அநியாயமாக போன 3 உயிர்!! ஹை-ஸ்பீடு டிரைவிங் எப்போவுமே ஆபத்துதான் - என்ன நடந்தது அப்படி?
மும்பையின் பந்த்ரா - வோர்லி கடல் பகுதியில் நடந்துள்ள மல்டி-கார் விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள செய்தி அந்த பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம், வாங்க.
உலகளவில் அதிக சாலை விபத்துகள் நடைபெறக்கூடிய நாடுகளை எடுத்து பார்த்தால், அதில் நிச்சயம் நம் இந்தியாவும் ஒன்றாக இருக்கும். அந்த அளவிற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சாலை விபத்துகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, நெடுஞ்சாலை விபத்துகளில் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்படுவதாக அந்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதுமே சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக விளங்குபவை அதிவேக பயணம் ஆகும். நகரத்திற்குள் அதிவேகமாக கார் ஓட்டுவது எந்தவொரு சூழலிலும் ஏற்கக்கூடியது அல்ல. அப்படியிருக்கையில், மும்பை போன்ற பரபரப்பான நகரத்தில் சிலர் அதிவேகமாக கார் ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
கடந்த நவம்பர் 9ஆம் தேதி இரவு வேளையில் மும்பையின் பந்த்ரா டோல் பிளாஸாவில் நடைபெற்றுள்ள இந்த விபத்தில், அதிவேகமாக வந்த கார் ஒன்று டோல் பிளாஸாவில் கட்டணம் செலுத்துவதற்காக வரிசையில் நின்றுக் கொண்டிருந்த கார்கள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த மோதலில், வரிசையாக நின்றுக் கொண்டிருந்த 6 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டுள்ளன.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சிலர் காயமடைந்து உள்ளனர். போலீஸார் நடத்திய விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய கார் வோர்லி என்ற பகுதியில் இருந்து பந்த்ராவை நோக்கி வந்துள்ளது. காயமடைந்தவர்களில் இருவர் உயிருக்கு போராடும் நிலையில் உள்ளதாக மும்பை டிசிபி கிருஷ்ணாகாந்த் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிசிபி உபாத்யாய் கூறுகையில், "நேற்று (நவம்பர் 9) இரவு 10.15 மணியளவில், ஒரு வாகனம் வொர்லியில் இருந்து பாந்த்ரா நோக்கி வடக்கே சென்று கொண்டிருந்தது. கடலுக்கு அருகே இருந்த சுங்கச்சாவடிக்கு 100மீ-க்கு முன்னால் அந்த வாகனம் ஒரு வாகனத்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் சுங்கச்சாவடியில் இருந்த மேலும் 2-3 வாகனங்கள் மீது அந்த வாகனம் மோதியது.

இந்த சம்பவத்தில் மொத்தம் 6 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த விபத்தில், இதுவரை மொத்தம் 9 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 3 பேர் உயிர் இறந்துள்ளனர், 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" என்றார்.
மற்றப்படி, எதன் காரணமாக விபத்தை ஏற்படுத்திய கார் அதிவேகமாக வந்தது? அந்த காரில் இருந்தவர்கள் யார்? அவர்கள் போதையில் இருந்தனரா என்பது குறித்த விபரங்கள் இல்லை. இதுகுறித்து பந்த்ரா நகர போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்து இருப்பது பந்த்ரா சுங்கச்சாவடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிவேக பயணம் எப்போதும் ஆபத்தானது என்பதற்கு மற்றுமொரு உதாரணம் இந்த நிகழ்வு ஆகும். இந்த விபத்தினால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


Click it and Unblock the Notifications









