டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
இப்போது மிகப் பெரிய டிரெண்டிங்கில் 'டீ கடை' பிசினஸ் இருக்கின்றது. ஐடி வேலையை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சிலர் கூட வேலையை விட்டுவிட்டு டீ கடை பிசினஸைத் தொடங்கி இருக்கின்றனர். அந்த அளவிற்கு டாப் டிரெண்டிங்கிலேயே டீ கடை தொழில் உள்ளது. ஆனால், இந்த பிசினஸையே ஓரங்கட்டக் கூடியதாக தண்ணீர் வியாபாரம் உள்ளது.
இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் தகவலே தற்போது வெளியாகி இருக்கின்றது. ரயில் பயணத்தை அதிகம் மேற்கொள்வோருக்கு 'ரயில் நீர்' பற்றி தெரிந்திருக்கும் என நம்புகின்றோம். இந்த ரயில் நீரே மிகப் பெரிய லாபத்தை தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு ஈட்டிக் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுமார் 14.85 கோடி ரூபாய் வருவாய் தெற்கு ரயில்வேக்கு ரயில் நீர் மூலம் கிடைத்திருக்கின்றது. ரயில்வே நிர்வாகத்திற்கு பல வழிகளில் வருமானம் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதில், ஓர் முக்கிய பிரிவாக ரயில் நீர் பிரிவு மாறி இருக்கின்றது. ஏற்கனவே, ரயில்வே நிர்வாகத்திற்கு டிக்கெட்டை கேன்சல் செய்வதன் வாயிலாகவும், சரக்குகளை ரயிலில் அனுப்பி வைப்பதன் வாயிலாகவும் பல நூறு கோடி ரூபாய் வருமானம் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிலையிலேயே ரயில் நீர் பிரிவின் வாயிலாக ரூ. 14.85 கோடி வருமானம் கிடைத்திருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது வெறும் 3 மாதங்களில் தெற்கு ரயில்வேக்கு மட்டுமே கிடைத்த வருவாய் ஆகும். இதனால்தான் பலர் ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கின்றனர்.
இந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக 99 லட்சம் குடிநீர் பாட்டில்களை ரயில் நீர் விற்றிருக்கின்றது. அனைத்தும் ரயில் தெற்கு ரயில்வே நிர்வாகத்தைச் சார்ந்த ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் மட்டும் விற்கப்பட்டவை ஆகும். ரயில் நிலையங்களில் 59 லட்சம் பாட்டில்களும், ரயில்களில் 40 லட்சம் தண்ணீர் பாட்டில்களும் விற்கப்பட்டு இருக்கின்றன.
ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் குடிநீர் ரூ. 15 வரை விற்கப்படுகின்றது. மேலும், தரவுகளின் அடிப்படையில் நாள் ஒன்றிற்கு சுமார் 65 ஆயிரம் ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில்கள் விற்றிருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே கடந்த மூன்று மாதத்தில் தெற்கு ரயில்வே நிர்வாகம் ரூ. 14.85 கோடி வருவாயை ஈட்டியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஐஆர்சிடிசி வாயிலாக அறிமுகம் செய்யப்பட்டதே ரயில் நீர் விற்பனை திட்டம். முதல் ரயில் நீர் உற்பத்தி ஆலை 2003 ஆண் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. தற்போது 14க்கும் மேற்பட்ட பிளாண்டுகள் உள்ளன. இதில் ஆறு மட்டுமே தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஒட்டுமொத்த ரயில் நீர் ஆலையின் உற்பத்தி திறன் நாள் ஒன்றிற்கு 18.40 லட்சம் ஆகும். இதில் சென்னை ஆலை மட்டும் தனியாக 1.8 லட்சம் தண்ணீர் பாட்டில்களை நாள் ஒன்றிற்கு தயாரித்து வெளியேற்றிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ரயில் போக்குவரத்தை சிறப்பானதாக மாற்றும் பொருட்டு இந்தியன் ரயில்வேஸ் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் விளைவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது முதல் பல சேவைகள் தற்போது மிக மிக எளிமையாக மாறி இருக்கின்றன. மேலும், பயண நேரத்தையும் குறைக்கும் விதமாக வந்தே பாரத் போன்ற சிறப்பு ரயில்களையும் இந்தியன் ரயில்வேஸ் அறிமுகம் செய்துக் கொண்டிருக்கின்றது.
இதுதவிர, புதிய வழித் தடங்களை உருவாக்குதல் மற்றும் நூறு சதவீதம் ரயில் வழித்தடத்தை மின் மயமாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அது மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையிலேயே ரயில் பயணிகளின் தாகத்தை மலிவு விலையில் தீர்க்கும் பொருட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டதாக ரயில் நீர் திட்டம் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக் கொண்டே வருகின்றது. மலிவான கட்டணம், விரைவான பயணம் கிடைக்கும் என்பதால் மக்கள் பலர் ரயில் போக்குவரத்தை அதிகம் விரும்புகின்றனர். இதேபோல் ரயில் நீர் விலை குறைவாக கிடைப்பதனால் அதையும் மக்கள் அதிகம் விரும்பி வாங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது தெரிய வந்திருக்கின்றது. என்னதான் இது விலை குறைவாகக் கிடைத்தாலும், நமக்கு தேவையான தண்ணீரை குறைந்தபட்சம் வீட்டிலிருந்து எடுத்துச் செல்வதே நல்லது.
பயணத்தின்போது கிடைக்கும் தண்ணீர் மற்றும் பிற உணவுகள் எந்த அளவிற்கு தூய்மையானதாக இருக்கும் என்பது தெரியாது. மேலும், பயன்படுத்திவிட்டு தூக்கியெறியப்படும் தண்ணீர் பாட்டில்கள், சுற்றுச் சூழலுக்கு ஆபத்தான மாறிவிடுகின்றது. எனவேதான் பயணங்களின்போது தண்ணீரை வீட்டில் இருந்து எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகினஅறது. இதுவே சிறந்த யுக்தியும் கூட. இதனால் நம்முடைய ஆரோக்கியத்தையும், சுற்றுச் சூழலின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications









