செங்குத்தாக ராக்கெட்டை தரையிறக்கி சாதனை படைத்த ஸ்பேஸ்எக்ஸ்!
ஒரே ராக்கெட்டை பல முறை பயன்படுத்தும் அம்சங்களுடன் தயாரிக்க வேண்டும் என்பதை கனவாக கொண்டிருந்தார் நம் நாட்டின் ராக்கெட் அறிவியல் மேதையும், முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல்கலாம். அவர் மறைந்தபோது கூட இதனை நாம் சிறப்புக் கட்டுரையில் இந்த தகவலை வெளியிட்டிருந்தோம்.
அவரது இந்த கனவை நாம் நிறைவேற்றுவதற்கான காலம் வெகு தொலைவில் இருந்தாலும், அவரது இந்த கனவை அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நனவாக்கி இருக்கிறது. ஆம், விண்வெளிக்கு சென்றுவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை வெற்றிகரமாக கடலில் தரையிறக்கி சாதனை படைத்திருக்கிறது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.

ஸ்பேஸ்எக்ஸ்
எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் புகழ்பெற்ற டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் தலைமை வகிக்கும் மற்றொரு நிறுவனம்தான் ஸ்பேஸ்எக்ஸ். அவரது சீரிய தலைமையின் கீழ் புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறது ஸ்பேஸ்எக்ஸ்.

சாதனை
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு செலுத்திய ராக்கெட் வெற்றிகரமாக தனது பணியை செவ்வனே முடித்துக் கொண்டு மீண்டும் தீ ஜூவாலைகளை கக்கியபடி பூமிக்கு திரும்பியது. விண்வெளி சரித்திரத்தில் முதல்முறையாக அந்த ராக்கெட்டை கடலில் தரையிறக்கி சாதனை படைத்துள்ளது ஸ்பேஸ்எக்ஸ்.

அதிசயம்
அட்லாண்டிக் கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஆளில்லா மிதவையின் தளத்தில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் செங்குத்தாக வந்து நிலைக்குத்தி நின்றது. அதில், இருந்த கால்கள் போன்ற தாங்கிகள் சரியான நேரத்தில் விரிவடைந்து ராக்கெட்டை செங்குத்தாக நிலைநிறுத்த உதவின.

தரையிறக்கும் நுட்பம்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் செலுத்திய ஃபால்கன் 9 ராக்கெட் புளோரிடாவிலுள்ள கேப் கனவெரல் தளத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. ஆனால், இந்த முறை கடலில் தரையிறக்கப்பட்டிருப்பது பெரும் சாதனையாக குறிப்பிடப்படுகிறது. அதாவது, நிலம், நீர் என இரண்டிலும் தரையிறக்கக்கூடிய நுட்பத்தை ஸ்பேஸ்எக்ஸ் பெற்றிருக்கிறது.

புதிய மைல்கல்
இதுபோன்று தரையிறக்கியதன் மூலமாக ஒரே ராக்கெட்டை பல முறை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உறுதியாகியிருக்கிறது. இதன்மூலமாக, ராக்கெட்டை ஏவுவதற்கான செலவீனம் பன்மடங்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்கால திட்டம்
அடுத்து இரண்டு அல்லது மூன்று ராக்கெட்டுகளை கடலில் தரையிறக்குவதற்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. எதிர்காலத்தில் மூன்றில் இருபங்கு ராக்கெட்டுகளை கடலில் தரையிறக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

செலவு குறையும்
மறுபயன்பாட்டு ராக்கெட்டுகள் மூலமாக 30 சதவீதம் வரை ஏவுவதற்கான செலவு குறையும். மேலும், எரிபொருள் சிக்கனம் செய்வதிலும் புதிய சரித்திரம் படைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இறுதியில் வெற்றி
கடலில் மிதவை நகர்வதும், குறிப்பிட்ட இடத்தில் மிதவையில் தரையிறக்குவதும் கடினமான காரியமாகவே இருக்கிறது. இதனால், ஏற்கனவே பலமுறை தோல்வி கண்ட நிலையில், தற்போது மிக குறுகிய இலக்கை துல்லியமாக அடைந்து தரையிறங்கியிருக்கிறது ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.

பிஎஸ்எல்வி ராக்கெட்டை கண்டு அலறும் அமெரிக்க ராக்கெட் நிறுவனங்கள்!


Click it and Unblock the Notifications








