ரத்தன் டாடாவும், அவரது மோட்டார் உலகமும்... பிறந்த தின சிறப்பு பகிர்வு!
குண்டூசி முதல் குபேர கார்கள் வரை தயாரிக்கும், இந்தியாவின் வர்த்தக சாம்ராஜ்யமாக திகழும் டாடா குழுமத்தை உலகறியச் செய்ததில், ரத்தன் டாடாவுக்கு மிக மிக முக்கிய பங்குண்டு. அவரது தலைமையின் கீழ் பல வெற்றிகளை டாடா குழுமத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் குவித்தன. மேலும், சர்வதேச அளவில் முக்கிய அடையாளத்தையும் டாடா நிறுவனங்கள் பெறுவதற்கு ரத்தன் டாடா காரணகர்த்தாவாக விளங்கினார்.
குறிப்பாக, ஆட்டோமொபைல் துறை மீது மிக அதீத ஆர்வம் கொண்டதால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல புதிய பெருமைகளை அவரது தலைமையின் கீழ் பதிவு செய்தது. வர்த்தகத் துறையில் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாய் திகழும் ரத்தன் டாடா இன்று தனது 78வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவ்வேளையில், ஆட்டோமொபைல் துறையில் அவரது மகத்தான சாதனைகள் மற்றும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை தாங்கி வருகிறது இந்த செய்தித் தொகுப்பு.

செல்வ செழிப்பு மிக்க குடும்பம்
1937ம் ஆண்டு குஜராத் மாநிலம், சூரத் நகரில் நேவல் - சோனூ தம்பதியருக்கு மகனாக பிறந்தார் ரத்தன் டாடா. ரத்தன் டாடாவின் இளம் வயதிலேயே அவரது பெற்றோர் தனித்தனியாக பிறந்ததால், பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தார். செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்த ரத்தன் டாடா, மும்பையிலுள்ள கேம்பியன் பள்ளி மற்றும் கதீட்ரல் மற்றும் ஜான் கேனல் பள்ளியில் உயர் வகுப்புகளையும் படித்தார். நிர்வாக படிப்பை ஹார்வார்டு பல்கலைகழகத்தில் முடித்த அவருக்கு பல உயர் பதவிகள் தேடி வந்தபோதிலும், தாய் நாட்டின் முன்னேற்றத்திற்காக தனது பணிகள் அமைய வேண்டும் என்ற விருப்பத்துடன் இந்தியா திரும்பினார்.

முதல் பணி
1961ல் தங்களது குடும்பத்திற்கு சொந்தமான டாடா ஸ்டீல் நிறுவன ஆலையில் சாதாரண பணியாளராக சேர்ந்தார். பின்னர், தனது திறமையினால் படிப்படியாக உயர்ந்து 1991ம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவராக உயர்ந்தார். 1991ல் ஓய்வு பெறுவதாக ஜே.ஆர்.டி.டாடா அறிவித்ததுடன், தனது நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிற்கான வாரிசாக ரத்தன் டாடாவை அறிவித்தார் ஜே.ஆர்.டி. டாடா. இனி வரும் ஸ்லைடுகளில், அவரது ஆட்டோமொபைல் துறை வாழ்வில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை காணலாம்.

முதல் பயணிகள் கார்
ரத்தன் டாடா பொறுப்பேற்றதற்கு பின் பல துறைகளிலும் டாடா மோட்டார்ஸின் செயல்பாடுகள் சூடுபிடித்தன. அவ்வாறு, டாடா குழுமத்தின் அங்கமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளும் தீவிரமாகின. 1998ல் அந்த நிறுவனம் தங்களது முதல் பயணிகள் காராக டாடா இண்டிகாவை வெளியிட்டது. அடுத்த இரு ஆண்டுகளில், அதன் ரகத்தில் விற்பனையில் நம்பர்-1 மாடலாக மாறியது.

ரத்தன் டாடாவின் கனவு கார்
இந்திய மக்களின் வாழ்வியலை நன்கு அறிந்திருந்த ரத்தன் டாடா, நடுத்தர குடும்பத்தினர் இருசக்கர வாகனங்களை தவிர்த்து, பாதுகாப்பாக பயணிக்க ஒரு குறைந்த விலை காரை உருவாக்க எண்ணினார். அந்த விதத்தில், அவரது கனவில் உருவான கார்தான் டாடா நானோ. ஒரு லட்ச ரூபாய் கார் என்று பிரகனடப்படுத்தப்பட்ட இந்த காரை உலகமே ஆவலோடு எதிர்நோக்கியது நினைவிருக்கலாம். மேலும், ஆட்டோமொபைல் வரலாற்றில் ஒரு புதிய புரட்சியை படைத்த கார் என்ற பெருமையும் டாடா நானோவுக்கு உண்டு. வர்த்தக ரீதியில் வெற்றி பெறாவிட்டாலும், இது வாகன பொறியியல் துறையின் வல்லமைக்கு ஓர் எடுத்துக்காட்டான மாடல் என்றால் மிகையல்ல.

ஜாகுவார், லேண்ட்ரோவரை வாங்கிய பெருமை...
நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த, இங்கிலாந்தை சேர்ந்த பாரம்பரியம் மிக்க ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் ஆகிய இரு சொகுசு கார் நிறுவனங்களையும், 2008ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் கையகப்படுத்தியது. ரத்தன் டாடாவின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக, இது கூறப்படுவதுடன், பாரம்பரிய மிக்க நிறுவனங்களை கைகொடுத்து உதவியதாகவே ஆட்டோமொபைல் துறையினர் ரத்தன் டாடாவை புகழ்ந்தனர். மேலும், சிறப்பான முதலீடுகள் காரணமாக, வெகு வேகமாக ஜாகுவார், லேண்ட்ரோவர் நிறுவனங்கள் இன்று மிகச்சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகின்றன. மேலும், ரத்தன் டாடாவின் முடிவு காரணமாக, அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த 33,000 பேரின் வாழ்வாதாரத்தை காத்த கடவுளாகவும் கருதப்படுகிறார்.

கோவைக்கு ரகசிய விசிட்
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார் தயாரிப்பில், கோவையிலுள்ள ஜெயம் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. டாடா கார்களுக்கான எஞ்சின் தயாரிப்பில் இந்த நிறுவனம் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. இதற்காக, ஜெயம் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு தனது பணிக்காலத்தின்போது ரத்தன் டாடா ரகசியமாக வந்து போனது பெரும் பரபரப்பான நிகழ்வாக செய்திகள் வெளியிடப்பட்டன. மேலும், வாகன துறையின் மீது அவருக்கு இருந்த ஈடுபாடும் இதன் மூலமாக புலனாகிறது.

ரத்தன் டாடா முதலீடு
கடந்த 2012ம் ஆண்டு 75வது வயதில், டாடா குழுமத் தலைவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற ரத்தன் டாடா சைரஸ் மிஸ்திரி கையில் பொறுப்புகளை ஒப்படைந்தார். அத்துடன், அவர் தனது ஓய்வு காலத்தை கழிக்க விரும்பாமல், இளைஞர்களையும், புதிய தொழில்நுட்பங்களையும் ஊக்குவிக்கும் விதமாக பல முதலீடுகளை செய்து வருகிறார். அதில், ஒன்று கோவையிலுள்ள ஆம்பியர் என்ற எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனத்தில் அவர் முதலீடு செய்தார். அது மட்டுமல்ல, தொடர்ந்து பல ஆரம்ப நிலை நிறுவனங்களை கை தூக்கி விடும் விதமாகவும், புதிய தொழில்நுட்பங்களை விரிவுப்படுத்தும் நிறுவனங்களுக்கு பெரிய அளவிலான முதலீடுகளையும் செய்து வருகிறார்.

வாழ்க்கை ஒரு வட்டமடா...
இண்டிகா கார் பிராண்டை விற்பதற்காக, ஃபோர்டு நிறுவனத்தின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்ற ரத்தன் டாடாவை, கார் தயாரிப்பு பற்றி உங்களுக்கு என்ன தெரியுமென்று, இதில் இறங்கினீர்கள் என்று ஏளனப்படுத்தியுள்ளனர். ஆனால், அதே ஃபோர்டு நிறுவனத்திடமிருந்த ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் பிராண்டுகள் நிதி நெருக்கடியில் சிக்கியபோது கை கொடுத்து உதவியது ரத்தன் டாடாதான் என்பது உங்களுக்கு தெரிந்ததே. இதுபற்றி, நாம் விரிவாக எழுதிய தொகுப்பிற்கு செல்ல, இங்கே க்ளிக் செய்யவும்.

லாஃபெராரி வாங்கும் அளவுக்கு வசதி இல்லை
கடந்த 2013ம் ஆண்டு ஜெனீவாவில் நடந்த மோட்டார் ஷோவை காண்பதற்கு ரத்தன் டாடா சென்றிருந்தார். அப்போது, அங்கு அவரது நெருங்கிய நண்பரான ஃபெராரி கார் நிறுவனத்தின் தலைவர் லூகா கார்டியோ டி மான்டிஸிமோலோவை சந்தித்தார். அப்போது, அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் ஃபெராரியின் புதிய ஹைபிரிட் சூப்பர் காரான லாஃபெராரியை காண்பதற்கு ரத்தன் டாடாவை லூகா அழைத்துச் சென்றார். லாஃபெராரியை பார்த்து வியந்த ரத்தன் டாடா வடிவமைப்பு "பயங்கரமாக" இருப்பதாக டாடா தெரிவித்தார். அப்போது, ஒரு காரை வாங்கிக் கொள்ளுங்களேன் என்று லூகா கேட்டுள்ளார். அதற்கு ரத்தன் டாடா சட்டென, இந்த காரை வாங்குவதற்கு என்னிடம் பணம் இல்லை," என்று நகைச்சுவையாக தெரிவித்தார். ரத்தன் டாடா பதிலை கேட்ட லூகா உள்ளிட்ட அனைவரையும் சில நிமிடங்கள் சிரிப்பலையில் ஆழ்த்தியது.

பாகிஸ்தான் ஆர்டர் விஷயத்துக்கு மறுப்பு
380 டாடா சுமோ கிராண்டே எஸ்யூவியை வாங்குவதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பாகிஸ்தான் அரசு அணுகியதாகவும், அதற்கு ரத்தன் டாடா மறுப்பு தெரிவித்ததாகவும் ஒரு பெரும் பரபரப்பு கிளம்பியது. ஆனால், அதனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அப்படி எந்த ஒரு ஆர்டரும் பாகிஸ்தானிடமிருந்து வரவில்லை என்று டாடா மோட்டார்ஸ் விளக்கம் அளித்தது நினைவிருக்கலாம்.

மிகப்பெரிய வாகன குழுமம்
இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனம் டாடா மோட்டார்ஸ் உயர்ந்து நிற்பதில் ரத்தன் டாடாவின் பங்கு அளப்பறியது. மேலும், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் டாடா மோட்டார்ஸ் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையை மேற்கொண்டு வருகிறது. பஸ், டிரக் உள்ளிட்ட வர்த்தக வாகனங்கள், கார்,எஸ்யூவி, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனம் என அனைத்து வாகன துறைகளிலும் டாடா மோட்டார்ஸ் மிக முக்கியமான நிறுவனமாக விளங்கி வருகிறது.

எண்ணிலடங்கா விருதுகள்
ரத்தன் டாடாவின் சாதனைகளை போற்றி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து எண்ணற்ற விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதில், கடந்த 2000ம் ஆண்டு மத்திய அரசால் பத்ம பூஷன் விருதும், 2008ம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

கார் பிரியர்
சரி, கார்கள் இவ்வளவு ஆர்வமும், தொடர்புகளும் கொண்டிருந்த ரத்தன் டாடாவுக்கு கன்வெர்ட்டிபிள் ரக கார்கள் என்றால் கொள்ளை பிரியம் என்பது உங்களுக்கு தெரியுமோ. ஆம், அவரது பிரம்மாண்ட கார் கலெக்ஷனையும் தொடர்ந்து பார்க்கலாம்.

01. ரத்தன் டாடாவின் ஃபெராரி கார்
ரத்தன் டாடாவிடம் ஃபெராரி கலிஃபோர்னியா கார் மாடல் இருக்கிறது. எம்எச்01 ஏஎல்111 என்ற பதிவெண் கொண்ட காரைத்தான் அவர் பயன்படுத்துகிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் கடலோரச் சாலைகளில் ஹாயாக கார் ஓட்டிச் செல்வது அவருக்கு பிடித்தமான பொழுதுபோக்காக குறிப்பிடுகின்றனர். அவ்வப்போது, அவர் இதுபோன்று ஓட்டிச் செல்வதை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பலர் பதிவேற்றம் செய்திருக்கின்றனர்.

ஃபெராரி கார் தொடர்ச்சி...
4 பேர் அமர்ந்து பயணிக்கக்கூடிய திறந்து மூடும் கூரை பொறுத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் கார் மாடல். 2008ம் ஆண்டு அரிமுகம் செய்யப்பட்ட இந்த கார் ஒரிஜினலாக மஸராட்டி கான்செப்ட் கார் மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதாம். அதாவது, மஸராட்டி கான்செப்ட் காரை உற்பத்திக்கு கொண்டு செல்வதற்கான செலவீனம் மிக அதிகமாக இருந்ததால், இந்த முடிவை இரு நிறுவனங்களின் தாய் குழுமமான ஃபியட் முடிவு செய்தது. இந்த காரில் 453 பிஎச்பி பவரையும், 485 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக்கூடிய 4.3 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஃபெராரியின் முதல் ஃப்ரண்ட் மிட் மவுண்ட் லே அவுட்டில் வடிவமைக்கப்பட்ட கார் மாடலும் இதுதான்.

02. டாடா இண்டிகோ மரினா
ரத்தன் டாடாவுக்கு நாய்கள் என்றால் பிரியமாம். புனேயில் இருக்கும் அவரது பண்ணை வீட்டில் நாய்களுக்காகவே தனி இடம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தனது செல்லப் பிராணிகளை பின்புறம் ஏற்றிச் செல்வதற்காகவே இந்த எஸ்டேட் வேகன் மாடலை அவர் பயன்படுத்துகிறார்.

இண்டிகோ மரினா பற்றி...
அதிக இடவசதி கொண்ட மாடலாக பெருமைப்பட்டுக் கொண்ட டாடா தயாரிப்பு. பொருட்களை எடுத்து செல்வதற்கான அதிக இடவசதி கொண்ட எஸ்டேட் வேகன் வகை மாடல் இது. விற்பனையில் எடுபடாத காரணத்தால் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது.

03.ஹோண்டா சிவிக்
ரத்தன் டாடாவிடம் ஹோண்டா சிவிக் செடான் காரும் உள்ளது. ஹோண்டாவின் மென்மையான பெட்ரோல் எஞ்சின் கொண்ட இந்த காரும் ரத்தன் டாடாவுக்கு மிகவும் பிடித்த மாடல்களில் ஒன்று. அவ்வப்போது இந்த காரை ஓட்டிச் செல்வதும் அவருக்கு பிடித்தமான ஒன்று.

ஹோண்டா சிவிக் பற்றி...
1972ம் ஆண்டு உற்பத்தியில் இருக்கும் இந்த கார் 10 தலைமுறை மாடல்களாக வெளியிடப்பட்டுவிட்டது. சமீபத்தில் பத்தாம் தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. உலக அளவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களில் இதுவும் ஒன்று. 2006ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் மாடல் விற்பனையில் சோபிக்காததால், 2012ம் ஆண்டுடன் இந்தியாவில் இந்த காரின் உற்பத்தியை ஹோண்டா நிறுத்திவிட்டது.

04. மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே
ரத்தன் டாடா இல்லத்தின் கராஜிற்கு மதிப்பு சேர்க்கும் மாடல்களில் ஒன்று. இந்திய சாலைகளில் அதிகம் காண முடியாத கார் மாடல்.1963ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இத்தாலிய ஸ்போர்ட்ஸ் கார் மாடலை ரத்தன் டாடா விரும்பி பயன்படுத்தும் மாடல்களில் ஒன்று.

மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே பற்றி...
1963ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் ஆறாம் தலைமுறையை கண்டுவிட்டது. நீண்ட பாரம்பரியம் கொண்ட இந்த மாடலை நீண்ட நாள் கனவாக வைத்திருந்து ரத்தன் டாடா வாங்கியிருப்பதாக சொல்கின்றனர்.

05. கேடில்லாக் எக்ஸ்எல்ஆர்
ரத்தன் டாடாவிடம் இருக்கும் கார்கள் அனைத்தும் ஒவ்வொரு விதத்திலும் ஒரு தனித்துவத்தை பெற்றதையே தேர்வு செய்து வாங்கியுள்ளார். அதில், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கேடில்லாக் பிராண்டின் எக்ஸ்எல்ஆர் காரும் ஒன்று.

கேடில்லாக் எக்ஸ்எல்ஆர் பற்றி...
ரத்தன் டாடா பயன்படுத்தும் கேடில்லாக் காரில் 320 பிஎச்பி பவரை அளிக்கும் 4.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு கன்வெர்ட்டிபிள் ரக மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது விற்பனையில் இல்லை.

06. மெர்சிடிஸ் பென்ஸ் 500எஸ்எல்
ரத்தன் டாடாவுக்கு திறந்து மூடும் கூரை பொருத்தப்பட்ட கன்வெர்ட்டிபிள் மாடலில் செல்வதை அதிகம் விரும்புவாராம். அந்த வகையில், அடுத்து அவர் கராஜில் இருக்கும் ஒரு கன்வெர்ட்டிபிள் மாடல்தான் மெர்சிடிஸ் பென்ஸ் 500எஸ்எல்.

பென்ஸ் 500எஸ்எல் பற்றி...
இந்த காரில் 306 பிஎச்பி உச்சபட்ச பவரை அளிக்கும் வல்லமை கொண்ட 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மிக மிக சொகுசான கன்வெர்ட்டிபிள் கார்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.

07. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ்
பெரும் பணக்காரர்களின் அனைவரது கராஜிலும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காருக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு. அதேமாதிரி, ரத்தன் டாடா கராஜிலும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் கார் மாடல் இருக்கிறது.

பென்ஸ் எஸ் கிளாஸ் பற்றி..
உலகின் மிக உன்னதமான சொகுசு கார் மாடல். இடவசதியிலும், வசதிகளிலும் வாடிக்கையாளர்களை தொன்றுதொட்டு கட்டிப் போட்டு வைத்திருக்கும் மாடல். அதிக சக்திவாய்ந்த இந்த சொகுசு காரின் பயண அனுபவத்தை புகழாத வாடிக்கையாளர்களே இருக்க முடியாது. அதற்கு ரத்தன் டாடாவும் விதிவிலக்கல்ல.

08. ஜாகுவார் எஃப் டைப்
டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் ஜாகுவார் நிறுவனத்தின் அழகிய கார் மாடல். இதனை உலக அழகி கார் மாடலாகவும் குறிப்பிடுகின்றனர். சமீபத்தில் ரத்தன் டாடா கார் கராஜில் இடம்பிடித்த அழகி ஜாகுவார் எஃப் டைப்தான்.

ஜாகுவார் எஃப் டைப் பற்றி...
இதுவும் ஒரு கன்வெர்ட்டிபிள் என்பதை நினைவிற் கொள்க. இந்த காரில் 488 பிஎச்பி பவரையும், 625 என்எம் டார்க்கையும் வழங்கும் 5.0 லிட்டர் வி8 எஞ்சின் உள்ளது. டாடா கராஜில் இருக்கும் அதிசக்திவாய்ந்த மாடலில் ஒன்றும்கூட.

09. ஜாகுவார் எக்ஸ்எஃப் ஆர்
ரத்தன் டாடா தினசரி பயன்பாட்டிற்கு அதிகம் உபயோகப்படுத்தும் கார் மாடல். செடான் காரின் சொகுசையும், ஸ்போர்ட்ஸ் கார் போன்ற செயல்திறனையும் வழங்க வல்லது.

ஜாகுவார் எக்ஸ்எஃப் பற்றி...
இந்த காரில் 503 பிஎச்பி பவரையும், 625 என்எம் டார்க்கையும் வழங்கும் 5.0 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அனைத்து பயன்பாட்டிற்கும் தகுதியான கார் மாடல் என்பதால் ரத்தன் டாடாவுக்கு மிக நெருக்கமான மாடலாகிவிட்டது.

10. லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர்
டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் சொகுசு எஸ்யூவி மாடல் ஃப்ரீலேண்டர். இந்த எஸ்யூவி ஒன்றையும் ரத்தன் டாடா விரும்பி வாங்கி வைத்து பயன்படுத்துகிறார்.

11. க்றைஸ்லர் செப்ரிங்
ரத்தன் டாடாவிடம் க்றைஸ்லர் செப்ரிங் கார் மாடல் ஒன்றும் உள்ளது. அவரது கராஜில் இருக்கும் தனித்துவம் மிக்க மாடல்களில் இதுவும் ஒன்று.
கொசுறுத் தகவல்: சொந்தமாக கார் ஓட்டிச் செல்வதில்தான் ரத்தன் டாடாவுக்கு அதிக பிரியமாம்.


Click it and Unblock the Notifications