காரை பார்க்கிங் செய்யும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள்!
காரை சரியான இடத்தில் நிறுத்திவிட்டுச் செல்லும்போது நமது வேலைகளை முழுக்கவனத்துடன் செய்துவிட்டு திரும்ப முடியும். இல்லையெனில், காரை பற்றிய நினைப்பு வந்துவந்து போவதுடன், பதற்றத்தை ஏற்படுத்தி, போன வேலையை கவனமாக முடித்து விட்டு திரும்ப முடியாது.
ஷாப்பிங் அல்லது அலுவலக வேலைகளை நிம்மதியாக முடித்து வருவதற்கு சரியான இடத்தில் காரை நிறுத்திவிட்டுச் செல்வது அவசியம். வெளியிடங்களில் பார்க்கிங் செய்யும்போது, பார்க்கிங் வளாகங்களில் காரை நிறுத்தும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்களை ஸ்லைடரில் காணலாம்.

கவனம்
காரை நிறுத்துவதற்கு முன்பாக, அந்த சாலையில் காரை நிறுத்துவதற்கான அனுமதிக்கப்பட்ட பகுதியா அல்லது சாலையா என்பதை கவனமாக பார்க்கவும். மேலும், கடைகள், வீடுகள் மற்றும் வர்த்தக வளாகங்களின் நுழைவாயில்களுக்கு நேராக நிறுத்த வேண்டாம். அஞ்சல் பெட்டி உள்ள பகுதிகள், தீயணைப்பு நிலையத்தின் வாயிற்பகுதி, டாக்சி ஸ்டான்ட் மற்றும் ஆட்டோ ஸ்டான்ட் பகுதிகளிலும் நிறுத்தாதீர்கள்.

பாதசாரிகளுக்கு இடையூறு
சாலைகளில் காரை நிறுத்தும்போது பாதசாரிகளுக்கும், பிற வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு தரும் வகையில் நிறுத்த வேண்டாம். சிலர் பாதசாரிகளுக்கான நடைமேடையிலேயே வாகனங்களை பார்க்கிங் செய்துவிட்டு செல்கின்றனர். இதன்காரணமாக தேவையில்லாத பிரச்னை ஏற்படுவதுடன் போக்குவரத்து காவலர்களால் அபராதம் விதிக்கும் நிலையும் இருக்கிறது.

மரத்திற்கு கீழே தவிர்க்கவும்
மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளுக்கு கீழே நிறுத்துவதை தவிர்க்கலாம். காற்று பலமாக வீசும்போது, கிளைகள் முறிந்து விழும் ஆபத்து இருப்பது மட்டுமின்றி, பறவைகளின் எச்சத்தால் காரின் பெயிண்ட் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. வலசை வரும் சில பறவைகளின் எச்சம் கார் பெயிண்ட்டை பதம் பார்த்துவிடும் என்பதையும் மனதில் வையுங்கள்.

நெருக்கடி
பிற வாகனங்களுடன் போதிய இடைவெளிவிட்டு நிறுத்துவதது அவசியம். நெருக்கடியாக நிறுத்திவிட்டு செல்லும்போது அடுத்தவர் வந்து காரை எடுத்துச் செல்லும்போது கதவை திறக்கவே சிரமம் ஏற்படுவதுடன், எடுக்கும்போது உரசுவதற்கும் ஆபத்தும் இருக்கிறது. மேலும், பக்கவாட்டில் பேரலல் பார்க்கிங் செய்யும்போது முன்பின் வண்டிகளுடன் போதிய இடைவெளி விட்டு பார்க் செய்வது அவசியம்.

பார்க்கிங் வளாகங்கள்
சில பார்க்கிங் வளாகங்களில் நெருக்கடியாக கார் நிறுத்துமிடத்தை அமைத்திருப்பார்கள். எனவே, அங்கிருக்கும் ஓட்டுனர்களின் உதவியுடன் காரை நிறுத்துங்கள். மேலும், நீங்கள் எவ்வளவு நேரத்தில் வேலையை முடித்துக் கொண்டு வருவீர்கள் என்பதை ஓட்டுனர்களிடம் தெரிவித்தால், அதற்கு தகுந்தாற்போல் காரை பார்க் லிஃப்ட்டில் கீழே அல்லது மேலே நிறுத்துவார்கள்.

முக்கிய பொருட்கள்
பார்க்கிங் வளாகங்களில் காரை வாலே பார்க்கிங் ஓட்டுனர்களிடம் கொடுக்கும்போது, காரில் இருக்கும் மொபைல்போன், லேப்டாப் உள்ளிட்ட முக்கியமான மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கையில் எடுத்துக் கொள்வது அவசியம். முக்கிய ஆவணங்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களையும் கையுடன் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில், சில நேரங்களில் ஏதெனும் பொருள் தேவைப்படும்போது கார் எங்கிருக்கிறது என்று கண்டுபிடித்து அதனை எடுப்பது வீண் அலைச்சலையும், சிரமத்தையும் கொடுக்கும்.

ஹேண்ட்பிரேக்
ஹேண்ட்பிரேக்கை சரியான முறையில் போட்டு காரை நிறுத்துவது அவசியம். சிலர் காரை கியரில் வைத்துவிட்டு அல்லது ஆட்டோமேட்டிக் மோடில் வைத்துவிட்டு ஹேண்ட்பிரேக்கை போட்டு நிறுத்துவர். இது தவறான செயல். காரின் மொத்த எடையையும் திடீரென கியர்பாக்ஸ் தாங்கும் நிலை ஏற்படும். எனவே, கால் பிரேக்கை பிடித்துக் கொண்டு காரை நியூட்ரல் செய்து ஹேண்ட்பிரேக் போடுவது அவசியம். ஹேண்ட்பிரேக்கை போட்ட பின்னர் மீண்டும் ஒருமுறை சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளவும். பின்னர் கால் பிரேக்கை ரிலீஸ் செய்யவும்.

சரியான கோணத்தில்
சரியான கோணத்தில் காரை நிறுத்திச் செல்வதும் அவசியம். தேவையற்ற இடையூறுகளை இது தவிர்க்க உதவும்.


Click it and Unblock the Notifications








