என்னதாங்க நடக்குது அங்க... பெட்ரோல் வாங்க இலங்கை தேசிய கிரிக்கெட் வீரருக்கே இந்த நிலைமையா!!
இலங்கையில் பெட்ரோலுக்காக மக்களுடன் மக்களாக தேசிய அளவிலான கிரிக்கெட் வீரர் ஒருவரும் கால்கடுக்க 2 நாட்கள் பெட்ரோல் நிலையத்தில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. யார் அவர் என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியை பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். பொது மக்கள் நாட்டின் அதிபர் மாளிகையை முற்றுகையிடும் அளவிற்கு சென்றுள்ளது என்றால், அந்த நாட்டில் எத்தகைய சூழ்நிலை நிலவுகிறது என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.

அத்தியாவசிய விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டின் எதிரொலியாக மக்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அரிசி, கோதுமை போன்ற உணவு பொருட்களின் தட்டுப்பாடு ஒருபக்கம் நேரடியாக மக்களின் வயிற்றை பதம் பார்த்து வருகிறது என்றால், மின்வெட்டு, பெட்ரோல் & டீசல் போன்ற எரிபொருள் தட்டுப்பாடு மக்களை எங்கும் நகரவிடாமல் ஒடுக்கி வைத்துள்ளது.

அதிலிலும் குறிப்பாக, எரிபொருள் பற்றாக்குறை ஆனது நாடு முழுவதும் தலை விரித்தாடுகிறது. மக்களில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே பெட்ரோல் கிடைப்பதாகவும், அதற்கும் பல மணிநேரம், சில சமயங்களில் பல நாட்களுக்கு கூட வரிசையில் காத்திருக்க வேண்டிய பரிதாபமான சூழல் இலங்கையில் நிலவுவதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக்க கருணரத்னே பெட்ரோலுக்காக இரண்டு நாட்கள் காத்திருந்ததாக வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, "க்ளப் கிரிக்கெட் சீசன் இருப்பதால், நாங்கள் கொழும்பில் பயிற்சிக்காக வேறு வேறு இடங்களுக்கு செல்ல வேண்டும். ஆனால் நான் கடந்த இரண்டு நாட்களாக எரிபொருளுக்காக வரிசையில் நின்றேன்.
India is like a brother country & they are helping us a lot. I thank them so much. We have problems. They are supporting us when we are struggling. Thank you so much for that. Thank you for everything. We will get better and better: Sri Lankan cricketer Chamika Karunaratne to ANI pic.twitter.com/NDvXq1pj88
— ANI (ANI) July 16, 2022
ரூ.10,000க்கு பெட்ரோல் நிரப்பி கொண்டுள்ளேன். இது 2 அல்லது 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று நினைக்கிறேன்" என்பதாகும். மேலும் இந்த வீடியோவில், இந்தியா தங்களுக்கு சகோதர நாடு என்றும், அவர்கள் எங்களுக்கு நிறைய உதவிகள் செய்ததற்கு மனமார்ந்த நன்றிகள் என்றும் கருணரத்னே தெரிவித்துள்ளார். மக்கள் போராட்டத்தினால் அதிபர் மாளிகையை விட்டு தப்பியோடிய கோத்தபய ராஜபக்ச வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.

அதனை தொடர்ந்து தனது பதவியை கோத்தபய ராஜினாமா செய்த நிலையில், இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்று கொண்டுள்ளார். நாட்டின் புதிய அதிபருக்கான தேர்தல் வரும் ஜூலை 20ஆம் தேதி பலத்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் நடைபெற உள்ளதாக அங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால், போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவோரை கட்டுப்படுத்தும் முயற்சியாக இலங்கையில் அவசரகால பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியான சூழலுக்கு மத்தியில், இலங்கையின் அரசு நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பிரேஷன் நாட்டின் பெட்ரோல் & டீசல் சில்லறை விலைகளை லிட்டருக்கு தலா ரூ.20 குறைத்துள்ளது. இலங்கையில் பெட்ரோல் & டீசல் எரிபொருள்களின் தட்டுப்பாட்டால் அவற்றின் விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டு வந்தன. எந்த அளவிற்கு என்றால், கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து மட்டும் கிட்டத்தட்ட 5 முறை பெட்ரோல் & டீசலின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்பின்பு தற்போது ஒருவழியாக அவற்றின் சில்லறை விற்பனை விலைகள் தலா ரூ.20 குறைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அந்த நாட்டில் பெட்ரோல் & டீசல் எரிபொருள்களுக்கான தட்டுப்பாடு இன்னும் நிலவி வருவதை மறுப்பதற்கில்லை. ஆதலால் விலை குறைப்பு ஒருபக்கம் சற்று மகிழ்ச்சியை தந்தாலும், பற்றாக்குறை மக்களை இன்னமும் சிரமத்திற்குள்ளேயே வைத்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த பெட்ரோல் & டீசல் விலை குறைப்பை பெரும்பாலான மக்கள் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலுக்கான அரசியல் யுக்தியாகவே பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications








