கல் நெஞ்சுகாரங்க கூட கரைஞ்சிருவாங்க!! விமானத்தில் ஒருமுறைகூட போகாத அப்பா... இப்படியொரு மகன் கிடைக்கனும்!
வாழ்நாளில் விமானத்தில் ஒருமுறை கூட சென்றிராத தனது தந்தையை இளைஞர் ஒருவர் விமானத்தில் அழைத்து சென்றுள்ளார். மேலும் இதுகுறித்த வீடியோ ஒன்றையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். பார்ப்போரின் மனதை நெகிழ வைக்கக்கூடிய இந்த நிகழ்வை பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
விமானத்தில் பறக்க வேண்டும் என யாருக்குதாங்க ஆசை இல்லாமல் இருக்கும். ஓர் இடத்தில் இருந்து தொலைதூரத்தில் உள்ள வேறொரு இடத்திற்கு விரைவாக சென்றுவிட முடியும் என்பது மட்டுமின்றி, பல ஆயிர அடி உயரத்தில் பஞ்சு போன்ற மேகங்களுக்கு இடையே விமானத்தில் பறப்பது நிச்சயம் ஓர் தனி உணர்வை தரக்கூடியது.

மற்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களை போன்று, இந்தியர்களும் விமானங்களை பரவலாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அருகில் உள்ள மற்றொரு மாநகரத்திற்கு செல்வதாக இருந்தால் கூட விமான பயணத்தை தேர்வு செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தகைய எண்ண ஓட்டம் தற்கால இளம் தலைமுறையினரிடமே அதிகளவில் உள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
சற்று வயதானவர்களில் பலருக்கு விமானத்தில் பயணிக்கும் ஆசை இருப்பதில்லை அல்லது அத்தகையவர்கள் இப்போதும் விமானத்தை பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வாகனமாக பார்க்கின்றனர். இருப்பினும் அத்தகையவர்களை ஒருமுறையாவது விமானத்தில் கூட்டிக்கொண்டு சென்றுவிட வேண்டும் என்பது அவர்களது மகன்/ மகளின் ஆசையாக இருக்கலாம். அவ்வாறுதான், இங்கு ஒரு இளைஞர், விமானத்தில் ஒருமுறை கூட சென்றிராத தனது தந்தையை டிக்கெட் புக் செய்து, விமானத்தில் அழைத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து அந்த நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவை கீழே காணலாம். இதுவரையில், கிட்டத்தட்ட 2 லட்ச பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த வீடியோவில், வீடியோவை காட்சிப்படுத்திய அந்த இளைஞருக்கு அருகில் அவரது தந்தை அமர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது. பின்னர், அந்த மனிதர் பர்க்கரை சாப்பிடுகிறார், விமானத்திற்குள் தனது சிரித்த முகத்துடன் செல்ஃபி எடுத்து கொள்கிறார்.
வீடியோவில் ஒரு காட்சியில், விமானத்திற்கு வெளியே எப்படி உள்ளது என்பதும் காட்டப்பட்டுள்ளது. விமான பயணம் முடிந்ததும் இந்த அப்பாவும், மகனும் மும்பையில் ஒரு அபார்ட்மெண்ட்டில் தங்கியுள்ளனர். இந்த வீடியோவை பதிவிட்ட இளைஞர் இதுகுறித்த தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "அப்பாவை முதல்முறையாக விமானத்தில் உட்கார வைத்து மும்பைக்கு அழைத்து வந்துள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மற்றப்படி இந்த வீடியோவில் காட்சித்தரும் அப்பா மற்றும் மகனின் பெயர் என்ன? எங்கிருந்து மும்பைக்கு சென்றுள்ளனர்? என்பது போன்றதான கேள்விகளுக்கு விடை இல்லை. மேலும், இவர்கள் எந்த ஏர்லைன் நிறுவனத்தின் விமான சேவையை பயன்படுத்தி உள்ளனர் என்பதும் தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ இணையத்தில் பலரது நெஞ்சை கரைய வைத்துள்ளது என்பது மட்டும் உண்மை.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: விமானத்தை நேரில் கூட பார்த்திராத தமது தாய், தந்தையை ஒருமுறையாவது விமானத்தில் அழைத்து செல்ல வேண்டும் என்பது நிச்சயம் நம்மில் பலருக்கு ஓர் கனவாக இருக்கும். இன்றைய காலத்தில் விமான டிக்கெட்களின் விலைகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, நடுத்தர வர்க்கத்தினருக்காகவே பல ஏர்லைன் நிறுவனங்கள் விமான சேவையை வழங்குகின்றனர். ஆதலால், இந்த கனவை நிஜமாக்குவது ஒன்றும் அவ்வளவு கடினமானது இல்லை.


Click it and Unblock the Notifications








