின்றனர்.

இதன் காரணமாகவே, கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு புது புது சைக்கிள்கள் மார்க்கெட்டில் விற்பனை வந்துள்ளன. மேலும், எலக்ட்ரிக் சைக்கிள்களும் நிறைய ஸ்டைல்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன. நம் நாட்டில் சைக்கிளிங் செய்வதில் உள்ள ஒரே பிரச்சனை என்னவென்றால், சைக்கிளிங் செய்வதற்கு ஏற்ற சாலை கட்டமைப்பு பெரும்பாலான பகுதிகளில் இல்லாததே ஆகும். ஒரு சில மாநகர சாலைகளில் மட்டுமே சைக்கிளிங்கிற்கு என்று தனி பாதை உள்ளது.
அத்தகைய மாநகரங்களுள் ஒன்றான ஹைதராபாத்தில் சைக்கிளிங்கிற்கு என்றே தனியாக பாதை அமைக்கப்பட்டு உள்ளது. ஹைதராபாத்தில் நானாக்ராம்குடா என்ற பகுதியையும், நர்சிங்கி என்ற பகுதியையும் இணைக்கும் விதமாக ஹைதராபாத்தின் அவுட்டர் ரிங் சாலை (ORR)-ஐ ஒட்டியவாறு சைக்கிள் ஓட்டிகளுக்கான இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது.

23 கிமீ தொலைவிற்கு உருவாக்கப்பட்டுள்ள இந்த பாதை உங்களை ஓர் விரைவுச்சாலை உடன் இணைக்கும். இந்த சைக்கிளிங் பாதைக்கு ஹெல்த்வே (Healthway), அதாவது சுகாதாரத்திற்கான வழி என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இவ்வாறான சைக்கிளிங் டிராக்குகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் உள்ளது. நம் சென்னையில் கூட கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ளது.
ஆனால், இந்த சைக்கிளிங் பாதையை மட்டும் குறிப்பிட்டு பார்ப்பதற்கு காரணம், இந்த பாதைக்கு மேற்கூரை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், சில கிமீ தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த மேற்கூரையில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதாவது, இந்த பேனல்களின் மீது விழும் சூரிய ஒளி மின்னாற்றலாக சேமிக்கப்பட்டு, பின்னர் மற்ற விஷயங்களுக்கு பயன்படுத்தப்படும்.

மேற்கூரைக்கு உள்ளே, பாதைக்கு வெளிச்சம் தரும் வகையில் வழிநெடுக விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளதை படங்களில் காணலாம். இந்த விளக்குகள் எரிவதற்கான ஆற்றலும் சோலார் பேனல்கள் மூலமாகவே கிடைக்கும். இவ்வாறு, சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட சைக்கிளிங் பாதை இந்தியாவில் இதுவே முதல்முறை ஆகும். ஆனால் உலகளவில் இது 2வது சோலார்-ரூஃப் சைக்கிளிங் டிராக்.
இதன் காரணமாகவே, இந்த சைக்கிளிங் டிராக் ஏற்கனவே அருகில் வசிக்கும் மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது. அக்டோபர் 2ஆம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று இந்த சைக்கிளிங் டிராக்கை தெலுங்கானா அமைச்சர் கேடி ராமா ராவ் திறந்து வைத்துள்ளார். இந்த சைக்கிள் பாதை வருடமும் முழுவதும், 365 நாட்களுக்கும், 24 மணிநேரமும் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புது, புது வியாதிகள் உருவாகும் இன்றைய காலத்தில் சைக்கிள் மிதிப்பது ஓர் சிறந்த உடற்பயிற்சி ஆகும். அத்துடன், மோட்டார் வாகனங்களில் செல்வதை காட்டிலும் சைக்கிளில் பயணிக்கும்போது சுற்றுச்சூழலை இன்னும் மெதுவாக அனுபவிக்கலாம். ஆதலால், ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ்வாறான நீண்ட தொலைவு சைக்கிளிங் டிராக்குகளை மற்ற இந்திய நகரங்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications
