ரோட்டுல யாரும் போட்டு போற மாதிரியே தெரியல! ஆனா 2023ல எவ்வளவு ஹெல்மெட் வித்துச்சு தெரியுமா?
ஸ்டீல் பேர்ட் ஹை-டெக் நிறுவனம் தற்போது உலகின் மிகப்பெரிய ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமாக மாறியுள்ளது. இந்நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டு மட்டும் மொத்தம் 80 லட்சம் ஹெல்மெட்டுகளை தயாரித்து மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் பல நூறு கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டூவீலரில் செல்லும்போது தற்போது இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஹெல்மெட் என்பது மிக கட்டாயமான ஒரு விஷயமாக மாறிவிடுகிறது. பல நாடுகள் ஹெல்மட்டை கட்டாயப்படுத்தி டூவீலர் வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்துதான் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இந்தியாவிலும் ஆங்காங்கே போலீசார் நின்று ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்டீல்பேர்ட் என்ற நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டு நிறுவனம் தயாரித்த ஹெல்மெட் குறித்த விரிவான அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனம் உலகின் மிகப்பெரிய ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமாக மாறியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு மட்டும் இந்நிறுவனம் மொத்தம் 77,99,273 ஹெல்மெட்டுகளை சர்வதேச அளவில் தயாரித்து உள்ளதாக அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் மிகப்பெரிய சாதனையாகும்.
இது மட்டுமல்ல நிறுவனம் இந்த விற்பனையை மாத வாரியாகவும், நாள் வாரியாகவும், நிமிடம் வாரியாகவும் நமக்கு வழங்கி உள்ளது. அதன்படி இந்நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 6,66,666 ஹெல்மெட்டைகளை விற்பனை செய்துள்ளது ஒவ்வொரு நாளும் 22,222 ஹெல்மெட்டுகளை விற்பனை செய்து ஒவ்வொரு மணி நேரத்தில் 925 ஹெல்மெட்டுகள் விற்பனையாகி உள்ளன. அதாவது நிமிடத்திற்கு 15 ஹெல்மெட்டுகளை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

ஸ்டீல்பேர்டு நிறுவனம் ஹெல்மெட்டுகளை மட்டும் விற்பனை செய்யவில்லை. பைக்குகளில் பொருத்தப்படும் சைடு பாக்ஸ்களையும் தயாரித்து விற்பனை செய்கிறது. இதன்படி நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் 3,44,865 சைடு பாக்ஸ்களை விற்பனை செய்துள்ளது. சைடு பாக்ஸ்கள் மற்றும் ஹெல்மெட்டுகள் சேர்ந்து மொத்தமாக 81,44,138 தயாரிப்புகள் இந்நிறுவனத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்டீல் பேர்ட் நிறுவனம் இவ்வளவு பெரிய வளர்ச்சியை சந்தித்ததற்கு முக்கிய மிக முக்கியமான காரணமாக கூறப்படுவது இந்நிறுவனத்தின் புதுமையான கண்டுபிடிப்புகள் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்யாமல் இருப்பது தரமான ஹெல்மெட்டுகளை தயாரிப்பது தான் காரணம் என அந்நிறுவனம் கூறுகிறது.

இந்த ஹெல்மெட் மற்றும் சைடுபாக்ஸ் விற்பனை மூலம் நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் 687 கோடி வருமானமாக ஈட்டி உள்ளது இது மிகப்பெரிய தொகையாகும் உலகில் வேறு எந்த ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமும் இந்த அளவிற்கு விற்பனையை செய்யவில்லை. தொடர்ந்து இந்நிறுவனம் வளர்ச்சி பாதையில் செல்வதற்கு தான் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தற்போது கணிக்கப்பட்டுள்ளது.
ஸ்டீல் பேர்ட் நிறுவனம் தரமான ஹெல்மெட்டுகளை தயாரித்து சிறப்பான விற்பனையை பெற்று வரும் நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு மொத்தம் 80 லட்சத்திற்கும் அதிகமான தயாரிப்புகள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த 2024-ம் ஆண்டு நிறுவனம் மொத்தம் ஒரு கோடி தயாரிப்புகளை தயாரித்து வெளியிட வேண்டும் என திட்டமிட்டுள்ளது.
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் சாலை விபத்துகளின் மரணம் அடையும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 3 லட்சம் பேர் ஹெல்மெட் இல்லாமல் மரணம் அடைவதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. இதனால் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்வதன் மூலம் இந்த விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் என அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்டீல் பேர்ட் நிறுவனம் தனது வியாபாரத்தை பெருக்கி உள்ளது. இந்தியர்கள் மத்தியில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டுள்ளது என்பதற்கு ஒரு சான்றாக இருக்கிறது. இந்நிறுவனம் அதிகமான தயாரிப்புகளை இந்தியாவில் தான் விற்பனை செய்து வருகிறது. இதனால் இந்தியாவில் நிறுவனத்திற்கு நல்ல பெயர் இருக்கிறது. தொடர்ந்து நிறுவனத்தின் விற்பனை அதிகமானால் விபத்துக்களை எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









