3 நாட்கள்... 1,400கிமீ பயணம்... மகனை அழைத்துவர மிக பெரிய ரிஸ்க் எடுத்த மாற்றுத்திறனாளி தாய்...
ஊரடங்கின் காரணமாக அமராவதியில் தங்கியிருந்த தனது மகனை தனது சொந்த ஊருக்கு அழைத்து வர மாற்றுத்திறனாளி தாய் ஒருவர் சுமார் 1400 கிமீ தூரம் ஸ்கூட்டரில் பயணித்துள்ள சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. இதுகுறித்து கார்டாக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா வைரஸின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு கடந்த மார்ச் மாத 24ஆம் தேதியில் இருந்து அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவினால் நாடு முழுவதும் இரயில் மற்றும் பேருந்து போன்ற பொது போக்குவரத்துகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் வேறு மாநிலங்களுக்கு வேலை உள்பட தனது சொந்த விஷயத்திற்கு இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தத்தளித்து வருகின்றனர். பைக், கார் போன்ற தனி பயன்பாட்டு வாகனங்கள் வைத்திருப்போர் எளிமையாக திரும்பி விட இத்தகைய வாகனங்களை வைத்தில்லாதவர்கள் சைக்கிளிலோ அல்லது நடந்தேவோ 1000 கிமீ மேலாக பயணம் செய்து வருவதை பல செய்தியில் பார்த்திருப்போம்.

இதில் நடைபயணம் செய்து ஊர் திரும்ப முயற்சித்தவர்களில் சிலர் சில தினங்களுக்கு முன்பு இரவில், இரயில் போக்குவரத்து தான் தற்போது இல்லையே என்ற நம்பிக்கையில் இரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியபோது சரக்கு இரயிலில் அடிப்பட்டு இறந்த சம்பவம் நாடு முழுவதையும் கவலை அடைய செய்திருந்தது.

இதற்கிடையில் ஆந்திரா மாநிலம் அமராவதியில் சொந்தகாரர் வீட்டில் தங்கியிருந்த தனது மகனை அழைத்து வர புனேவில் இருந்து சுமார் 1,400 கிமீ வரை ஹோண்டா ஸ்கூட்டரில் சோனு காந்தாரே என்பவர் பயணம் செய்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் சோனு காந்தாரே, மாற்றுத்திறனாளி ஆவார்.

ஊரடங்கு மே3 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்துவிடும் பிறகு நம் மகன் வீட்டிற்கு வந்துவிடுவார் என நினைத்து இருந்த இவருக்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்ட இரண்டாவது ஊரடங்கு உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான் தனி ஒருவராக இந்த நெடுந்தூர பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தை சோனு காந்தாரே மேற்கொண்டதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. அதாவது உறவினர் வீட்டில் தங்கியிருந்த அவரது மகன் ப்ரதீக்கை அவர்கள் சரிவர கவனிக்கவில்லை. இதனால் தனது அக்கம் பக்கத்தினர் உதவியையும், ப்ரதீக் தங்கியிருந்த உறவினர்களின் உதவியை இவர் நாடியுள்ளார்.

இருப்பினும் எவரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. இதுதான் சோனு காந்தாரேவை இவ்வாறான சவாலான பயணத்தில் ஈடுப்பட வைத்துள்ளது. முதல் வேலையான தனது அருகாமையில் இருந்த போலீஸாரிடம் ஊரடங்கிற்கான நுழைவுச்சீட்டை கேட்ட அவருக்கு மூன்று நாட்களுக்கான நுழைவுச்சீட்டு கிடைத்துள்ளது.

இந்த குறுகிய காலத்திற்குள் அவரால் இந்த நெடுந்தூர பயணத்திற்கு ஏற்ற வாகனத்தை ஏற்பாடு செய்ய இயலவில்லை. மேலும் இவருக்கு ரூ.8,000 என்ற அதிக தொகையிலேயே வாடகை கார் கிடைத்துள்ளது. அந்த நேரத்தில் அவ்வளவு பணம் இல்லயோ என்னமோ தெரியவில்லை, தன்னிடம் இருந்த மாடிஃபைடு செய்யப்பட்ட ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரிலேயே பயணிக்க ஆயத்தமாகியுள்ளார்.

வழியில் உணவிற்காக வீட்டில் தயார் செய்யப்பட்ட உணவையும், தண்ணீரையும் ஸ்கூட்டரில் வைக்க முடிந்த அளவிற்கு வைத்து கொண்டு பயணத்தை துவங்கி வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். பயணத்தின் போது வழியில் இருந்த அனைத்து போலீஸாராலும் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டதாக சோனு காந்தாரே கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி பெட்ரோல் இல்லாமை, டயர் பஞ்சர் என பல விதங்களில் இவரது பயணத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது. இரவில் உறங்க சிசிடிவி கேமிராவுடன் வழியில் இருந்த பெட்ரோல் பங்கை தேர்வு செய்துள்ளார். எப்படியோ ஒருவழியாக ஏப்ரல் 25ல் உறவினர் வீட்டை அடைந்தவர் ஊரடங்கு நுழைவுச்சீட்டு முடிவடைய இருந்ததால் அங்கு நீண்ட நேரம் தங்கவில்லை.
மகனை அழைத்து கொண்டு விரைவாக புனேவை நோக்கி புறப்பட்டவர் ஊரடங்கு நுழைவு சீட்டின் காலம் முடிவடைவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே வீட்டை அடைந்துள்ளார். பிறகு இருவரும் நெடுந்தூரம் பயணம் செய்ததால் வீட்டிற்கு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரையும் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








