இனி ரயில்களில் 156 பேருக்குதான் சிலீப்பர் டிக்கெட் கிடைக்கும்! ரயில்வே கொண்டு வரப்போகும் திடீர் மாற்றம்
தெற்கு ரயில்வேயில் சூப்பர் பாஸ்ட் ரயில்களில் வேகத்தை அதிகரிக்க இனி ரயில்களில் வெறும் 2 சிலீப்பர் வகுப்பு பெட்டிகளை மட்டுமே இணைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்திய ரயில்வே நிர்வாகம் ரயில்வே துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டே வருகிறது. அதன்படி இந்திய ரயில்வே துறை எடுக்கும் கொள்கை முடிவுகளை நடைமுறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்திய ரயில்வே நிர்வாகம் ஒரு உள்ளுக்குள்ளேயே ஒரு போர்டு ஒன்றை அமைத்து அந்த போர்டிற்கு தற்போது இயக்கப்பட்டு வரும் ரயில்களில் இந்திய அரசு எடுக்கும் ரயில்வே துறை சம்மந்தப்பட்ட கொள்கை முடிவுகளை நடைமுறைப்படுத்த போதுமான அதிகாரம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அந்த போர்டு தெற்கு ரயில்வே உள்ளிட்ட அனைத்து ரயில்வே சோனல்களுக்கும் கடந்த ஜூன் 6ம் தேதி ஒரு வழிகாட்டு நடைமுறையை அனுப்பியுள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் இயக்கப்படும் குறிப்பிட்ட சூப்பர் பாஸ்ட் ரயில்களில் உள்ள பெட்டிகளை மாற்றியமைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஒரு ரயிலுக்கு 3 டயர் ஏசி பெட்டிகள் 10, 2 டயர் ஏசி பெட்டிகள் 4, மற்றும் முதல் வகுப்பு ஏசி பெட்டி 1 என உத்தரவிட்டுள்ளது. எந்த ரயில்களில் இதை மாற்ற முடியவில்லையோ அல்லது இந்த மாற்றத்தில் மாறுதலுடன் செயல்பட அந்தந்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தால் அதற்கான தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தது.

மத்திய அரசு கடந்த 2018ம் ஆண்டு டில்லி- மும்பை- கொல்கத்தா - சென்னை ஆகிய பகுதிகளிலிருந்து இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை 130 கி.மீ வேகமாக உயர்த்த வேண்டும் என்ற கொள்கை முடிவை எடுத்தது அதன்படி தாக்கமாகவே இந்த முடிவை அரசு எடுத்து வருகிறது. ரயிலில் வேகத்தைக் கூட்டினால் சிலீப்பர் கோச்களை குறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

சிலீப்பர் கோச்களில் ஜன்னல்கள் திறந்த நிலையில் இருக்கும் என்பதால் ரயில் வேகமாகச் செல்லும் போது காற்று அதிகமாக ரயிலுக்குள் வரும். தற்போது தமிழகத்தில் செயல்பாட்டில் இருக்கும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களில்
LHB என்ற குறைந்த எடை ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் 7 முதல் 10 பெட்டிகள் வரை சிலீப்பர் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

இதனால் ரயில் வேகம் அதிகம் ஆகும் போது அதிகமாக சிலீப்பர் பெட்டிகள் இருந்தால் ஆபத்து என்பதால் ரயிலில் ஏசி பெட்டிகளை அதிகப்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது சூப்பர் பாஸ்ட் ரயில்கள் அதிகபட்சமாக 110 கி.மீ வேகத்தில் பயணிக்கிறது. இந்த மாற்றம் நடந்தால் 130 கி.மீ. வேகம் வரை வேகத்தைக் கூட்ட முடியும். இனி அடுத்த சில மாதங்களில் பாண்டியன் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் வெறும் 2 சிலீப்பர் பெட்டிகளை மட்டுமே பொருத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

மேல் குறிப்பிட்ட ரயில்கள் எல்லாம் எக்ஸ்பிரஸ் ரயில்களாக இருந்த போது ஐசிஎஃப் கோச்கள் பயன்படுத்தப்பட்டன. ஒரு ரயிலில் 12-13 சிலீப்பர் கோச்கள் பயன்படுத்தப்பட்டன. ஐசிஎஃப் கோச்களில் 72 பெர்த் இருக்கும் இதனால் அந்த ரயில்களில் 864-936 பெர்த்கள் இருந்தது. அது சூப்பர் பாஸ்ட் ரயில்களாக மாற்றப்படும் போது LHB சிலீப்பர் கோச்கள் மாற்றப்பட்டது. அதில் ஒரு கோச்சிற்கு 78 பெர்த்கள் இருக்கும்.

அதன்படி பாண்டியன், ராக்ஃபோர்ட் மற்றும் சோழன் எக்ஸ்பிரஸ்ரயில்களில் 7 சிலீப்பர் பெட்டிகளும் (546 பெர்த்கள்), முத்துநகர், பொதிகை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய ரயில்களில் 10 சிலீப்பர் கோச்கள் (780 பெர்த்)களாக குறைக்கப்பட்டன. அதற்கு மாற்றாக ஏசி பெட்டிகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டது.

தற்போது அதை மீண்டும் மாற்றியமைத்து மேல் குறிப்பிட்ட ரயில்களில் எல்லாம் வெறும் 2 சிலீப்பர் கிளாஸ் பெட்டிகளை மட்டுமே இணைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதற்குப் பதிலாக 3 டயர் ஏசி பெட்டிகள் 10, 2 டயர் ஏசி பெட்டிகள் 4, முதல் வகுப்பு ஏசி 1 என மொத்தம் முன்பதிவிற்காக 17 பெட்டிகளை இணைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இப்படியாகப் பெட்டிகளைக் குறைப்பதால் பயணிகளுக்குப் பயண செலவு அதிகமாகும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. தற்போது மதுரையிலிருந்து சென்னை வரப் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிலீப்பர் வகுப்பிற்கு ரூ325 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 3 டயர் ஏசிக்கு ரூ835 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த இரண்டு சிலீப்பர் கோச் சிஸ்டம் நடைமுறைக்கு வந்தால் ஒரு நாளுக்கு வெறும் 156 பேருக்கு மட்டுமே ரூ325 விலையில் ரயில் டிக்கெட் கிடைக்கும் மற்றவர்கள் ரூ835 விலையிலான ரயில் டிக்கெட்டை புக் செய்யும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இதனால் மக்கள் ஒரு டிக்கெட்டிற்கு ரூ500 வரை அதிகம் செலவு செலவு செய்ய வேண்டும்.

இன்று வரை குறைந்தவிலையில் நீண்ட தூரம் பயணிப்பதால் ஏழை மக்கள் பலர் இந்த ரயில் பயணத்தையே நம்பியிருக்கின்றனர். இவர்களைப் பற்றி யோசிக்காமல் இந்த முடிவு ரயில்வே நிர்வாகம் எடுப்பது மக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் எனப் பயணிகள் பலர் கருதுகின்றனர்.

ஏற்கனவே ரயில்வே நிர்வாம் லோக்கல், பாசஞ்சர் ரயில்களை எல்லாம் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றி கட்டணத்தை அதிகமாக்கியுள்ள நிலையில் அடுத்த இடியாக இப்படியான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ரயில் பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்த போது இது எல்லா ரயில்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆனால் மக்களிடம் டிமாண்டிற்கு ஏற்ப படிப்படியாக மக்கள் டிக்கெட் புக் செய்யும் முறையைப் பார்த்து மாற்றம் ஏற்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








