பரிசாக கார் வாங்கியது மட்டும் தான் தெரியும், காருக்குள் என்னென்ன இருக்குனு தெரியாதுல!!
ஆசிய கோப்பை கிரிக்கெட் (Asia Cup Cricket) தொடரின் 'தொடர் நாயகன்' விருதை வென்ற இந்திய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா (Abhishek Sharma), ஹவால் எச்9 (Haval H9) சொகுசு காரை பரிசாகப் பெற்றுள்ளார். இதனை நிறைய பேர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆனால், ஹவால் எச்9 காரை பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஏனெனில், ஹவால் எச்9 கார் இந்தியாவில் விற்பனையில் இல்லை. இதற்கு முன்பும் விற்பனை செய்யப்பட்டது இல்லை. உலகளவில் சில நாடுகளில் மட்டுமே ஹவால் எச்9 விற்பனையில் உள்ளது. ஏனெனில் அந்த அளவிறகு பிரம்மாண்டமான, விலையுயர்ந்த காராக ஹவால் எச்9 விளங்குகிறது. கம்பீரமான தோற்றம் கொண்ட இந்த காரை மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமாக சாலைகளில் பார்க்க முடியும்.

2025ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றதால், அதிக ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடிய இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவுக்கு ஹவால் எச்9 கார் பரிசாக வழங்கப்பட்டு உள்ளது. அத்துடன், 15 ஆயிரம் டாலர்கள் மதிப்பிலான காசோலையும் அபிஷேக் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் விழாவின்போது, அபிஷேக் சர்மாவின் பால்ய நண்பரும் சக கிரிக்கெட் வீரருமான ஷுப்மன் கில், பஞ்சாபி மொழியில் நகைச்சுவையான வர்ணனை செய்து அனைவரையும் கவர்ந்தார். விருது பெற்ற பின்னர், அபிஷேக் ஷர்மா தனது புதிய எஸ்யூவி காரில் அமர்ந்தபடி, ஷுப்மன் கில்லுடன் சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

அபிஷேக் மேடையில் விருது பெற்றபோது, இந்திய அணியின் மற்ற வீரர்கள் அருகிலேயே இருந்தனர். ஆசிய கோப்பையை வென்ற உற்சாகத்துடன் இருந்த வீரர்கள், அபிஷேக்கின் இந்த சாதனையால் மேலும் மகிழ்ந்து கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீரர்கள் அபிஷேக்கை உற்சாகப்படுத்தியும், அவரது புதிய காரைப் பற்றியும் பேசியும் கலகலப்பூட்டினர்.
சிலர் காரின் பெயரை ஹவல் என்றும், சிலர் ஹாவல் என்றும் வெவ்வேறு உச்சரிப்புகளில் அழைத்தனர். இந்த உற்சாகமான தருணத்தில் ஷுப்மன் கில் ஒருபக்கம் பஞ்சாபி மொழியில் வேடிக்கையாக வர்ணனை செய்ததும் அந்த சமயத்தில் மைதானத்திற்குள் உற்சாகத்தை அதிகரித்தது. இதனாலேயே, இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி ரசிகர்களிடையே பெரிதும் கவனத்தைப் பெற்றுள்ளது.
2025 ஆசிய கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராகத் திகழும் அபிஷேக் சர்மா, ஏழு போட்டிகளில் விளையாடி 44.85 சராசரி உடன் மொத்தம் 314 ரன்கள் குவித்தார். இந்தத் தொடரில் அவர் மூன்று அரை சதங்களை அடித்ததுடன், 32 பவுண்டரிகளையும், 19 சிக்ஸர்களையும் விளாசினார். அவரது அதிரடியான ஆட்டத்தால், அவரது ஸ்ட்ரைக் ரேட் 200 ஆக இருந்தது.

ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில், அபிஷேக் சர்மா 6 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், 2025 ஆசிய கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்றதற்கு முக்கிய காரணமாக விளங்கிய அபிஷேக் சர்மாவுக்கு பரிசாக வழங்கப்பட்ட ஹவால் எச்9 எஸ்யூவி, சீனாவைச் சேர்ந்த கிரேட் வால் மோட்டார்ஸ் (Great Wall Motors - GWM) நிறுவனத்தின் தயாரிப்பாகும்.
இந்த நிறுவனம், சர்வதேச அளவில் பிரபலமான மற்றும் வெற்றி பெற்ற வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ஹவால் எச்9 கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை என்றாலும், கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் 2022ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் செயல்பட்டது. அப்போது, 2020 ஆட்டோ எக்ஸ்போவில் ஹவால் எச்9 கார் காட்சிக்கு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆசிய கோப்பைத் தொடரில் அபிஷேக் சர்மாவின் செயல்பாடு மிகவும் சிறப்பானது. அவரது திறமைக்கு ஏற்ற பரிசு ஹவால் எச்9 என்றாலும், இந்தியாவில் ஆசிய கோப்பை நடைபெற்று இருந்தால், இவ்வளவு விலையுயர்ந்த காரை பரிசாக வழங்குவார்களா? என்பது பெரிய கேள்விக்குறியே. இருப்பினும், யுஏஇ-இல் வழங்கியுள்ளனர் என்றால், அங்கு இந்த கார் எந்த அளவிற்கு பலரால் வாங்கப்படும் காராக உள்ளது என்பதை அறியலாம்.


Click it and Unblock the Notifications









