2020ல் கார்களில் வர இருக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகள் - சிறப்புத் தொகுப்பு
கார்களின் தொழில்நுட்பமும், அதில் இடம்பெறும் வசதிகளும் மெல்ல வளர்ச்சி கண்டு வந்த நிலை மாறி, தற்போது நித்தமும் ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும் அளவுக்கு தொழில்நுட்ப துறை மாபெரும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு வந்த மாடல்களைவிட இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் கார்களில் பல புதிய தொழில்நுட்ப வசதிகளை பார்க்க முடிகிறது. இந்த நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் கார்களில் தொழில்நுட்பங்கள் மற்றும் வசதிகள் எவ்வாறு இருக்கும் என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. பயோமெட்ரிக் அக்செஸ்
தற்போது பயன்பாட்டில் இருக்கும் கீ லெஸ் என்ட்ரி என்ற சாவி இல்லாமல் காருக்குள் செல்வதற்கான தொழில்நுட்பத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக கூறப்படுவதுதான் பயோமெட்ரிக் அக்செஸ். தற்போது பல ஸ்மார்ட்போன்களில் இருப்பது போன்று, கைரேகையை அடையாளமாக வைத்து காரை திறப்பது மற்றும் எஞ்சினை ஸ்டார்ட் செய்யும் வசதிகளை பெற முடியும். எனவே, சாவியை தொலைத்து விடுவதால் ஏற்படும் பிரச்னைகளுக்கும், மறந்துவிட்டு செல்லும்போது ஏற்படும் தொந்தரவுகளுக்கும் இனி வேலை இருக்காது. மேலும், பாக்கெட்டில் வைத்துச் செல்லும் அவசியமும் இருக்காது.

02. ஆக்டிவ் விண்டோ டிஸ்ப்ளே
தற்போது ஹெட் அப் டிஸ்ப்ளே எனப்படும் தொழில்நுட்ப வசதி விலையுயர்ந்த கார்களில் இருக்கிறது. காரின் வேகம், எரிபொருள் அளவு போன்ற முக்கியமான தகவல்களை ஓட்டுனருக்கு எளிதாக விண்ட் ஸ்கிரீன் எனப்படும் முன்பக்க கண்ணாடியில் காட்டுவதே இதன் வேலை. இதனால், ஓட்டுனரின் கவனக் குறைவு தவிர்க்கப்படுகிறது. இதே போன்று, ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் விண்ட் ஸ்கிரீனில் விதவிதமான படங்கள் மற்றும் நேவிகேஷன் சாதனத்தின் வழிகாட்டும் வரைபடங்களை காட்டும் தொழில்நுட்பத்துடன் கார்கள் வரும் என்று ஆணித்தரமாக எதிர்பார்க்கப்படுகிறது.

03. ரிமோட் வெகிக்கிள் ஷட்டவுன்
சில கார்களில் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. 2020ல் சாதாரண கார்களில் கூட எதிர்பார்க்கப்படும் தொழில்நுட்பம். அதாவது, கார் திருடுபோகும்போது, இருந்த இடத்திலிருந்தே காரை நிறுத்துவதற்கான தொழில்நுட்ப வசதி. தற்போது சில மேலை நாடுகளில் திருடர்கள் எடுத்துச் செல்லும் கார்களை இதுபோன்று, இன்டர்நெட் மூலமாக காரில் இருக்கும் கம்ப்யூட்டர் உதவியுடன் காரை நிறுத்திவிட்டு போலீசார் எளிதாக அந்த காரையும், திருடனையும் மடக்கி விடுகின்றனர்.

04. பிரேக் ஃபெயிலியர்
தற்போது கார்களில் பிரேக் ஃபெயிலியர் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, ஆக்சிலரேட்டர் பெடலில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது குறைபாடுகள். ஆனால், 2020ல் வரும் கார்களில் சென்சார் மூலமாக கார் பெடல்கள் சிக்குண்டுவிட்டால், எஞ்சினை அணைப்பதற்கும், உடனடியாக தானியங்கி பிரேக் மூலமாக காரை நிறுத்துவதற்குமான வசதிகள் இருக்கும்.

05. பாடி பேனல் பேட்டரிகள்
வரும் ஆண்டுகளில் எலக்ட்ரிக் கார்களின் முக்கியத்துவமும், வர்த்தமும் வெகுவாக அதிகரிக்கும் என்ற நிலை உள்ளது. ஆனால், எலக்ட்ரிக் கார்களில் பேட்டரி வைப்பதற்கான இடமும், எடையும் அதிகம் தேவைப்படுகிறது. இதற்கு மாற்றாக, பாடி பேனல்களுக்குள் அடங்கிவிடக்கூடிய மெல்லிய தடிமன் கொண்ட பேட்டரிகள் இருக்கும்.

06. கெஸ்ச்சர் கன்ட்ரோல்
விரல் அல்லது கை அசைவுகளின் மூலம், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட சாதனங்களை இயக்கும் வசதிகளும் 2020ம் ஆண்டு கார்களில் இடம்பெற்றிருக்கும். ஏற்கனவே, கெஸ்ச்சர் கன்ட்ரோல் மூலமாக இயங்கக்கூடிய கார் சாதனங்களை மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ, ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்கள் அறிமுகம் செய்திருக்கின்றன. இவை கான்செப்ட் நிலையிலிருந்து, சாதாரண பயன்பாட்டுக்கு உகந்ததாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

07. ஆட்டோமேட்டிக் கார்
ஓட்டுனர் துணையில்லாமல் இயங்கக்கூடிய கார்களின் பயன்பாடும் 2020ல் துவங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் தானியங்கி கார்களின் வருகைக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அதற்கு கார் நிறுவனங்கள் தயாராக வேண்டிய நேரமிது என்று என்விடியா பிராசஸர் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். அவரது கூற்றுப்படி, முழுமையான தானியங்கி காராக இல்லாவிட்டாலும், தானியங்கி இயக்க தொழில்நுட்ப வசதிகள் மிகுந்த உயர்வகை கார்கள் இந்தியாவில் தடம் பதிக்கும் வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதற்கில்லை.

08. எலக்ட்ரானிக் சன் வைசர்
கார்களில் செல்லும்போது எதிர் திசையில் சூரியனிடமிருந்து வரும் ஒளியின் காரணமாக கண்கூச்சத்தை தருகிறது. அவற்றை தவிர்ப்பதற்காக, ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதிய எலக்ட்ரானிக் சன் வைசர் ஒன்றை கண்டறிந்துள்ளது. இதன்படி, ஓட்டுனரின் முகத்தை சென்சார்கள் மூலமாக அடையாளம் வைத்து, விண்ட் ஷீல்டில் சூரிய ஒளியை தடுத்து, கண் கூச்சத்தை தவிர்க்கும் வகையில், கண்ணாடியில் தற்காலிகமாக சூரிய ஒளி தடுப்பு பகுதியை ஏற்படுத்தும். கார் செல்லும் திசைக்கு தகுந்தாற்போல், மாற்றம் நிகழும். தற்போது காரின் உட்புறத்தில் இருக்கும் ரியர் வியூ கண்ணாடிகள் இரவில் பின்னால் வரும் வாகனங்களின் ஹெட்லைட் ஒளியை தவிர்ப்பது போன்றே இந்த சிஸ்டம் செயல்படும்.

09. கார் கம்யூனிகேஷன்
முன்னால் செல்லும் காரை முந்தும்போதும், சாலை சந்திப்புகளில் கடக்க முற்படும்போது, விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பை இந்த கார் கம்யூனிகேஷன் தொழில்நுட்பம் மூலமாக தவிர்க்கப்படும். ஒவ்வொரு காரிலும் இருக்கும் தொடர்பு சாதனம் மூலமாக, குறிப்பிட்ட வட்டத்திற்குள் வரும் கார்களின் நடமாட்டத்திற்கு தக்கவாறு காரின் வேகத்தை குறைத்து பாதுகாப்பாக கடக்கவும், முந்துவதற்கும் உதவி செய்யும். அமெரிக்காவின் நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

01. நேவிகேஷன் திரையுடன் ஓர் ஹெல்மெட்...
02. கார் பழசோ, புதுசோ...
03. அசத்தலான கார் தொழில்நுட்பங்கள்


Click it and Unblock the Notifications